திருக்குறள்
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை. (55)
வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்.
----------------------------------------------------------------------------
கணம்கொண்டு சுற்றத்தார் கல்லென் றலறப்
பிணம்கொண்டு காட்டுய்ப்பார்க் கண்டும் - மணங்கொண்டீண்டு
உண்டுண்டுண் டென்னும் உணர்வினால் சாற்றுமே
டொண்டொண்டொ டென்னும் பறை. (25)
கூட்டமாகக் கூடி உறவினர் கூவி அழ, பிணத்தைத் தூக்கிக் கொண்டு சுடுகாட்டில் இடுபவரைப் பார்த்தும், திருமணம் செய்துகொண்டு, இவ்வுலகில் நிச்சயமாய் 'இன்பம் உண்டு, இன்பம் உண்டு' என்று மயங்குபவனுக்கு, 'டொண் டொண் டொண்' என ஒலிக்கும் சாப்பறையானது, இவ்வுலக வாழ்க்கையில் இத்தகைய இன்பம் இல்லை (யாக்கை நிலையில்லை) என்னும் உண்மையை உரைக்கும்!
----------------------------------------------------------------------------
அபிராமி அந்தாதி
11:
ஆனந்தமாய், என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்,
வான் அந்தமான வடிவு உடையாள், மறை நான்கினுக்கும்
தான் அந்தமான, சரணாரவிந்தம்-தவள நிறக்
கானம் தம் ஆடரங்கு ஆம் எம்பிரான் முடிக் கண்ணியதே.
அபிராமித்தாய் என் ஆனந்தமாகவும், என் அறிவாகவும் விளங்குகின்றாள். என் வாழ்வில் அமுதமாக
நிறைந்திருக்கின்றாள். அவள் ஆகாயத்தில் தொடங்கி மண், நீர், நெருப்பு, காற்று என்ற ஐம்பெரும்
வடிவுடையவள். வேதம் நான்கினுக்கும் தானே தொடக்கமாகவும், முடிவாகவும் இருப்பவள். இப்படிப்பட்ட
தாயின் திருவடித் தாமரைகள், திருவெண் காட்டில் திருநடனம் புரியும் எம்பிரான் ஈசன் முடிமேல்
தலைமாலையாகத் திகழ்வன.
--------------------------------------------------------------------------------
தேவாரம்
வெப்பொடு விரவியோர் வினைவரினும்
அப்பாவுன் அடியலால் அரற்றாதென்நா
ஒப்புடை ஒருவனை உருவழிய
அப்படி அழலெழ விழித்தவனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. (3.4.7)
அழகில் தனக்கு ஒப்புமையாகத் தன்னைத் தவிரப் பிறரைச் சொல்ல முடியாத மன்மதனை, அவனுடைய வடிவம் அழியு மாறு நெருப்புத் தோன்ற நெற்றிக் கண்ணைத் திறந்து விழித்தவனே! திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே! கொடிய வினையினால் துன்பம் நெருப்புப் போல வந்து தாக்கினாலும், அனைத் துயிர்கட்கும் தந்தையான உன் திருவடிகளைப் போற்றுதலல்லாமல் என் நா வேறொன்றையும் நவிலாது. இப்படிப்பட்ட என்னை நீ ஆட்கொள்ளும்முறை இதுவோ ? தேவையான பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா ?
--------------------------------------------------------------------------------
திருமந்திரம்
உடம்பொ டுயிரிடை விட்டோடும் போது
அடும்பரி சொன்றில்லை அண்ணலை எண்ணும்
விடும்பரி சாய்நின்ற மெய்நமன் தூதர்
சுடும்பரி சத்தையுஞ் சூழகி லாரே . (10.6.9)
உடம்பொடு கூடிநின்ற உயிர், அவற்றிடையே நின்ற தொடர்பை விடுத்து நீங்கும்பொழுது, அதனோடு உடன் செல்லும் பொருள் ஒன்றேனும் இல்லை. அவ்வுயிரை விட்டுத் தனித்து நிற்கும் உடம்பு பின் சுட்டெரிக்கப்படும் பொருளாய்விடும், யம தூதர் அதனையும் உடன்கொண்டுபோக நினைத்தல் இல்லையாதலால். ஆகவே, எல்லாவற்றையும் விடுத்துச் சிவபெருமானை நினையுங்கள்.
--------------------------------------------------------------------------------
( தொடரும் )
copy right to the respective web sites.
No comments:
Post a Comment