Tuesday, June 26, 2012

அரிச்சந்திரன் - 6

                                    விஸ்வாமித்ரர் அரசை அபகரித்தல்

விஸ்வாமித்ரர் வந்தார்; தன் கூடவே
வஞ்சியர் இருவரையும் அழைத்து வந்தார்;
பொய்க் கோபத்தோடு
புரவலனிடம் பேசினார்;
'அடேய் அரிச்சந்திரா,
அடுக்குமா நீ செய்த காரியம் ?
அரசனுக்கு இது தகுமா ?
அழகியர் இருவரையும் ஆட வைத்து, பின்
அவர் யாசிப்பதை தர மறுப்பது நியாயமா ? தர்மமா ?
அணுவளவும் வழுவா செங்கோல் ஆட்சி இதுவா ?

இவர்களை அவமதிப்பது
இவர்கள் கற்ற கலையை அவமதிப்பதாகும்;
இங்ஙனம் இவர்கள் கற்ற கலையைப்
பயிற்றுவித்த என்னை அவமதிப்பதாகும்;
இது நியாயமாகும் ?'

அடுக்கடுக்காய்க் கேள்விக்கணை வீசினார் முனிவர்;
அவர் முடிக்கும் மட்டும் காத்திருந்த அரசன்,
அடுத்து தன் நியாயத்தை ஓதினான்;
அப்பெண்டீர் கேட்டது அதர்மம் என்றான்;
அவ்வழியில் தான் செல்வது அடாது என்றான்;
அவரையே தர்மப்படி ஒரு வழி சொல்லப் பணிந்தான்;
அங்ஙனம் அவர் சொல்வதை
அரசன் தான் செய்வதாய் ஒப்பினான்;

'அரிச்சந்திரா,
அரசனென்ற ஆணவம் உன்னை
ஆட்டிவிக்கிறது;
அதை நான் போக்குகிறேன்;
அதற்கு உன் அரசை
அடியேனுக்கு தாரை வார்த்துக் கொடு'

'அவ்வாறே தர
ஆவலாய் இருக்கிறேன்
அருள்கூர்ந்து பெற்றுக்கொள்ளவும்'

அரசன் சொன்னதைக் கேட்டு
அந்தணர்
ஆச்சரியம் அடைந்தாலும்
அதை வெளிக்காட்டாது,
'அந்தி வேளை இது,
அடுத்த நாள் காலை
அரண்மனை வருகிறேன்,
அயோத்தியை என்னிடம் தந்துவிட்டு
அப்படியே நீ சென்று விடு.'

ஆணையிட்டார்,
அரசன் சம்மதித்தான்;

நாட்டை ஆளப்போகும் முனிவன்
காட்டு வழி சென்றான்;
காட்டில் வாழப்போகும் அரசன்
நாட்டு வழி சென்றான்;

                                                                        ( தொடரும் )

No comments:

Post a Comment