Thursday, June 28, 2012

அரிச்சந்திரன் - 7

அடுத்த நாள் காலை,
அயோத்தி அரண்மனை,
அரிச்சந்திரன் வந்தான்,
ஏனைய அமைச்சர்களும் வந்தனர்,
விஸ்வாமித்திரர் வந்தார்,
அவர்தம் சீடர்களும் வந்தனர்,
நாட்டை தாரை வார்த்துக் கொடுக்கத் தயாரானான்
அரிச்சந்திரன்;

'அவசரப்பட்டு முடிவெடுக்காதே,
அப்புறம் சங்கடப்படாதே'
விஸ்வாமித்திரர் சொன்னார்;

'முனிவரே, சொன்ன சொல் மாற மாட்டேன்;
நாடு மக்கள் அரண்மனை அதைச் சேர்ந்த சொத்து செல்வம்
பொன் பொருள் எல்லாம் இனி உமக்குச் சொந்தம்,
இவற்றோடு எமக்கினி
இல்லை பந்தம்';

'நீ உன் மனைவி மகன் எல்லோரும்
அணிந்திருக்கு ஆடையையும்
அவிழ்த்து விட்டு,
துறவாடை தரித்து
தூரச் செல்லுங்கள்'

'அப்படியே செய்கிறேன், ஆணைப்படி
உமது சொல்படி';

தன் குடும்பத்தாரோடு
தனியே நடக்கத் தொடங்கினான்
தலைவன்;

'அரிச்சந்திரா நில்'
அழைத்தார் முனிவர்;
'யாகம் செய்ய
எனக்குத் தருவதாய் வாக்களித்தப்
பொருள் எங்கே ? - அதைத்
தந்து விட்டுச் செல்'

'சுவாமி,
அப்பொருள் மிக பத்திரமாய்
அரண்மனைக் கருவூலத்தில் உள்ளது;
எடுத்து வரவா இப்பொழுது ?'

'யாருடைய கருவூலத்தில்?'

'என் ... மன்னிக்கவும், தங்களுடைய கருவூலத்தில்'

'என் கருவூலம் பணத்தை
எனக்கு தருவது தான் தானமா ?
இது தான் நீ கற்ற தர்மமா ?'

'....'

'எனக்குத் தருவதாய் சொன்னப் பொருளை
எப்படித் தரப்போகிறாய் ?
எப்பொழுது தரப்போகிறாய் ?'

'சுவாமி, எனக்குக் கொஞ்சம் தவணை தர வேண்டும்,
தங்கள் பொருளைத் தந்து விடுகிறேன்,
தயை காட்ட வேண்டும்'

'ம்ம்ம்ம் ... சரி என் சீடனை உன்னோடு அழைத்துச் செல்,
உனக்கு 15 நாள் தவணை,
அதற்குள் எனது பொருளை ஒப்படைத்துவிடு,
என் பொருள் என்னிடம் வரும் வரை,
எனது சீடன் உன்னுடன் இருப்பான் தவறில்லை,
அவனுக்கு ஒரு குறையும் நேராது காப்பது உன் கடமை'

'அப்படியே ஆகட்டும்'

'அரிச்சந்திரா,
ஒரு சொல் மாற்றிச் சொல்,
பொருள் தருவதாய் நான் சொல்லவில்லை,
என்று மட்டும் சொல்,
மாறிடும் உன் நிலைமை,
சம்மதமா சொல், உன்
சங்கடம் மாற்றுவேன் ஒரு பொழுதில்'

'சுவாமி, சத்தியம் தருமம் வீழ வாழ மாட்டேன்,
சொன்ன சொல் தவற மாட்டேன்'

'சரி, நீ செல்க,
15 நாளில் பொருள் திருப்பித் தருக,
என் சீடனை அதுவரை உன்னோடு கொள்க,
ஆசி'

அரிச்சந்திரன் அரண்மனை விட்டுச் செல்கிறான்,
அவனைத் தொடர்ந்து அவன் குடும்பம்,
அவர்களைத் தொடர்ந்து விஸ்வாமித்திரரின் சீடன்,
அதன் பின் அமைச்சர்கள், காவலாட்கள்,
அவர்களைத் தொடர்ந்து
அயோத்தி நகரத்து மக்கள்,
கலங்கியக் கண்ணோடு,
கனத்த நெஞ்சோடு;

                                                                        ( தொடரும் )

No comments:

Post a Comment