Thursday, November 3, 2011

உத்தவ கீதை - 1



பரந்தாமன் ஸ்ரீ கிருஷ்ணன்
பூலோகத்தில் தன்
பணியெல்லாம் முடிந்த பின்
வைகுந்தம் திரும்புமுன் மந்திரி
உத்தவருக்கு
உபதேசித்ததே இந்த
உத்தவ கீதை;


பிரம்மனும் மற்ற தேவர்களும்
பரந்தாமனைப் பார்க்க
துவாரகை வந்தார்கள்;
வணங்கினார்கள்;
'கிருஷ்ணா,
கோவிந்தா,
இன்னல் செய்தவர்களையெல்லாம்
இல்லாது செய்தவனே,
மக்கள் துயர் தீர்த்த
மாதவா,
வையம் விட்டு
வைகுந்தம் வா;
எங்களோடு வர வேண்டும் தேவ லோகம்,
எங்கட்கும் வேண்டும் உங்களோடு இருக்கும் யோகம்;'
என்றனர்;
'யாவரையும் படைக்கும் பிரம்மா தேவா,
யாதவர்களின் அழிவு
ஆரம்பமாகிவிட்டது, அறியாயா ?
ஆணவத்தால்
அழியப் போகின்றனர் யாதவர்கள்;
அவர்கள் அழிந்தபின்
அடியேன் வருவேன் மேலோகம்,
அதுவரை இருப்பேன் பூலோகம்' என்றுரைத்தான்;
பிரம்மனையும் மற்றவர்களையும்
அனுப்பி வைத்தான்;
கண்ணன் பேசுவதைக்
கேட்ட உத்தமர்
கலவரமடைந்தார்;
கண் கலங்கினார்;
செய்வதென்னவென்று தெரியாது
திகைத்து நின்றார்;

                                                                        ( கீதை தொடரும் )

No comments:

Post a Comment