Thursday, October 13, 2011

பக்த பிரகலாதன் - 10

                                    நரசிம்மம்

அரியை நம்பும்
அவனை என் வாளால்
அரிவேன் என்றான்;
எடுத்தான் வாளை;

'எங்கே உன் அரி,
அதை இப்பொழுதே அறிவி,
எனக்குத் தெரிவி'
'அப்பா, அரி எங்கும் இருக்கிறான்'
'எங்கும் இருக்கிறான் எனில்
என் கண்ணுக்கு தெரியவில்லையே'
'எனக்குத் தெரிகிறானே அப்பா'
'எனக்குத் தெரியவில்லையடா, அவன் இல்லையடா'
'எனக்குத் தெரிகிறானே அப்பா'
'இங்கு இருக்கிறானா ?'
'ஆம்'
'இந்தத் தூணில் ?'
'அவன் தூணிலும் இருக்கிறான், துரும்பிலும் இருக்கிறான்'
'பிரகலாதா, இப்பொழுதே இந்தத் தூணிலிருந்து
அந்த உன் அவன் வெளிப்படாவிட்டால்
உடனே உன் தலை துண்டிக்கப்படும்
'

ஆக்ரோஷமாய்க் கத்தினான்
ஆத்திரம் கொண்டுதைத்தான் அத் தூணை;
வாள் எடுத்து வெட்டினான்;

அண்டமே அதிரும்படி ஒரு சத்தம்;
அரண்மனையிலிருந்தோர்
அனைவரும்
அதிர்ந்து சிலையாகும்படி எழுந்த
அந்த ஓசையில்,
தூணை இரண்டாகப் பிளந்து,அதன்
இடையிலிருந்து எழுந்தது
நரசிம்மம்;
சிம்மத் தலை,
மனித உடல்,
தங்கம் போன்று ஜொலிக்கும் கண்கள்,
நேர் நேராய் நிற்கும் முடி,
கூர்மையான பற்கள்,
நீண்ட நாக்கு,
குகை போன்று வாய்,
மலை போன்று உடல்,
எண்ணற்ற கைகள்,
ரோமம் அடர்ந்து வளர்ந்த உடல்;

கண்டோர் கலங்கினர்;
எதிர்த்து போரிட
எவருக்கும் துணிவில்லாது மிரண்டனர்;
தனித் தனியே தள்ளி நின்றனர்;




இரண்யகசிபு சுதாரித்துக்கொண்டான்;
'ஒஹோ !
இவன் தான் மகா விஷ்ணுவா ? என்
இளையவனைக் கொன்றவனா ?
இதோ இப்பொழுதே இவனை கொல்கிறேன்;
இவனைக் கொன்றால் தேவர்களுக்குதவ
வேறு யாரும் இல்லாது போகும், அவர்கள் நிலைமை
வேர் இல்லா மரம் போல் ஆகும்,
இப்பொழுதே என் வாளால்
இவனைக் கொல்கிறேன்' என்று தன்
இடைவாளோடு பாய்ந்தான்
இரண்யகசிபு;

என்னதான் வலிமை
இரண்யகசிபுவிற்கு இருந்தாலும்
நரசிம்மம் முன் அவன்
பாறாங்கல்லை நோக்கிப்
பாய்ந்துவரும்
பறவை போலானான்;
பாம்பைக் கவ்விப் பிடிக்கும்
கருடன் போல்,
அரக்கன்
அகப்பட்டான் நரசிம்மனிடம்;

பலத்த ஓசையுடன்
நரசிம்மர் இரண்யகசிபுவைத் தூக்கினார்;
வாசலில் வந்தமர்ந்தார்;
மடியில் இரண்யகசிபுவை வைத்துக்கொண்டார்;
தன் விரல் நகத்தாலே அவன் உடலைக் கிழித்தார்;
குடலை மாலையாக மாட்டிக்கொண்டார்;

அரண்மனைக் காவலர்கள்
அத்தனையும் கண்டும் ஏதும் செய்ய முடியாது
அதிர்ச்சியில் உறைந்திருந்தனர்;

எதிரியைக் கொன்று அவன்
அரியாசனத்தில்
அமர்ந்தார், சுற்றும் முற்றும் பார்த்தார்;
தேவர்கள் பூ மாறிப் பொழிந்து
வாழ்த்தி வணங்கி நின்றனர்;

பிரகலாதன்
பணிந்தான் நரசிம்மரின்
பாதத்தில்;
பரவசமடைந்தார் நரசிம்மர்;

வேண்டுவதென்ன கேள் என்றார் நரசிம்மர்;
உன் சிந்தனை தவிர
வேறேதும் என் நெஞ்சில் நுழையாதிருக்க வேண்டும்
என்றான் பிரகலாதன்;
நரசிம்மர் மனமகிழ்ந்தார்;

உன் புகழை
உணர்ந்து படிப்போர் அனைவருக்கும்
இந்த நரசிம்மமூர்த்தியின்
அருள் கிட்டும் என
ஆசிர்வதித்தார்;

நாராயணன் நாமம்
நாவில் கொள்வோர் வாழ்வில்
நலமே இன்றும்;

வாழ்க வளமுடன் !

                                                                        ( பக்தி முடிந்தது )

No comments:

Post a Comment