Tuesday, October 11, 2011

பக்த பிரகலாதன் - 8

மீண்டும் பள்ளிக்கு வந்தான்
பிரகலாதன்,
பண்புகள் நிறைந்த
பாலகன், நாடு
ஆள்பவனை
ஆட்டிவைத்தவன்;
அரசனுக்கு
ஆகாத வார்த்தையை
அச்சமின்றிச் சொன்னவன்;

அரச தர்மம் பற்றியும்,
அரசாலும் முறை பற்றியும், எதிரிகளை
அடையாளம் காணும் முறை பற்றியும் இன்னும் பல
அவன் ஆசிரியர்கள் இம்முறை
அவனுக்குக் கற்பித்தனர்;
ஆனால் பிரகலாதனுக்கு இதிலெல்லாம்
ஆர்வம் இல்லை; இருந்தாலும்
அவன் அதை வெளிகாட்டிக்கொள்ளாது,
ஏன்
எதற்கு
என்று
ஏதும் கேட்காது,
எல்லாம் நாராயணன் சித்தம்
என
எண்ணிக் கிடந்தான்;

இவ்வாறிருக்கையில் ஒருநாள்
ஆசிரியர்கள் இல்லாத பொழுது மாணவர்கள்
அனைவரும் விளையாடிக்கொண்டிருக்கையில்
பிரகலாதன் வந்தான்;
பேசத் தொடங்கினான்;
'நண்பர்களே, மனித வாழ்க்கை மகத்துவமானது;
நமக்குக் கிடைத்த இந்த வாழ்வை வீணடிக்காது
நாராயணன் நாமம் ஓதி வாழ்வதே உசிதமானது;
அவனை எண்ணாது வாழ்வது அவலமானது'.

'பிரகலாதா, எங்கள்
தலைவா,
நாராயணன் பற்றியெல்லாம்
நம் ஆசிரியர்கள்
நா திறந்து பேசியதில்லையே, இதுபற்றி
நீ அறிந்தது எங்கனம் ?
அதை அங்ஙனமே
எங்கட்குச் சொல்லவேணும் இக்கணம்' எனக் கேட்க




     

நாராயணன் பெருமைகளை
நாரதர் தனக்கு
நவின்றதை எல்லாம்
நவின்றான் பிரகலாதன் தன்
நண்பர்களுக்கு;

அரியே சரணம்;
அரியே முதல்வன்;
அரியே எல்லாம்;
அரியை அறிவதே நாம்
அறியவேண்டியவற்றுள்
அரிய ஒன்று; இதை
அறிவீர் எல்லோரும்;
அறியாதார்
அறிவிலர்;

பகவானை அடைய
பாகவத தர்மமே சிறந்த வழி;
அவனே எல்லாம் என்றறிதல்
அவனை முழு மனதுடன் நம்பி இருத்தல்,
அவனையே எந்நேரமும் எண்ணி இருத்தல்,
அவன் இல்லாது எதுமில்லை என்றுணர்தல்,
அவனை அடைய இவையே வழிகள்;

எடுத்துரைத்தான், ஏற்றுக்கொண்டனர்;
கற்பித்தான், கற்றுக்கொண்டனர்;

பிரகலாதன்
பாடத் தொடங்கினான்; அவன்
பள்ளித் தோழர்கள் அவனைத் தொடர்ந்து
பாடினர்;


          வனமாலி ராதா ரமணா
          கிரிதாணி கோவிந்தா
          நீலமேக சுந்தரா
          நாராயணா கோவிந்தா
          நந்த நந்த
          ராகவேந்திர
          நாராயணா கோவிந்தா
          நாராயண
          நாராயண
          நாராயண
                    (www.youtube.com/watch?v=Vb-FIwiKxIQ)



அங்கே நடந்தேறிய
உரையாடல்களை எல்லாம்
கேட்டனர், அப்படியே
உரைத்தனர் அரசனிடம்,
பிரகலாதனின் ஆசிரியர்கள்;

மன்னனுக்கு ஆத்திரம் வந்தது;
மகனுக்கு அழைப்பு வந்தது;

                                                                        ( பக்தி தொடரும் )

2 comments:

  1. மிக அருமை. எளிமையான தமிழ்
    maluven.blog.com

    ReplyDelete
  2. வருகை புரிந்தமைக்கும்
    வாழ்த்துரைக்கும்
    நன்றி maluven அவர்களே !

    ReplyDelete