Friday, October 7, 2011

பக்த பிரகலாதன் - 4

                                    இரண்யகசிபு வரம்

தம்பியின் மரணத்திற்கு
காரணம்
விஷ்ணுவின் விவேகம்;

அந்த விவேகத்திற்கு
ஈடு கொடுக்க
வேண்டும் வேகம்;

உணர்ந்து கொண்டான் அண்ணன்;


வேகம் வேண்டி
வேள்வி செய்தான்;
மந்தார
மலை சென்றான்;
வரம் பெற
தவம் செய்தான்;

பிரம்மனைப் பணிந்தான்;
விஷ்ணுவைப் பகையென எண்ணினான்;
அவன் பலியே தன் பணியெனக் கருதினான்;

    



கட்டை விரலைக்
கீழ் பதித்து
ஒரு காலில் நின்று கொண்டான்;
இரு கையையும் தலை மேல் கூப்பினான்;
முக்காலமும் முகத்தை பிரமலோகம் நோக்கி
நான்முகனை எண்ணித் தவம் புரிந்தான்;
ஐம்புலனும் அடக்கி அவன் புரிந்த தவம்
ஆறு போல் அனலைப் பொழிந்தது தேவலோகத்தில்;
ஏழேழு ஜென்மத்திலும் எவரும் செய்யமுடியாத தவம்
எட்டியது பிரம்மன் செவிக்கு;
கிட்டியது கெட்ட நேரம் புவிக்கு;



     

எதிர் வந்து நின்றான்;
என்ன வேண்டுமென்று கேட்டான்;
சாவதிருக்க வரம் கேட்டான்;
சாத்தியமில்லை; மாற்றி யோசி என்றான்
நன்றாய் யோசித்து வரம் தர வந்தவன்;

அப்படியெனில்
மனிதனோ, மிருகமோ
உன்னால் படைக்கப்பட்டது எதனாலும்
எனக்கு அழிவு ஏற்படக் கூடாது;
வீட்டின் உள்ளே, வெளியே
எனக்கு அழிவு ஏற்படக் கூடாது;
காலையில் காரிருளில்
எனக்கு அழிவு ஏற்படக் கூடாது;
எந்த ஆயுதத்தாலும்
எனக்கு அழிவு ஏற்படக் கூடாது;
தரையில் நான் சாகக் கூடாது,
ஆகாயத்திலும் அதுபோல்
எனக்கு அழிவு கூடாது;

தவம் செய்தேன் உனக்கு
வரம் தா எனக்கு;
கேட்டான் அரக்கன்;
கொடுத்தான் பிரம்மன்;

கொடியவன் மகிழ்ந்தான்;
கொடுத்தவன் மறைந்தான்;

                                                                        ( பக்தி தொடரும் )

No comments:

Post a Comment