Wednesday, December 7, 2011

வள்ளித் திருமணம் - 4

வேலவன் விரைந்தழைத்தான்
நாரதனை,
கலகப் பிரியனை, தன்
காதல் சொல்லி வள்ளியைக்
கவர எண்ணி,
தூது போக
துணைக்கழைத்தான்
தம்புராவை மீட்டித்
திரிபவனை;

நாரதர் வந்தார்;
தினைப்புனம் நோக்கிச் செல்ல,
வள்ளியைக் காண, கந்தனின் காதல் சொல்லக்
கிளம்பினார் கலகப் பிரியர்;

                                    நாரதரும் வள்ளியும்

இனிய என் யாழிசையைவிட
இனிமையாகப் பாடும்
இக் குரல் யாருடையது ?
இவள் யார் ? என்று எண்ணியவரே
வள்ளி இருக்கும் தினைப்புனம் நோக்கி
வந்தார் நாரதர்;
தன் அறிவையெல்லாம்
தரணியில் வாழ்வோர்க்குத்
தந்துதவும் பிரம்மனின் புத்திரர்;

'முனியே வருக,
சுவாமி வருக,
தாங்கள் இங்கு எழுந்தருள
நாங்கள் என்ன தவம் செய்தோம்,
வருக,
வந்திங்கு அமர்க' என்று
வரவேற்றாள் வள்ளி நாரதரை;

'பெண்ணே நீ அழகு,
மான் போல் நீ துள்ளிக் குதித்து ஓடுவது அழகு,
பறவைகளைச் சோ...சோ... என நீ துரத்துவது அழகு,
கானகத்திற்கு நீ காவல் புரிவது
அழகோ அழகு;
பிள்ளாய், உன்
பூர்வீகக் கதை
கொஞ்சம் சொல்லாய்';

வினவினார் நாரதர்;
விளக்கம் தந்தாள் நம்பிராஜன் மகள்;

'குரு முனியே,
குறவர் குலத்தில் பிறந்த
குழந்தை நான்,
வள்ளி என்றழைப்பர் எனை;
தந்தை நம்பிராஜன்,
தாய் மோகினி,
ஊர் வழக்கப்படி
வயல் காவல் காக்க
வந்தேன்;
வந்ததால் தங்களைக் கண்டேன்;
வணங்கி நிற்கிறேன்,
வாழ்த்துங்கள்';

கலக்கம் செய்யத்
தக்கத் தருணம்
பார்த்து நின்றார் நாரதர்;

                                                                        ( இன்னும் வருவாள் )

1 comment: