Sunday, December 18, 2011

அமர்நீதி நாயனார் - 4

புத்தாடை பொன்னாடைகளால்
ஈடாகாத் தட்டில் தன்
பொன் பொருள் செல்வங்களை எல்லாம்
இட அனுமதி வேண்டி நின்றார் அமர்நீதியார்;

மனதுள் புன்னகைத்து
மறுப்பேதும் சொல்லாது
'எம்மாடைக்கு ஈடாய்
உம்சொத்து எதுவேண்டுமானாலும்
இடுவாய்,
ஈடானதும் அவை அத்தனையும்
எமக்குத் தருவாய்'
என்றார் அடியார்;

இரத்தினம் வந்தது,
பொன் வந்தது,
வெள்ளி, வெண்கலம் இன்னும் பல உலோகங்கள் வந்தது,
எடுத்து வந்ததெல்லாம்
ஏறி இருக்கும் தட்டில் இட, இட,
எந்த ஒரு அசைவும் இன்றி அந்தத் தராசு கிடந்தது;

இதற்குள் ஊர் மக்கள் ஒன்று கூடினர்,
நடக்கும் நாடகத்தைக் கண்டு அதிசயித்தனர்;

‘என்னுடையதெல்லாம்
எடுத்து வைத்து விட்டேன்;
எஞ்சி இருப்பது
என் மனைவி, மகன் மற்றும் நான்;
எங்களையும் இத்தட்டிலிட
அனுமதி வேண்டுகிறேன்’
அமர்நீதியார் கேட்டார்.
சிவனடியார் சம்மதித்தார்;

     இழைத்த அன்பினில் இறை திருநீற்று மெய்யடிமை
     பிழைத்திலோமெனிற் பெருந்துலை நேர் நிற்க வென்று
     மழைத்தடம் பொழில் திருநல்லூர் இறைவரை வணங்கித்
     தழைத்த அஞ்செழுத்தோதினார் ஏறினார் தட்டில்

'அன்போடு இதுகாறும் திருநல்லூர் இறைவ,
உம்மைத் தொழுதேன்;
திருநீறு அணிந்தேன்;
அடியவற்குதவி செய்தேன்;
எனக்குத் தெரிந்த வரை
எந்த ஒரு தவறும் செய்தேனில்லை;
இவையாவும் உண்மையெனில், இறைவா,
நாங்கள் ஏறி நிற்க இத் தராசு
ஈடாக வேண்டும், நமசிவாய' எனச் சொல்லி
தராசில் ஏறினார்
தன் மனைவி மகனோடு;

அக்கணமே தராசின் தட்டுக்கள்
இணையாக நிற்க,
இதுவரை அங்கு சிவனடியாரை நின்றிருந்தவர்
மறைந்தார்;
பார்வதியோடு பரமேஸ்வரன் தன்
பக்தருக்குக் காட்சி தந்தார்;
தேவர்கள் பூ மாறிப் பொழிந்தனர்;

அந்தத் தராசே
அமர்நீதியாருக்கும்
அவர் குடும்பத்தாருக்கும்
விமானமாகி இறைவன் திருவடியை அடைய,
சிவபதம் அருளி இறைவன் தன் பக்தனை
ஆட்கொண்டார்;

                              ஓம் நமசிவாய

No comments:

Post a Comment