Tuesday, March 31, 2020

கம்பராமாயணம் 81


6023.
‘குறித்த நாள் இகந்தன குன்ற, தென் திசை
வெறிக் கருங்குழலியை நாடல் மேயினார்
மறித்து இவண் வந்திலர்; மாண்டுளார்கொலோ ?
பிறித்து அவர்க்கு உற்றுளது என்னை ?
   பெற்றியோய் !’

குறிப்பிட்டுக் கூறிய நாட்கள் நகர்ந்தன, 
தெற்குத் திசையில், நறு மணம் வீசும்
கரிய கூந்தலை உடைய சீதையை
தேடிச் சென்றவர் இன்னும் திரும்பவில்லை;
இறந்துவிட்டார்களோ ? வேறு ஏதும்
துன்பம் நேர்ந்திருக்குமோ அவர்கட்கு;
நற்பண்புடைய சுக்ரீவ !'
என்று தன் மனத்துயரைத்
தெரிவித்தான் இராமன்.



6028.
எய்தினன்அனுமனும்; எய்தி, 
   ஏந்தல் தன்
மொய் கழல்தொழுகிலன்; 
   முளரி நீங்கிய
தையலை நோக்கிய தலையன், 
   கையினன்,
வையகம் தழீஇநெடிது இறைஞ்சி, 
   வாழ்த்தினான்.

இராமன் இருக்கும் இடத்தை அனுமன்  
வந்தடைந்தான்;
வந்ததும் அவன் திருவடிகளை 
வணங்க மறந்தான்.
தாமரை மலரை விட்டகன்று 
பூமியில் அவதரித்த பிராட்டியை, 
அவள் இருக்கும் தென் திசையை 
நோக்கி, தலைமேல் கைகளைக் குவித்து 
நிலத்தில் விழுந்து வணங்கி, வாழ்த்தினான்.




6031.
‘கண்டனென், கற்பினுக்கு அணியை, 
   கண்களால்,
தெண் திரை அலைகடல் இலங்கைத் 
   தென் நகர்;
அண்டர் நாயக ! இனி, துறத்தி, 
   ஐயமும்
பண்டு உள துயரும்’ என்று, அனுமன் 
   பன்னுவான்.


'பார்த்தேன், 
கற்பிற்கு ஒரு ஆபரணம் போன்ற பிராட்டியை
என் கண்களாலேயே பார்த்தேன், 
அலைகளோடு கூடிய கடல் சூழ்ந்த இலங்கையில் 
தெற்கில் உள்ள நகரத்தில்,
சீதையைப் பார்த்தேன்.
தேவர்களுக்குத் தலைவனே! இனிமேல், 
சந்தேகத்தையும், துன்பங்களையும் நீக்கிக்கொள்'
என்று அனுமன் நடந்தவைகளைத் 
தொகுத்துக் கூறத்தொடங்கினான்.



6036.
‘கண்ணினும்உளை நீ; தையல் 
   கருத்தினும் உளை நீ; வாயின்
எண்ணினும் உளை நீ; கொங்கை 
   இணைக் குவை தன்னின் ஓவாது
அண்ணல் வெங்காமன் எய்த அலர் 
   அம்பு தொளைத்த ஆறாப் 
புண்ணினும் உளை நீ; நின்னைப் 
   பிரிந்தமை பொருந்திற்று ஆமோ ?


நீ, பிராட்டியின் கண்களில் இருக்கின்றாய்,
மனத்திலும் எண்ணத்திலும் இருக்கின்றாய்,
அவள் வாயினின்றும் தோன்றும் 
ஒவ்வொரு சொற்களிலும் நீ இருக்கின்றாய்;
இரண்டு தனங்களின் முகட்டிலும், 
மன்மதன் ஏவிய மலரம்புகள் ஊடுருவிய 
ஆறாத புண்களிலும் நீ தங்கியிருக்கின்றாய்; 
உன்னைப் பிரிந்திருக்கின்றாள் என்பது 
பொருத்தமான செய்தி ஆகுமோ ? 


6052.
‘வைத்தபின், துகிலின் வைத்த மா 
   மணிக்கு அரசை வாங்கி,
கைத்தலத்து இனிதின் ஈந்தாள்; 
   தாமரைக் கண்கள் ஆர,
வித்தக ! காண்டி!’ என்று, கொடுத்தனன்
   வேத நல் நூல்
உய்த்துள காலம்எல்லாம் புகழொடும் 
   ஒக்க நிற்பான்.

(சீதை சொன்னவைகளை அனுமன் சொன்னபின்)
'தன் ஆடையில் முடித்து வைத்திருந்த 
உயர்ந்த சூடாமணியை அவிழ்த்து எடுத்தாள், 
அன்போடு எனது கையில் கொடுத்தாள், 
மலர் போன்றுன் கண்கள் மகிழ பார்த்தருளுக' 
என்று கூறி, இராமபிரானிடம் கொடுத்தான்,
வேதங்களும் சாத்திர நூல்களும் சொல்லும் 
காலக் கணக்குகள் உள்ள மட்டும் 
புகழோடு கூடியிருக்கும் அனுமான்.



6056.
‘எழுக, வெம் படைகள் !’ என்றான்; 
   ‘ஏ’ எனும் அளவில், எங்கும்
முழு முரசு எற்றி, கொற்ற வள்ளுவர் 
   முடுக்க, முந்தி,
பொழி திரை அன்ன வேலை புடை 
   பரந்தென்னப் பொங்கி,
வழுவல் இல் வெள்ளத் தானை, 
   தென் திசை வளர்ந்தது அன்றே !

'சேனைகள் யாவும் உடனே புறப்படுக' 
என்று சுக்கிரீவன் கட்டளையிட்டான்; 
பெரிய முரசுகளை அடிக்க உத்தரவிட்டான். 
எல்லா இடத்திலும்  உள்ள சேனைகளை 
விரைவுபடுத்தினான்.
பாய்கின்ற அலைகளை உடைய அந்தக் கடல்
தன் நிலையை மாற்றி வெளியே பரவியது போல்,
எதற்கும் பின்னடையாத வானரச் சேனைகள் 
எழுந்து தெற்குத்திக்கை நோக்கிப் பரவலாயிற்று.

சுந்தர காண்டம் முற்றிற்று 

( தொடரும் )

No comments:

Post a Comment