Wednesday, April 1, 2020

கம்பராமாயணம் 82


யுத்த காண்டம் 

இராவணன் மந்திரப்படலம்


6071.
பூ வரும் அயனொடும் புகுந்து, 'பொன் நகர்,
மூவகை உலகினும் அழகு முற்றுற,
ஏவு' என இயற்றினன் கணத்தின் என்பரால்
தேவரும் மருள்கொள, தெய்வத் தச்சனே.

(அனுமான் இலங்கை மேல் தீயிட்ட பின்)
இராவணன், பிரமனோடும் இலங்கை
நகருள் நுழைந்தான்.
மூன்று உலகிலும் உள்ள நகரங்களை விட
சிறந்த அழகு பொருந்துமாறு அமைய
கட்டளை இடுவாயாக என்று கூறினான்.
பிரம்மனும் தேவஉலகின்  தச்சன் மயனை,
தேவர்களும் பார்த்து  மயங்கும்படி,
நொடிப் பொழுதுக்குள்
இலங்கையைச் செப்பனிடக் கோரினான்.



6082.
'சுட்டது குரங்கு; எரி சூறையாடிடக்
கெட்டது, கொடி நகர்; கிளையும் நண்பரும்
பட்டனர்; பரிபவம் பரந்தது, எங்கணும்;
இட்டது இவ் அரியணை இருந்தது, என் உடல்.

ஒரு குரங்கு வைத்தது நெருப்பு,
அந்நெருப்பில் கொடிகள் பறக்கும் நகரம் 
நாசமானது;
கூடவே உறவினர்களும் நண்பர்களும் 
இறக்க நேரிட்டது, 
அவமானமே எஞ்சி நிற்குது,
இந்த சிம்மாசனத்தில் என் உடல் மட்டும் 
இருக்குது'
என்று இராவணன் சபையில் உரை நிகழ்த்தினான்.




6119.
'ஓவியம் அமைந்த நகர் தீ உண,
   உளைந்தாய்,
"கோ-இயல் அழிந்தது" என;
   வேறு ஒரு குலத்தோன்
தேவியை நயந்து, சிறை வைத்த
   செயல் நன்றோ?
பாவியர் உறும் பழி இதின் பழியும்
    உண்டோ?

'சித்திரங்களால் அலங்கரிக்கப்பட்ட நகரம்
தீயில் வெந்ததென மனம் வருந்துகிறாய்,
நமது ஆட்சியின் தன்மை அழிந்து விட்டது
என்று சொல்கிறாய்.
அரக்கரினம் அல்லாதவர் மனைவியைக்
கவர்ந்து சிறையில் வைத்த செயல்
நல்லதோ?
பாவம் செய்தவர் அடையும் பழிகளிலே
இதை விடவும் கொடிய பழி வேறு
உள்ளதோ? '
என்று கும்பகர்ணன் கேட்டான்.


6122.
'ஆசு இல் பர தாரம் அவை அம்
   சிறை அடைப்பேம்;
மாசு இல் புகழ் காதலுறுவேம்;
   வளமை கூரப்
பேசுவது மானம்; இடை பேணுவது
   காமம்;
கூசுவது மானுடரை; நன்று,
   நம கொற்றம்!

'இன்னொருவன் மனைவியை
சிறை பிடித்து அடைத்து வைப்போம்;
குற்றமற்ற புகழை அடைய விரும்புவோம்;
பெருமை மிக வீர உரைகள் பேசுவோம்.
இதற்கிடையிலே காமம் விரும்புவோம்,
மானிடர்களைப் பார்த்து அஞ்சுவோம்,
நன்றாய் இருக்கிறது நமது வெற்றி'
என்றான் கும்பகர்ணன்.



6162.
'துஞ்சுகின்றிலர்களால், இரவும் நன்
   பகலும், நிற் சொல்ல ஒல்கி,
நெஞ்சு நின்று அயரும் இந் நிருதர்;
   "பேர் சனகி ஆம் நெடியது ஆய
நஞ்சு தின்றனர்கள்தாம் நண்ணுவார்
   நரகம்" என்று எண்ணி, நம்மை
அஞ்சுகின்றிலர்கள்-நின் அருள் அலால்,
   சரண் இலா அமரர் அம்மா!

'நம் அரக்கர்கள் - 
இரவும் பகலும் எப்போதும்
உறங்காது விழித்திருக்கின்றனர், 
உண்மையை உன்னிடம்  உரைக்க 
அஞ்சுகின்றனர், 
மனம் மயங்கி நின்று வருந்துகின்றனர்;
சானகி என்ற கொடிய விடத்தைத்      
தின்ற இவ்வரக்கர் நரகம் அடைவார்கள்;
என்று தம்முள் எண்ணி, 
இதுகாறும் வேறு புகலிடம் இல்லாது 
உனது அருளை வேண்டி நின்ற தேவர்கள்
நமக்கு  அஞ்சாதவராகி விட்டனர்' 
என்று வீடணன் உரைத்தான்.


6169.
'இசையும் செல்வமும் உயர் குலத்து 
   இயற்கையும் எஞ்ச, 
வசையும் கீழ்மையும் மீக்கொள, 
   கிளையொடும் மடியாது,
அசைவு இல் கற்பின் அவ் அணங்கை 
   விட்டருளுதி; இதன்மேல்
விசையம் இல்' எனச் சொல்லினன் 
   அறிஞரின் மிக்கான்.

புகழும் செல்வமும் உயர்ந்த 
நமது குல இயல்பும் கெட
பழியும் தாழ்வும் மேலோங்க
உற்றார் உறவினரோடு அழியாது
தளர்தல் இல்லாத கற்பை உடைய 
தெய்வமகள்  சீதையை விட்டுவிடு, 
இராமனிடம் சேர்த்துவிட்டு;
இதை விடச் சிறந்த வெற்றி வேறில்லை;
என்றான் அறிஞரில் சிறந்தவனான வீடணன்.


( தொடரும் )

No comments:

Post a Comment