Tuesday, April 28, 2020

கம்பராமாயணம் 109


8932.
‘இருந்தனள், தேவி; யானே எதிர்ந்தனென்,
   என் கண் ஆர;
அருந்ததிக் கற்பினாளுக்கு அழிவு
   உண்டோ? அரக்கன் நம்மை
வருந்திட மாயம் செய்து, நிகும்பலை
   மருங்கு புக்கான்;
முருங்கு அழல் வேள்வி முற்றி, முதல் அற
   முடிக்க மூண்டான்.’


“சீதை அசோகவனத்தில் இருக்கிறாள்,
என் கண்களால் கண்டதையே சொல்கிறேன்;
அருந்ததி போன்ற கற்பினை உடைய
சீதைக்கு அழிவும் வருவதுண்டோ?
இந்திரசித்து மாயங்களைச் செய்து நம்மை
ஏமாற்றியிருக்கிறான்;
நமக்குக் போக்குக்காட்டி விட்டு, நிகும்பலை
கோயிலில் புகுந்திருக்கிறான்;
எல்லாவற்றையும் அழிக்க வல்ல
வேள்வியைச் செய்து முடித்து நம்மை
அடியோடு அழிக்க மூண்டுள்ளான்”
என்று வீடணன் இராமனிடம் கூறினான்.


நிகும்பலை யாகப் படலம்


8935.
என்றலும், இறைஞ்சி, ‘யாகம் முற்றுமேல்,
   யாரும் வெல்லார்
வென்றியும் அரக்கர் மேற்றே; விடை அருள்;
   இளவலோடும்
சென்று, அவன் ஆவி உண்டு, வேள்வியும்
   சிதைப்பென்’ என்றான்;
‘நன்று அது; புரிதிர்!’ என்னா, நாயகன்
   நவில்வதானான்:


இராமன் வீடணனை பாராட்ட,
அவனும் வணங்கி, இந்த வேள்வி
நிறைவுறுமானால் இந்திரசித்தை
யாரும் அழிக்க முடியாது;
வெற்றியும் அரக்கர் பக்கம் போய்விடும்;
ஆகவே எங்களுக்கு அனுமதி தந்திடு;
இலக்குவனோடும் சென்று அவனது
உயிரை  உண்டு அவ் வேள்வியினையும்
அழிப்பேன் என்று கூறினான்;
தலைவனாகிய இராமனும் ‘நல்லது!
அதனைச் செய்யுங்கள்! என்று கூறினான்.






8977.
மலைகளும், மழைகளும், வான 
   மீன்களும்,
அலைய வெங் கால் பொர, அழிந்த 
   ஆம் என,
உலை கொள் வெங் கனல் பொதி 
   ஓமம் உற்றலால்,
தலைகளும் உடல்களும் சரமும் 
   தாவுவ.

ஊழிக்காலத்துக் கடுங்காற்றில் 
தாக்கப்பட்டது போல,
மலைகளும், மேகங்களும், விண்மீன்களும்
நிலை பெயர்ந்து அழிந்து வீழ,
இலக்குவன் எய்த அம்புகள் பாய, 
அரக்கர்களின் தலைகளும் உடல்களும்
அறுபட்டு,
வெம்மை மிக்க தீ நிறைந்த 
ஓம குண்டத்தில் வீழ்ந்தன.



இந்திரசித்து வதைப் படலம்

9147.
‘தேரினைக் கடாவி, வானில் செல்லினும்
   செல்லும்; செய்யும்
போரினைக் கடந்து, மாயம் புணர்க்கினும்
   புணர்க்கும்; போய் அக்
காரினைக் கடந்தும் வஞ்சம், கருதினும்
   கருதும், காண்டி,
வீர! மெய்; பகலின் அல்லால், விளிகிலன்
   இருளின், வெய்யோன்.


'தேரினைச் செலுத்திக்கொண்டு
வானில் சென்றாலும் செல்வான் இவன்;
நேரே செய்யும் போரை விடுத்து, மாயச்
செயல்களைச் செய்யக்கூடியவன் இவன்;
விண்ணில் போய் அந்த மேகத்தில் கலந்து
வஞ்சனைச் செயல்கள் செய்வான் இவன்;
வீரனே!  உன் கருத்தில் கொள்,
கொடியனாகிய இந்த இந்திரசித்து
பகலில் அன்றி இருளில் இறக்கமாட்டான்;
இது உண்மை' என்று வீடணன் கூறினான்.


9167.
நேமியும், குலிச வேலும், நெற்றியின்
   நெருப்புக் கண்ணான்
நாம வேல்தானும், மற்றை நான்முகன்
   படையும், நாண,
தீ முகம் கதுவ ஓடிச் சென்று, அவன்
   சிரத்தைத் தள்ளி,
பூ மழை அமரர் சிந்த, பொலிந்தது-அப்
   பகழிப் புத்தேள்.

(இராமனைத் துதித்து இலக்குவன்
அம்பு தொடுக்க )

திருமாலின் சக்கரப்படையும்,
இந்திரனின் வச்சிரப்படையும்; 
நெற்றியில் நெருப்புக் கண்ணை உடைய
உருத்திரனின் அஞ்சத்தக்க  சூலவேலும்;
பிரமனின் பிரமாத்திரமும் நாணுமாறு;
முனையில் நெருப்பு பற்றி எரியும்
விரைந்து சென்று அந்த இந்திரசித்தின்
தலையை அறுத்துத் தள்ளியது;
தேவர்கள் மலர்மாரி சொரிய நின்றது,
இலக்குவன்  விடுத்த அந்த அம்பு;



9174.
ஆக்கையின் நின்று வீழ்ந்த அரக்கன் 
   தன் தலையை அம் கை
தூக்கினன், உள்ளம் கூர்ந்த வாலி சேய் 
   தூசி செல்ல,
மேக்கு உயர்ந்து அமரர் வெள்ளம் அள்ளியே 
   தொடர்ந்து வீசும்
பூக் கிளர் பந்தர் நீழல், அனுமன்மேல் 
   இளவல் போனான்.
உடம்பிலிருந்து அறுபட்டு விழுந்த 
இந்திரசித்தின் தலையை,  
மனமகிழ்ச்சி பொங்க அங்கதன் தன் கையில்  
தூக்கிக்  கொண்டு முன்னே செல்ல,
விண்ணில் உயர்ந்து நின்று தேவர்களின் 
கூட்டம், சொரிகின்ற  மலர்ப் பந்தல் நிழலில்,
இலக்குவன் அனுமன் தோள் மேலமர்ந்து,
எல்லோரும் இராமன் இருக்குமிடம் சென்றனர்.



( தொடரும் )

No comments:

Post a Comment