Sunday, April 5, 2020

கம்பராமாயணம் 86


இலங்கை கேள்விப் படலம்

6526.
உடலினை நோக்கும்; இன் உயிரை நோக்குமால்;
இடரினை நோக்கும்; மற்று யாதும் நோக்கலன்;
கடலினை நோக்கும்; அக் கள்வன் வைகுறும்
திடரினை நோக்கும்; தன் சிலையை நோக்குமால்.

(சீதையின்பிரிவால்)
இராமன், மெலிந்த தன் உடலைப் பார்த்தான்;
தனது இன்னுயிர் போன்ற சீதையை மனதால்
நினைத்துக்கொண்டான்; 
சீதைக்கு நேர்ந்த துன்பத்தை நினைத்தான்,
வேறெதுவும் எண்ண முடியாதவனானான்;
தன்னெதிரே உள்ள கடலைப் பார்த்தான்,
கள்வன் இராவணன் இருக்கும் இலங்கை
மண் திட்டைப் பார்த்தான்,
உடனே, தன் கையிலிருக்கும் வில்லையும்
பார்த்துக் கொண்டான்.


6530.
'ஆர்கலி இலங்கையின் அரணும், அவ் வழி
வார் கெழு கனை கழல் அரக்கர் வன்மையும்,
தார் கெழு தானையின் அளவும், தன்மையும்,
நீர் கெழு தன்மையாய்! நிகழ்த்துவாய்' என்றான்.

'கடல் சூழ்ந்த இலங்கையின் மதில் பற்றியும்,
அங்கு ஒலிக்கும் வீரக் கழல் அணிந்த அரக்கர்
வலிமை பற்றியும்,
வெற்றி மாலை சூடிய இலங்கைப் படையின்
அளவு பற்றியும், தன்மை   பற்றியும்,
நற்குணங்கள் உடையவனே உரைப்பாய்'
என இராமன் வீடணனைக் கேட்டான்.



6563.
'தம்பி, முற்பகல் சந்திரர் நால்வரின் தயங்கும்
கும்ப மாக் கிரிக் கோடு இரு கைகளால் கழற்றி
செம் பொன் மால் வரை மதம் பட்டதாம்
   எனத் திரிந்தான்.
கும்பகன்னன் என்று உளன், பண்டு
   தேவரைக் குமைத்தான்'.

'இராவணனுடைய தம்பி,
முதல் நாளைய பிறை போன்ற
நான்கு தந்தங்களை உடைய ஐராவதத்தை
தனது இரண்டு கைகளாலும் பிடிக்கும்
வல்லமை உள்ளவன்,
செம்பொன் மலையான பெரியமேருமலை
அலைந்து திரிவது போன்று தோன்றுபவன்.
முன்பு தேவர்களையெல்லாம் தோற்கடித்தவன்,
கும்பகன்னன் என்ற பெயருடைய வீரன் உள்ளான்'
என்றான் வீடணன்.


6564.
'கோள் இரண்டையும் கொடுஞ் சிறை
   வைத்த அக் குமரன்
மூளும் வெஞ் சினத்து இந்திரசித்து என
   மொழிவான்;
ஆளும் இந்திரற்கு அன்னவன் பிணித்ததன்
   பின்னை.
தாளினும் உள, தோளினும் உள, இனம்
   தழும்பு'.

'சூரியன், சந்திரன் இரண்டு கோள்களையும்
சிறை வைத்தவன், இராவணனது மகன்,
மூண்டெழும் கொடிய கோபத்தை உடையவன்,
இந்திரசித்து எனக்  கூறப்படுபவன்,
விண்ணுலகை ஆளும் தேவேந்திரனை
வென்று, கட்டி வைத்தத் தழும்பு,
இந்திரனுடைய கால்களிலும் தோள்களிலும்
இன்னும் இருக்கு' என்றுரைத்தான்.


6567.
'இனைய தன்மையர் வலி இஃது;
   இராவணன் என்னும்
அனையவன் திறம் யான் அறி அளவு
   எலாம் அறைவென்:
தனையன், நான்முகன் தகை மகன்
   சிறுவகு; தவத்தால்,
முனைவர் கோன் வரம், முக்கணான்
   வரத்தொடும் உயர்ந்தான்.


இராவணனது துணைவர், தம்பி, மக்கள் ஆகிய
இத்தன்மையோர் வலிமை இது;
இராவணன் என்ற   பெயர் உடையவன் திறத்தை
நான் அறிந்த அளவுக்கு எடுத்துக் கூறுவேன்;
பிரம தேவனது மகனான புலத்தியனுக்கு மகனான
விச்சிரவசுவின் மகன் இவன்;
அந்தணர் தலைவனான பிரமன் தந்தவரம்,
மூன்று  கண்களை உடைய சிவபெருமான் தந்த
வரம் இவைகளால் உயர்ந்தவனானான்.


6583.
'காந்தும் வாளியின் கரன் முதல் வீரரும்,
   கவியின்
வேந்தும், என்று இவர் விளிந்தவா கேட்டு
   அன்று; அவ் இலங்கை
தீந்தவா கண்டும், அரக்கரைச் செருவிடை
   முருக்கிப்
போந்தவா கண்டும், நான் இங்குப் புகுந்தது
   புகழோய்!'

'உனது எரிக்கும் அம்புகளால்,
கரனும் அவனுக்குத்  துணை வந்தவர்களும்,
வானர சேனையின் அரசனான  வாலியும்
ஆகிய இவர்களெல்லாம்
இறந்தது கேட்டதனால் அல்ல.
அந்த  இலங்கை, உன்னருள் பெற்ற
அனுமன் ஒருவனாலே அழிந்தது கண்டும்,
இலங்கை அரக்கர்களை  போரிலே
அனுமன் அழித்து வெற்றியோடு திரும்பியதை
நேரில் கண்டதாலேயும் தான்,
நான் உன்னைச் சரண்புகுந்தது,
புகழ்மிக்கவனே !' என்றான் வீடணன்.



( தொடரும் )

No comments:

Post a Comment