Monday, April 27, 2020

கம்பராமாயணம் 108


மாயா சீதைப் படலம்


8852.
‘அனையது வேறு நிற்க; அன்னது
   பகர்தல் ஆண்மை
வினையன அன்று; நின்று வீழ்ந்தது
   வீழ்க! வீர!
இனையல் நீ; மூண்டு யான் போய்,
   நிகும்பலை விரைவின் எய்தி,
துனி அறு வேள்வி வல்லை இயற்றினால்,
   முடியும், துன்பம்.

இராமன் தெய்வம் என்ற உண்மை
ஒருபுறம் இருக்கட்டும்;
அத்தகு  உண்மைகளைக்  கூறித்
தயங்குதல் போராண்மை அன்று;
போரில் எதிர்த்து நின்று வீ்ழ்ந்தவர்கள்
வீழட்டும்; வீர! நீ, அது பற்றி வருந்தாதே!
இப்போதே நான் சென்று
நிகும்பலை கோயிலை அடைந்து
ஆற்றலுடைய வேள்வியை விரைந்து
செய்ய, உன் துன்பம் அதனால் தீரும்'
என்று இந்திரசித் இராவணனிடம் கூறினான்.



8854.
‘சானகி உருவமாகச் சமைத்து, அவள்
   தன்மை கண்ட
வான் உயர் அனுமன் முன்னே, வாளினால்
   கொன்று மாற்றி,
யான் நெடுஞ் சேனையோடும் அயோத்தி
   மேல் எழுந்தேன் என்னப்
போனபின், புரிவது ஒன்றும் இலாது அவர்
   துயரம் பூண்பார்.

(வேள்விக்கு பகைவர் இடையூறு
இல்லாதிருக்க)

சீதையின் உருவம் போல மாய உருவம்
ஒன்று செய்வோம்;
அவளை ஏற்கனவே ஒருமுறை கண்ட
அனுமன் காணும்படி இந்த மாய சீதையைக்
கொல்வோம்;
கொன்று, பின் நான் நெடிய சேனையோடு
அயோத்தி நோக்கி போகின்றேன்
என்ற செய்தி சொல்வோம்;
அத்திசை நோககிப்  போனதாய்ப் போக்கு
காட்டுவோம்;
நம் எதிரிகள் ஒன்றும் புரியாது துயரம் கொள்ள,
இதற்கிடையில் நான் வேள்வி முடிப்பேன்'
என்று இந்திரசித் தன் திட்டத்தைக் கூறினான்.


8870.
‘கண்டவளே இவள்’ என்பது கண்டான்,
‘விண்டதுபோலும், நம் வாழ்வு’ என வெந்தான்;
கொண்டு, இடை தீர்வது ஒர் கோள் அறிகில்லான்,
‘உண்டு உயிரோ!’ என, வாயும் உலர்ந்தான்.


(இலங்கையை எரியூட்ட வந்த வானர வீரரும்,
அனுமனும், இந்திரசித் சீதையைக் கொல்வதைக்
கண்டனர்)

அனுமன், முன்பு அசோகவனத்தில் தான்
கண்ட சீதை இவளே என்று உணர்ந்தான்;
‘நம்வாழ்வு அழிந்ததோ' என்று மனம் வெந்தான்;
சீதையை அரக்கனிடமிருந்து விடுவிப்பது
எப்படி என்று அறியாது திகைத்தான்.
உயிர்  உண்டா எனக் கண்டவர் ஐயுறுமாறு
வாய் உலர நின்றான்..


8926.
 ‘பத்தினிதன்னைத் தீண்டிப் பாதகன்
   படுத்தபோது,
முத் திறத்து உலகும் வெந்து சாம்பராய்
   முடியும் அன்றே?
அத் திறம் ஆனதேனும், அயோத்திமேல்
   போன வார்த்தை
சித்திரம்; இதனை எல்லாம் தெரியலாம்,
   சிறிது போழ்தின்.


'பத்தினி சீதையைப் பாதகன் இந்திரசித்து
தீண்டிக் கொன்றிருப்பானாயின்,
அக்கணமே மூன்று உலகங்களும் வெந்து
சாம்பல் ஆகியிருக்குமன்றோ?
அந்நிகழ்ச்சி உண்மையாக நடந்தது
என்றாலும்
இந்திரசித்து அயோத்தி போனான்
என்பதெல்லாம்
அதிசயமானது, இதையெல்லாம்  இன்னும்
சிறிது நேரத்தில் தெரிந்து கொள்ளலாம்'
என்று வீடணன் கூறினான்.


8928.
வண்டினது  உருவம் கொண்டான்,
   மானவன் மனத்தின் போனான்;
தண்டலை இருக்கை தன்னைப்
   பொருக்கெனச் சார்ந்து, தானே
கண்டனன் என்ப மன்னோ, கண்களால்
   கருத்தில் ‘ஆவி
உண்டு, இலை’ என்ன நின்ற, ஓவியம்
   ஒக்கின்றாளை.


வண்டினது உருவத்தைக் கொண்டான்.
இராமனது மனத்தைப்  போல் வேகமாய்ப்
பறந்தான்;
அசோகவனத்தில் சீதையின் இருப்பிடத்தை
விரைந்து அடைந்தான்
'உயிர்  உண்டு, இல்லை என்று ஐயுறுமாறு
இருக்கின்ற, ஓவியம்  போன்ற சீதையை,
வீடணன் தானே தன் கண்களினால்
கண்டான்.


( தொடரும் )

No comments:

Post a Comment