Sunday, April 19, 2020

கம்பராமாயணம் 100



மாயா சனகப் படலம்


7634.
‘உணர்த்துவென், இன்று நன்று; ஓர்
   உபாயத்தின் உறுதி மாயை
புணர்த்துவென், சீதை தானே புணர்வது
   ஓர் வினையம் போற்றி;
கணத்து, வன் சனகன்தன்னைக் கட்டினென்
   கொணர்ந்து காட்டின்-
மணத் தொழில் புரியும் அன்றே-மருத்தனை
   உருவம் மாற்றி?’

(சீதையை அடைய வழி யாசித்தான் இராவணன்)
'இன்றே ஒப்பற்ற ஒரு உபாயத்தை
உணர்த்துவேன்,
சீதை  தானே  வந்து  உன்னைச்
சேர்வதற்குரிய மாயை செய்வேன்;
அரக்கன் மருத்தனை, சனகனாக
உருமாற்றி, ஒரு நொடியில் கட்டிக்
கொணர்ந்து காட்டினால்
உன்னைத் திருமணம் செய்து கொள்ள
சீதை விரும்புவாள் அன்றே'
என்றான் மகோதரன் என்ற மாயக்காரன்.


7640.
‘என்றுதான், அடியனேனுக்கு இரங்குவது?
   இந்து என்பான்,
என்றுதான், இரவியோடும் வேற்றுமை
   தெரிவது என்பால்?
என்றுதான், அனங்க வாளிக்கு இலக்கு
   அலாதிருக்கலாவது?
என்று, தான் உற்றது எல்லாம் இயம்புவான்
   எடுத்துக் கொண்டான்.


என் மேல் நீ இரக்கம் கொள்வது  என்று?
கதிரவனுக்கும் நிலவுக்கும் இடையில்
உள்ள வேறுபாட்டை என்னிடம் நீ
அறிந்து கொள்வது என்று ?
மன்மதனின் மலரம்புகளுக்கு நான்
இலக்கு ஆகாமல் இருப்பது என்று?'
என்று இராவணன் தான் அடைந்த காம
வருத்தங்களை எல்லாம்
சீதையிடம் சொன்னான்.



7642.
‘தோற்பித்தீர்; மதிக்கு மேனி சுடுவித்தீர்; 
   தென்றல் தூற்ற
வேர்ப்பித்தீர்; வயிரத் தோளை மெலிவித்தீர்; 
   வேனில் வேளை
ஆர்ப்பித்தீர்; என்னை இன்னல் அறிவித்தீர்; 
   அமரர் அச்சம்
தீர்ப்பித்தீர்; இன்னம், என் என் செய்வித்துத் 
   தீர்திர் அம்மா!

'யாரிடமும் தோற்காத என்னை 
உன்னிடம் தோற்கச் செய்தாய்; 
சந்திரனால் என் உடம்பைச் சுடுமாறு செய்தாய்; 
தென்றல் காற்று வீச காம வெப்பத்தால் 
உடம்பு புழுங்க வேர்க்கச் செய்தாய்;
என் உறுதியான தோளை மெலியச் செய்தாய்;
வேனில் காலத்தைத் துணையாகக் கொண்டு 
மன்மதனை  ஆர்ப்பொலி  செய்யச்  செய்தாய்;
துன்பம் என்றால் என்ன என்று அறியச் செய்தாய்;
தேவர்களின் அச்சத்தை நீக்கினாய்;
இன்னும் என்னென்ன துன்பங்களை எனக்குத் 
தரப்போகிறாய் ?' என்று கேட்டான் இராவணன்.




7650,
‘ ”பழி இது; பாவம்” என்று பார்க்கிலை;
   “பகரத் தக்க
மொழி இவை அல்ல” என்பது உணர்கிலை;
   முறைமை நோக்காய்;
கிழிகிலை நெஞ்சம்; வஞ்சக் கிளையொடும்
   இன்றுகாறும்
அழிகிலை என்றபோது, என் கற்பு என் ஆம்?
   அறம்தான் என் ஆம்?

'நீ  செய்ய விரும்பும் செயலால் பழி வரும்
பாவம் வரும் என்று எண்ணிப் பார்க்கவில்லை;
உம் போன்றவர் சொல்லத்தக்க சொற்கள்
இவை  அல்ல என்பதை  நீ உணரவில்லை;
யாரிடம் எவ்வாறு  நடந்து கொள்ள  வேண்டும்
என்ற  முறையையும் நீ எண்ணிப் பார்க்கவில்லை;
இவ்வாறு முறையற்ற செயல் செய்தும் 
முறையற்ற சொல்லைச் சொல்லியும் கூட 
உன் நெஞ்சம் கிழிந்து பிளவுபடவில்லை; 
உன் வஞ்சனைக்கு  உதவும்  சுற்றத்தவருடன்
இன்று  வரை  நீ அழியவில்லை;
என்றால் என் கற்பின் வலிமை என்ன ஆகும்?
அறம் தான் என்னவாகும்?'
என்று சீதை பதிலுரைத்தாள்.



7659.
‘கொற்றவாள் அரக்கர்தம்மை, “அயோத்தியர்
   குலத்தை முற்றும்
பற்றி நீர் தருதிர்; அன்றேல், பசுந் தலை
   கொணர்திர்; பாரித்து
உற்றது ஒன்று இயற்றுவீர்” என்று உந்தினேன்;
   உந்தை மேலும்,
வெற்றியர்தம்மைச் செல்லச் சொல்லினென்,
   விரைவின்’ என்றான்.


வாட்படையை ஏந்திய அரக்கர்களை,
'அயோத்தியின் அரச குலத்தைச் சேர்ந்த
அனைவரையும் இழுத்துக் கொண்டு வாருங்கள்;
அவ்வாறில்லையேல் அவர்களது தலையை
வெட்டிக் கொண்டு  வாருங்கள்;
எது முடியுமோ அதைச் செய்திடுங்கள்'
என்று கட்டளையிட்டு அனுப்பி உள்ளேன்;
உனது  தந்தையாகிய  சனகன்  மீதும்
வெற்றியே அடையும் அரக்க வீரரை
விரைந்து  போகுமாறு  அனுப்பியுள்ளேன்'
என்று இராவணன் சீதையிடம் கூறினான்.


( தொடரும் )

No comments:

Post a Comment