6655.
'நவை அறும் உலகிற்கு எல்லாம் நாயக!
நீயே சீறின்,
கவயம் நின் சரணம் அல்லால், பிறிது
ஒன்று கண்டது உண்டோ?
இவை உனக்கு அரியவோதான்; எனக்கு
என வலி வேறு உண்டோ?
அவயம், நின் அவயம்!' என்னா, அடுத்து
அடுத்து அரற்றுகின்றான்.
'குற்றமற்ற இவ்வுலகுக்கெலாம் தலைவா!
நீயே என் மீது சினம் கொண்டாயானால்
என் செய்வேன்?
உனது பாதங்களே எனக்குக் கவசமன்றோ,
வேறு ஒன்றினை நான் கண்டதில்லையே;
கடலுக்குத் தீயிட்டு, உலகை நடுங்கச்
செய்யும் இச் செயல் உனக்கரியதன்று;
உனது வலிமையால் வாழ்கின்ற எனக்கு
வேறு வலிமை தனியே இல்லையே;
நீயே அடைக்கலம்' என்று மீண்டும் மீண்டும்
கூறி அரற்றுவானானான் வருணன்.
6672.
'கல்லென வலித்து நிற்பின், கணக்கு இலா
உயிர்கள் எல்லாம்
ஒல்லையின் உலந்து வீயும்; இட்டது ஒன்று
ஒழுகா வண்ணம்
எல்லை இல் காலம் எல்லாம் ஏந்துவென்,
இனிதின்; எந்தாய்!
செல்லுதி, "சேது" என்று ஒன்று இயற்றி,
என் சிரத்தின் மேலாய்.'
(இலங்கை செல்ல வழி கேட்ட இராமனிடம்)
கடல் நீரைக் கல் போல் கடினமாக்கினால்
நீரில் வாழும் உயிரினங்கள் இறந்து விடும்
என்பது உண்மை,
அணை போல் ஒன்றை எனது தலையின்
மீது அமை,
என் மேல் இட்டது எதுவும் விலகி விடாதபடி
நெடுங்காலம் தாங்கிக் கொண்டிருப்பேன்,
இது என் கடமை, தலைவா !
அந்த அணையின் வழியாக இனிதே
செல்ல, ஆகும் உன் வேலை'
என்று சொன்னான் வருணன்.
சேது பந்தனப் படலம்
6675.
வந்தனன், வானரத் தச்சன்; 'மன்ன! நின்
சிந்தனை என்?' என, 'செறி திரைக் கடல்
பந்தனை செய்குதல் பணி நமக்கு' என,
நிந்தனை இலாதவன் செய்ய நேர்ந்தனன்.
வானரத் தச்சனான நளன், சுக்கிரீவனது
ஆணைப்படி அங்கு வந்தான்;
வந்தவன், அரசே! என்னை அழைத்தது
எதற்கு என்று கேட்டான்;
நிறைய அலைகளை உடைய இக் கடலுக்கு
இடையில் ஒரு அணை கட்டுதல் நமக்குரிய
பணியாகும் என்று சுக்கிரீவன் கூறினான்.
பிறரால் நிந்திக்கப்படாத வல்லவன் நளன்
அணை கட்டும் பணி செய்ய உடன்பட்டான்.
6680.
காலிடை ஒரு மலை உருட்டி, கைகளின்
மேலிடை மலையினை வாங்கி, விண் தொடும்
சூலுடை மழை முகில் சூழ்ந்து சுற்றிய,
வாலிடை, ஒரு மலை ஈர்த்து, வந்தவால்.
சில வானரங்கள் கால்களால்
ஒரு மலையை உருட்டிக் கொண்டும்,
ஒரு மலையை உருட்டிக் கொண்டும்,
தங்களது கைகளின் இடையிலே ஒரு
மலையைத் தாங்கியும்,
வானத்தைத் தொட்டுக் கொண்டிருப்பதும்
கருக் கொண்ட மேகங்கள் சூழ்ந்து சுற்றிக்
கொண்டிருப்பதுமான பெரிய மலையை
வாலால் கட்டி இழுத்துக் கொண்டும் வந்தன.
(மூன்று நாட்களில் அணை கட்டப்பட)
6745.
எய்தி, 'யோசனை ஈண்டு ஒரு நூறு இவை
ஐ-இரண்டின் அகலம் அமைந்திடச்
செய்ததால் அணை' என்பது செப்பினார்-
வைய நாதன் சரணம் வணங்கியே.
சுக்ரீவனும் மற்றவர்களும் இராமபிரான்
இருக்கும் இடம் அடைந்தனர்,
கட்டிய அணை, நூறு யோசனை^ நீளமும்,
பத்து யோசனை அகலமும் அமைந்தது
என்ற செய்தியைக் கூறினர்,
உலகத்து நாயகனின் திருவடிகளைத்
தொழுதனர்.
^1 யோசனை - 13 KM
( தொடரும் )
No comments:
Post a Comment