Thursday, April 23, 2020

கம்பராமாயணம் 104


8238.
தான் விடின் விடும், இது ஒன்றே;
   சதுமுகன் முதல்வர் ஆய
வான் விடின், விடாது; மற்று, இம்
   மண்ணினை எண்ணி என்னே!
ஊன் விட, உயிர் போய் நீங்க, நீங்கும்;
   வேறு உய்தி இல்லை;
தேன் விடு துளவத் தாராய்! இது இதன்
   செய்கை’ என்றான்.

'ஒப்பற்ற நாகக் கணை இது;
தானே விட்டால் தான் உண்டு;
பிரமனை முதல்வனாகக்  கொண்ட
தேவர்களாலும் விடுவித்தல் முடியாதது;
அவ்வாறிருக்கையில் இவ் உலகத்தவர்
இதிலிருந்து விடுவிப்பர் என்று எண்ண
என்ன உள்ளது;
உயிர் போன உடன் தானே நீங்கும் இது;
பிழைக்கும் வழி வேறு இல்லை.
எனக்குத் தெரிந்து;
துளசி மாலை அணிந்த இராமா,
இதுவே இந் நாகக் கணையின் செயல்'
என்று வீடணன் கூறினான்.


8265.
பல்லாயிரத்தின் முடியாத பக்கம்
     அவை வீச, வந்து படர் கால்
செல்லா நிலத்தின் இருள்ஆதல் செல்ல,
     உடல் நின்ற வாளி சிதறுற்று,
எல்லா விதத்தும் உணர்வோடு நண்ணி
     அறனே இழைக்கும் உரவோன்
வல்லான் ஒருத்தன் இடையே படுத்த
     வடு ஆன, மேனி வடுவும்.
பல ஆயிரக்கணக்கிலும் அடங்கி முடியாத
இறகுகளை உடைய கருடன் 
அங்கு தோன்றினான்.
இரண்டு சிறகுகளும் அடித்துக் கொள்ள 
காற்று அங்கு எங்கும் பரவ, 
இலக்குவன் முதலிய வானர வீரர்களுடைய 
உடலில் குத்தி நின்ற அம்புகள் 
சிதறிப் போயின;
அவர்களின் உடலங்களில் ஏற்பட்ட 
தழும்புகளும் நீங்கின.



8271.
பறவையின் குலங்கள் காக்கும் பாவகன், 
   ‘பழைய நின்னோடு
உறவு உள தன்மைஎல்லாம் உணர்த்துவென்; 
   அரக்கனோடு அம்
மற வினை முடித்த பின்னர், வருவென்’ 
   என்று உணர்த்தி, ‘மாயப்
பிறவியின் பகைஞ! நல்கு, விடை’ எனப் 
   பெயர்ந்து போனான்.
'பறவைக் கூட்டங்களைப் 
பாதுகாக்கின்ற கருடன்; 
உன்னோடு எனக்குப் பழைய உறவு உள்ள 
தன்மைகளை எல்லாம்,
இராவணனோடு நீ போர்த்தொழிலை 
முடித்த பின்பு வந்து உணர்த்துவேன்; 
இப்போது  நீ எனக்கு  விடை  கொடு,
மாயப்பிறப்பறுக்கும் பிறவியின் பகைவனே'
என்று கூறி விட்டுத் திரும்பிப் போனான்.


(கருடனின் காற்று பற்று 
கட்டுப்பட்டவர்கள் கண்விழித்ததைக் கேட்டு 
கோபம் கொண்டான் இராவணன்)

8301.
‘இன்று  ஒரு பொழுது  தாழ்த்து, என் இகல்  
   பெருஞ் சிரமம் நீங்கி,
சென்று, ஒரு கணத்தில், நாளை, நான்முகன் 
   படைத்த தெய்வ
வென்றி வெம் படையினால், உன் மனத் துயர் 
   மீட்பென்’ என்றான்;
‘நன்று’ என, அரக்கன் போய், தன் நளிமலர்க் 
   கோயில் புக்கான்.
இன்று ஒரு நாள் அவகாசம் கொடு, 
போரினால் ஏற்பட்ட துன்பத்தை 
போக்கிக்கொள்ள நேரம்  விடு;
நாளை ஒரு கண நேரத்தில், 
போர்க்களம் செல்வேன்,
பிரமன் தந்த, தெய்வத்தன்மை வாய்ந்த,
வெற்றிக்கு உரிய கொடிய கணையால்;
பகைவர்களைக் கொன்று உன்  மனத்தில் 
ஏற்பட்டுள்ள  துன்பத்தைப் போக்குவேன் 
என்று உறுதி கூறினான் இந்திரசித்.
சரி என்று ஒப்புக்கொண்டு மலர் 
மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த 
தன் அரண்மனைக்குத் திரும்பினான் 
இராவணன்.


( தொடரும் )

No comments:

Post a Comment