6405.
'யார்? இவண் எய்திய கருமம் யாவது?
போர்அது புரிதிரோ? புறத்து ஓர் எண்ணமோ?
சார்வு உற நின்ற நீர் சமைந்தவாறு எலாம்,
சோர்விலீர், மெய்ம் முறை, சொல்லுவீர்' என்றான்.
(காவலரில் மூத்தவனான மயிந்தன்
வீடணனை வினவினான்)
'நீங்கள் யார்?
இங்கு வந்த காரியம் யாது?
போர் செய்யயும் எண்ணத்தில்
புறப்பட்டு வந்திருக்கிறீர்களா? அல்லது,
வேறு எதற்கோ இங்கு வந்தீர்களா?
வானரப் படையைச் சார்ந்து நின்றிருக்கிறீர்கள்,
மனத்தில் உள்ளதை மறைக்காது சொல்லிடுங்கள்'
என்று மயிந்தன் கேட்டான்.
6413.
'விளைவினை அறிந்திலம்; வீடணப் பெயர்
நளிர் மலர்க் கையினன், நால்வரோடு உடன்,
களவு இயல் வஞ்சனை இலங்கை காவலற்கு
இளவல், நம் சேனையின் நடுவண் எய்தினான்.
'பின்னால் நேரப்போவதை நாங்கள் யாரும்
அறியோம்;
வீடணன் என்ற பெயருள்ளவன், குளிர்ந்த
மலர் போன்ற கைகளை உடையவன்,
தன்னுடன் நான்கு பேரை அழைத்து வந்திருக்கிறான்,
களவு வஞ்சம் நிறைந்த இலங்கை வேந்தன்
இராவணனுக்கு இளையவன், இவன்;
நமது வானரப் படைக்கு நடுவே வந்தடைந்துள்ளான்'
என்று இராமனிடம் சொன்னான்.
(வீடணன் வந்தது பற்றி
இராமன் கருத்து கேட்க,
பலரும் பலவாறு பேசினர்)
6459.
' "மாதரைக் கோறலும், மறத்து நீங்கிய
ஆதரைக் கோறலும், அழிவு செய்யினும்
தூதரைக் கோறலும், தூய்து அன்றாம்" என,
ஏதுவில் சிறந்தன எடுத்துக் காட்டினான்.
'அபலைப் பெண்களைக் கொல்வதும்,
வீரமற்ற மக்களைக் கொல்லுவதும்,
அழிவுக்குரிய செயல்களைச் செய்திருந்தாலும்
தூது வந்தவர்களைக் கொல்வதும்
தூய செயல் ஆகாது என்று,
சிறந்த காரணங்களை எடுத்துக்கூறி
நிறுவினான்'
என்று அனுமான் தன் கருத்தைச் சொன்னான்.
6461.
'நிந்தனை நறவமும், நெறி இல் ஊன்களும்,
தந்தன கண்டிலேன்; தரும தானமும்,
வந்தனை நீதியும், பிறவும், மாண்பு அமைந்து,
அந்தணர் மனை எனப் பொலிந்ததாம் அரோ.
நல்லவர்கள் வெறுக்கும் மதுவும்,
தீயவழியில் கிட்டும் ஊன் உணவும்
வீடணன் இல்லத்தில் காணப்படவில்லை;
அறநெறிப்படி அமைந்த தானங்களுக்கும்,
தெய்வ வழிபாடுகளுக்கும்
வேறு நல்ல பழக்க வழக்கங்களும்
குறையே இல்லை;
அந்தணர்களது இல்லத்தைப் போல
இவன் இல்லம் பொலிந்து விளங்கியதில்
தவறில்லை' என்று அனுமான், தான்
இலங்கையில் கண்டதை இயம்பினான்.
6481.
'ஆதலான், "அபயம்!" என்ற பொழுதத்தே,
அபய தானம்
ஈதலே கடப்பாடு என்பது; இயம்பினீர்,
என்பால் வைத்த
காதலான்; இனி வேறு எண்ணக் கடவது
என்? கதிரோன் மைந்த!
கோது இலாதவனை நீயே என்வயின்
கொணர்தி' என்றான்.
(இந்த வீடணன் அடைக்கலம் கேட்கிறான்
அவனை ஏற்றுக்கொள்ள காரணங்கள் உள்ளன)
எனவே, இவன் அபயம் என்று வந்தவுடனே
அபயதானம் தருவதே நமக்கரிய கடமை
என்று கருதுகிறேன்;
என்பால் வைத்துள்ள அன்பாலேயே
அபயம் கூடாதென்று நீங்கள் சொல்வதை
உணர்கிறேன்;
இனி இதற்கு மாறாக எண்ணுதற்கு வேறு
ஒன்றும் இல்லை என்று அறிகிறேன்;
சூரிய குமரா, சுக்கிரீவா !
குற்றமொன்றுமில்லாத இந்த வீடணனை
நீயே என்னிடம் அழைத்து வா' என்றான்.
( தொடரும் )
No comments:
Post a Comment