Thursday, April 2, 2020

கம்பராமாயணம் 83



6176.
' "நந்தி சாபத்தின் நமை அடும், குரங்கு"
   எனின், நம்பால்
வந்த சாபங்கள் எனைப் பல; அவை செய்த
   வலி என்?
இந்திராதியர், சித்தர்கள், இயக்கர்,
   நம் இறுதி
சிந்தியாதவர் யார் ? அவை நம்மை
   என் செய்த ?'


'நந்தி தேவன் தந்த சாபத்தால்
நமைக் குரங்குகள் கொல்லும் என்றால்
நம்மை வந்தடைந்த சாபங்கள் ஏகப்பட்டது.
அவை விளைவித்த துன்பங்கள்
இவை இவை என்று சொல்ல முடியாது;
இந்திரனும், தேவர்களும், முனிவர்களும்
இவர்களில் நம் அழிவை விரும்பாதவர் யாவர் ?
அவை எல்லாம் நம்மை என்ன செய்துவிட்டன?'
என்று இராவணன் எதிர்வாதம் வைத்தான்.



6187.
'வெஞ் சினம் தரு போரின் எம்முடன் 
   எழ வேண்டா;
இஞ்சி மா நகர் இடம் உடைத்து, ஈண்டு 
   இனிது இருத்தி ;
அஞ்சல் அஞ்சல் !' என்று, அருகு இருந்தவர் 
   முகம் நோக்கி,
நஞ்சின் வெய்யவன் கை எறிந்து, உரும் 
   என நக்கான்.

'கொடிய விளைவை உண்டாக்கும் போரில் 
எங்களுடன் பங்குகொள்ள வேண்டாம்,
மதில் சூழ்ந்த மாநகர் இலங்கையிலே 
நிறைய இடமிருக்கு,
அங்கே நீ தங்கி இருக்கலாம்,
அஞ்சத்தேவையில்லாது வாழலாம்'
என்றான், கொடிய விடத்தினும் கொடியவன்;
அருகில் இருந்த அமைச்சர்களின் 
முகத்தைப் பார்த்தான்; 
கை கொட்டி இடி இடித்தது போல் சிரித்தான்.

(இரணியன் கதை உரைத்தான் வீடணன்,
கோபம் கொண்டான் இராவணன்)

வீடணன் அடைக்கலப் படலம் 

6372.
'பழியினை உணர்ந்து, யான் படுக்கிலேன், 
   உனை;
ஒழி, சில புகலுதல்; ஒல்லை நீங்குதி;
விழி எதிர் நிற்றியேல், விளிதி' என்றனன்
அழிவினை எய்துவான், அறிவு நீங்கினான்.

'எனக்கு நேர இருக்கும் பழியை எண்ணியே
உன்னைக் கொல்லது விடுகிறேன்.
இது போன்ற அறிவுரைகள் கூறுவதை 
நிறுத்தாய்,
சீக்கிரம் இங்கிருந்து நீங்கிப் போவாய்,   
என்கண் எதிரில் நீ இனி நிற்பாயானால் 
சாவாய்' என்று கூறினான்.
தனக்கு அழிவை அடைவதற்கேற்ப
நல்லறிவு  நீங்கப் பெற்ற இராவணன்.



 6376.
'எத்துணை வகையினும் உறுதி எய்தின,
ஒத்தன, உணர்த்தினேன்; உணரகிற்றிலை;
அத்த ! என் பிழை பொறுத்தருளுவாய்' என,
உத்தமன் அந் நகர் ஒழியப் போயினான்.

'எத்தனை எத்தனை வகையுண்டோ  
அத்தனை வகையிலும் 
உணர்த்தினேன் உனக்கு நீதிகளை, 
உணர மறுக்கிறாய் 
என் உண்மை வார்த்தைகளை;
ஐயா, என்னை மன்னித்துடுவாய்,
என் தவறுகளை பொறுத்தருள்வாய்,  
சொன்னான் உத்தமனாகிய வீடணன்,
சொல்லிவிட்டு இலங்கை நகரை 
நீங்கிச் சென்றான்.


6397.
உறைவிடம் எய்தினான், ஒருங்கு 
   கேள்வியின்
துறை அறி துணைவரோடு இருந்த 
   சூழலில்,
முறை படு தானையின் மருங்கு 
   முற்றினான்
அறை கழல் வீடணன், அயிர்ப்பு 
   இல் சிந்தையான்.

இராமபிரான் தங்கியிருக்கும் பாசறையை 
அடைந்தான்; 
நல்ல அறிவு படைத்த துணைவர்கள் 
ஒரு சேர அமர்ந்திருந்த இடத்திற்கு வந்தான்
அங்கு  தங்கியிருந்த  வானரப் படைகளின் 
பக்கத்திலே வந்து சேர்ந்தான். 
கால்களில் கழல் அணிந்த வீடணன்,
எவ்வித ஐயமுமில்லாத மனதை
உடையவனாயிருந்தான்.

( தொடரும் )

No comments:

Post a Comment