Saturday, April 18, 2020

கம்பராமாயணம் 99


(கும்பகர்ணனோடு போரிட்டு சுக்ரீவன் மயங்க)

7539.

'மண்டு அமர் இன்றொடு மடங்கும்;
   மன் இலாத்
தண்டல் இல் பெரும் படை சிந்தும்;
   தக்கது ஓர்
எண்தரு கருமம் மற்று இதனின் இல்'
   என,
கொண்டனன் போயினன், நிருதர்கோ
   நகர்.

'இவனைத் தூக்கிப் கொண்டு போய்விட்டால்,
தொடங்கிய போர் இன்றோடு முற்று பெறும்;
அரசன் இல்லாது வானரப் படை சிதறிவிடும்;
இதனைக்  காட்டிலும் சிறந்த செய்யத்தக்க
செயல் வேறேது, இதுவே ஆகும்'
என்றெண்ணி, சுக்கிரீவனை தன் நகருக்கு
தூக்கிக் கொண்டு போனான்
அரக்கர் தலைவனாகிய கும்பகருணன்.


7555.
'காக்கிய வந்தனை என்னின், கண்ட
   என்
பாக்கியம் தந்தது, நின்னை; பல்
   முறை
ஆக்கிய செரு எலாம் ஆக்கி, எம்
   முனைப்
போக்குவென், மனத்துறு காதல்
   புன்கண் நோய்.


இச் சுக்கிரீவனைக் காப்பாற்ற  வந்தாயா,
இல்லை முன்னம் நான் செய்த பாக்கியம்
உன்னை என்னிடம் வரவைத்துள்ளது,
முன்பு பலமுறை செய்துள்ள வீரப் போரை
எல்லாம் இன்று இப்பொழுது செய்து,
என்  அண்ணணுடைய மனதில் உள்ள
வருத்தம் தரும் நோயைப் போக்குவேன்'
என்று கும்பகர்ணன் இராமனிடம் சொன்னான்.


7558.
மீட்டு அவன், சரங்களால் விலங்கலானையே
மூட்டு அற நீக்குவான் முயலும் வேலையில்,
வாள் தலை பிடர்த்தலை வயங்க, வாளிகள்,
சேட்டு அகல் நெற்றியின், இரண்டு
   சேர்த்தினான்.


இராமன் கும்பகர்ணனோடு போர் புரிந்தான்,
அம்பு மழை பொழிந்தான்,
சுக்கிரீவனை மீட்டு வருவதற்கு முயன்றான்,
அம்பறாத் தூணியிலிருந்த
கூரிய அம்புகள் இரண்டை
கும்பகருணனது அகன்ற நெற்றியில்
பாய்ச்சினான்.


7562.
கண்டனன் நாயகன்தன்னை,
   கண்ணுறா,
தண்டல் இல் மானமும் நாணும்
   தாங்கினான்,
விண்டவன் நாசியும் செவியும்
   வேரொடும்
கொண்டனன், எழுந்து போய்த்
   தமரைக் கூடினான்,

கண்விழித்த சுக்கிரீவன் தலைவனாகிய
இராமனைக் கண்டான்.
பார்த்து நாணம் கொண்டான்;
பகைவனான கும்பகர்ணனது
மூக்கையும் காதையும் வேரோடு பிடுங்கினான்,
உடனே எழுந்து தன் சேனையிடம்
போய்ச் சேர்ந்தான்.



7594.
'ஏதியோடு எதிர் பெருந் துணை இழந்தனை;
   எதிர் ஒரு தனி நின்றாய்; 
நீதியோனுடன் பிறந்தனை ஆதலின், 
   நின் உயிர் நினக்கு ஈவென்; 
போதியோ? பின்றை வருதியோ? அன்று எனின்,
   போர் புரிந்து இப்போதே 
சாதியோ? உனக்கு உறுவது சொல்லுதி, 
   சமைவுறத் தெரிந்து, அம்மா!

 
'படைக் கலங்களுடன் போர் புரிய வந்து 
எதிர்த்து நின்று எல்லாம் இழந்தாய்;
தன்னந்  தனியாய் எதிரே நிற்கின்றாய்; 
நீதிநெறி தவறாத வீடணனுடன் பிறந்ததினால் 
உன் உயிரை உனக்குத் தருகிறேன்; 
இப்போது திரும்பிப் போகிறாயா?
பின்பு மீண்டும் போர் புரிய வருகிறாயா? 
அப்படியில்லை என்றால் 
இப்போதே போரிட்டு இறந்துவிடுகிறாயோ?
நீயே ஆராய்ந்து சொல்'
என்று இராமன் சொன்னான்.



7628.
' "மூக்கு இலா முகம்" என்று முனிவர்களும்
   அமரர்களும்
நோக்குவார் நோக்காமை, நுன் கணையால் 
   என் கழுத்தை
நீக்குவாய்; நீக்கியபின், நெடுந் தலையைக் 
   கருங் கடலுள்
போக்குவாய்; இது நின்னை வேண்டுகின்ற 
   பொருள்' என்றான்.


'மூக்கு இல்லாத முகம் என்று சொல்லிக்
காண்பிப்பார்கள் முனிவர்களும் தேவர்களும்;
அவர்கள் அவ்வாறு சிரிக்காதிருக்க 
உன் அம்பினால் என் கழுத்தை நீக்குவாய்;
அறுத்து நீக்கிய பிறகு, என் கழுத்தோடு கூடிய 
தலையை கரிய கடலுக்குள் மூழ்கச் செய்வாய்;
இதுவே நான் உன்னை வேண்டிக் கொள்கின்ற 
பொருள்' என்றான் கும்பகருணன். 


7630.
மாக் கூடு படர் வேலை மறி மகரத் 
   திரை வாங்கி,
மேக்கூடு, கிழக்கூடு, மிக்கு இரண்டு 
   திக்கூடு,
போக்கூடு கவித்து, இரு கண் செவியூடும்
   புகை உயிர்க்கும்
மூக்கூடும் புகப் புக்கு மூழ்கியது, அம் 
   முகக் குன்றம்.
 

(கும்பகர்ணன் கேட்ட வரத்தின்படி, 
இராமன் அவன் தலையைக் கொய்தான்)
 
கருமை நிறம் மிகுந்த பரந்த கடலில்,
மடங்கி எழும் அலைகளை, மேற்கு, கிழக்கு 
என்று எல்லா திசைகளிலும் விலக்கி,
இரு கண்களிலும் புகையை வெளிப்படுத்தும்
மலை போன்ற அவன் முகம் 
மூக்கு வழியாகவும் நீர் உள்புக, மூழ்கியது.


( தொடரும் )

No comments:

Post a Comment