Thursday, April 16, 2020

கம்பராமாயணம் 97


கும்பகருணன் வதைப் படலம்


7274.
மாதிரம் எவையும் நோக்கான், வள நகர்
   நோக்கான், வந்த
காதலர் தம்மை நோக்கான், கடல் பெருஞ்
   சேனை நோக்கான்,
தாது அவிழ் கூந்தல் மாதர் தனித் தனி
   நோக்க, தான் அப்
பூதலம் என்னும் நங்கைதன்னையே
   நோக்கிப் புக்கான்

(தோற்று திரும்பும் இராவணன்)
எந்த திசையையும் நோக்காது நடந்தான்,
நகரினுள் எதையும் காண விரும்பாது
கடந்தான்,
சுற்றம் நட்பு யாரையும் பார்க்காது நகர்ந்தான்,
போர் வீரர்கள் நிறைந்த சேனைப் பக்கம்
திரும்பாது நடந்தான்,
கூந்தல் அவிழ்ந்த பெண்கள் அங்கங்கே
தனித்தனியே நின்று இவனைப் பார்க்க,
மண்ணைப் பார்த்தபடியே நடந்து வந்து
அரண்மனை நுழைந்தான்.



7312.
'ஆங்கு அவன் தன்னைக் கூவி, ஏவுதி
   என்னின், ஐய! 
ஓங்கலே போல்வான் மேனி காணவே 
   ஒளிப்பர் அன்றே; 
தாங்குவர் செரு முன் என்னின், தாபதர் 
   உயிரைத் தானே 
வாங்கும்' என்று இனைய சொன்னான்; 
   அவன் அது மனத்துக் கொண்டான். 

'கும்பகர்ணனை எழுப்புவோம்,
போர் புரியக் கட்டளையிடுவோம்
மலை போன்ற அவன் உடலைக் கண்டதும் 
எதிரிகள் அஞ்சி ஒளிவர் அன்றோ?
ஒருவேளை எதிர் நின்று போர் புரிந்தாலோ,
அந்த தவ வேடம் அணிந்த இருவரையும் 
கும்பகர்ணனே கொன்றுவிடுவான் அன்றோ'
என்ற இனிமையான வார்த்தைகளை 
மகோதரன் உரைத்தான்.
இராவணன் அதை மனதுள் கொண்டான்.





7325.
என்றலுமே அடி இறைஞ்சி, ஈர்-ஐஞ்ஞூற்று 
   இராக்கதர்கள், 
வன் தொழிலால் துயில்கின்ற மன்னவன் 
   தன் மாடு அணுகி, 
நின்று இரண்டு கதுப்பும் உற, நெடு முசலம் 
   கொண்டு அடிப்ப, 
பொன்றினவன் எழுந்தாற்போல், புடை 
   பெயர்ந்து அங்கு எழுந்திருந்தான். 

அரசன் இராவணனின் கட்டளையை 
வணங்கி ஏற்று, 
ஆயிரம் அரக்கர்கள் அயர்ந்துறங்கும்
கும்பகர்ணன் அருகில் சென்று 
தம் கடுமையான செயல் முறைகளால் 
அவன் இரண்டு கன்னத்திலும் 
உலக்கைகளால் பலமாய் இடித்து 
இறந்தவன் எழுந்தது போல,
படுத்துக்கிடந்த இடத்தை விட்டு அசைந்தான்.


7349.
'வானரப் பெருந் தானையர், மானிடர், 
கோ நகர்ப் புறம் சுற்றினர்; கொற்றமும் 
ஏனை உற்றனர்; நீ அவர் இன் உயிர் 
போனகத் தொழில் முற்றுதி, போய்' என்றான். 

(கும்பகர்ணன் உறக்கம் நீங்கி, வர)

'இரண்டு மானிடர்,
வானர சேனையோடு வந்திருக்கின்றனர்,
நம் நகரைச் சுற்றி வளைத்திருக்கின்றனர்,
இதுவரை யாரும் பெறாத வெற்றியைப் 
பெற்றுருக்கின்றனர்,
நீ அவர்களோடு போர் செய், போ,
அவர்களைக் கொன்று, பின் வா'
என்று இராவணன் கூறினான்.


7350.
'ஆனதோ வெஞ் சமம்? அலகில் கற்புடைச் 
சானகி துயர் இனம் தவிர்ந்தது இல்லையோ? 
வானமும் வையமும் வளர்ந்த வான் புகழ் 
போனதோ? புகுந்ததோ, பொன்றும் காலமே?'

'கொடிய போர் தொடங்கிவிட்டதா ?
கற்பில் சிறந்த சீதையின் துயர் இன்னும் 
தீரவில்லையா ?
வானம் வரை, மண்ணுலகம் முழுவதும் 
வளர்ந்த  உன் புகழ் அழிந்ததோ ?
அழிவு காலம் நெருங்கிவிட்டதோ ?'
என்று கேட்டான் கும்பகர்ணன்.



7362.
'மறம் கிளர் செருவினுக்கு உரிமை 
   மாண்டனை; 
பிறங்கிய தசையொடு நறவும் 
   பெற்றனை; 
இறங்கிய கண் முகிழ்த்து, இரவும் 
   எல்லியும் 
உறங்குதி, போய்' என, உளையக் 
   கூறினான்.

'வீரம் விளங்க வேண்டிய போருக்கு 
தகுதியில்லாதவனாகிவிட்டாய்.
ஊன் நிறைய உண்டு, 
உண்டுக் கிடப்பாய்,
அருந்த நிறைய கள் இருக்கு,
குடித்து மகிழ்வாய்,
குழி போன்ற கண்களை மூடிக்கொண்டு 
இரவும் பகலும் உறங்கியிருப்பாய்'
என்று கும்பகர்ணன் மனம் வருந்த 
இராவணன் பேசினான்.


7366.
'வென்று இவண் வருவென் என்று 
   உரைக்கிலேன்; விதி 
நின்றது; பிடர் பிடித்து உந்த நின்றது; 
பொன்றுவென்; பொன்றினால், பொலன் 
   கொள் தோளியை, 
"நன்று" என, நாயக விடுதி; நன்றுஅரோ.

(இராவணன் அவ்வாறு உரைத்ததும் )

'வென்று திரும்பி வருவேன் என்று 
உரைக்கமுடியாத நிலையில் உள்ளேன்;
விதி வலியது, 
கழுத்தைப் பிடித்துத் தள்ளுகிறது,
இறந்து விடுவேன் நான், இறந்த பின், 
அழகிய தோள்களுடைய சீதையை 
விட்டுவிடு;
'அதுவே உனக்கு நன்மை பயக்கும்'
இதைப் புரிந்து கொள்' என்று கூறிவிட்டு 
கும்பகர்ணன் போருக்குப் புறப்பட்டான்.


( தொடரும் )

No comments:

Post a Comment