Friday, April 17, 2020

கம்பராமாயணம் 98



7375.
ஆயிரம் கோள் அரி, ஆளி ஆயிரம்,
ஆயிரம் மத கரி, பூதம் ஆயிரம்,
மா இரு ஞாலத்தைச் சுமப்ப வாங்குவது
ஏய் இருஞ் சுடர் மணித் தேர் ஒன்று ஏறினான்.

ஆயிரம் சிங்கங்களோடு, கூடவே
ஆயிரம் ஆளிகள் துணையோடு
ஆயிரம் மத யானைகள் உடன் வர
ஆயிரம் பூதங்கள் சேர்ந்திழுக்க
மிகப்பெரிய பூமியைச் சுமப்பன் போல்
ஒப்பில்லா ஒளியுள்ள மணிகள்
பதிக்கப் பெற்ற தேர் ஒன்றில் ஏறி,
கும்பகருணன் போருக்குப் புறப்பட்டான்.



7383.
'எழும் கதிரவன் ஒளி மறைய, எங்கணும் 
விழுங்கியது இருள், இவன் மெய்யினால்; 
   வெரீஇ, 
புழுங்கும் நம் பெரும் படை இரியல் 
   போகின்றது; 
அழுங்கல் இல் சிந்தையாய்! ஆர் கொலாம்
   இவன்?*

'சூரிய ஒளியே மறைத்துவிட்டது, 
எல்லா இடமும் இருளால் நிரம்ப விட்டது, 
இந்த அரக்கனின் பேருடம்பினால் 
இது நிகழுது,
நமது பெரிய படை அஞ்சி நடுங்கி 
இங்கும் அங்கும் ஓடுகிறது, 
வருந்துதல் இல்லாத மனமுடைய வீடணா,
இவன் யார் என்று கூறுவாயா ?'
என்று கேட்டான் இராமன்.



7385.
ஆரியன் அனைய கூற, அடி இணை 
   இறைஞ்சி,  'ஐய! 
பேர் இயல் இலங்கை வேந்தன் பின்னவன்; 
   எனக்கு முன்னோன்;
கார் இயல் காலன் அன்ன கழல் கும்ப
   கருணன் என்னும்
கூரிய சூலத்தான்' என்று, அவன் நிலை 
   கூறலுற்றான்;

இராமன் அவ்வாறு  கேட்க, வீடணன் 
அவன் அடி வணங்கி, பேசலுற்றான்.
'ஐயா,  நிறைய சிறப்புடைய இலங்கை
வேந்தன் இராவணனுக்குப் பின்பிறந்தவன்,
எனக்கு முன்  பிறந்தவன், இவன்; 
கருமை நிறம் பொருந்திய 
இயமனை ஒத்தவன்;
வீரக்கழல் அணிந்தவன், 
கும்பகருணன் என்னும் பெயர் கொண்டவன்;
கூர்மையான சூலத்தைக் கையிலே 
வைத்திருப்பவன்'
என்று வீடணன் அவனது தன்மையைக் 
கூறத் தொடங்கினான்.


7397.
' "நன்று இது அன்று நமக்கு" எனா, 
ஒன்று நீதி உணர்த்தினான்; 
இன்று காலன் முன் எய்தினான்' 
என்று சொல்லி, இறைஞ்சினான். 

'பிறர் மனை கவர்ந்து சிறை வைத்த செயல் 
நமக்கு நன்மையைத் தருவது அன்று'
என்று அறச் சொற்களை இராவணனுக்கு 
எடுத்துச் சொன்னவன்; 
அதை அவன் கேளாமையால்,
சாகத் துணிந்து யமன் முன்
வந்து நிற்பவன்' என்று கூறி 
இராமனை வணங்கி நின்றான் வீடணன்.


(இராமனிடம் அடைக்கலம் அடைந்திடு 
என்று சொன்ன வீடணனிடம் )

7426.
'நீர்க் கோல வாழ்வை நச்சி, நெடிது நாள் 
   வளர்த்துப் பின்னைப்
போர்க் கோலம் செய்து விட்டாற்கு உயிர் 
   கொடாது, அங்குப் போகேன்;
தார்க் கோல மேனி மைந்த! என் துயர் 
   தவிர்த்தி ஆகின்,
கார்க் கோல மேனியானைக் கூடுதி, 
   கடிதின் ஏகி'

நீரில்  வரைந்த கோலம் போன்று 
விரைந்து அழியும் வாழ்வை விரும்பி,
என்னை இத்தனை நாள் வளர்த்து, இன்று
தன் கையாலேயே போர்க்கோலம் 
பூணுவித்துப் போர்க்குச் செல் என்ற 
இராவணனுக்காக என்னுயிரைக் 
கொடுக்காமல் எப்படி இருப்பது?
அந்த இராமனிடம் போய்ச் சேர மனம் 
விரும்பாது,
மார்பில் மாலையணிந்த அழகிய மைந்தா, 
என் துன்பத்தைப் நீ போக்க விரும்பினால்,   
கரிய அழகிய  திருமேனியுடைய  இராமன் 
இருக்குமிடம் இப்போதே சென்று விடு'
என்று கும்பகர்ணன் கூறினான்.




7450.
வாரியின் அமுக்கும்; கையால் மண்ணிடைத் 
   தேய்க்கும்; வாரி
நீரிடைக் குவிக்கும்; அப்பால், நெருப்பிடை 
   நிமிர வீசும்;
தேரிடை எற்றும்; எட்டுத் திசையினும் செல்லச் 
   சிந்தும்;
தூரிடை மரத்து மோதும்; மலைகளில் 
   புடைக்கும், சுற்றி.

கும்பகர்ணன் வானர சேனையை, 
கடலில் அமுக்கினான்; 
கையினால் வாரி எடுத்து
நிலத்தில் தேய்த்தான்;
நீரில் மூழ்கச் செய்தான்; 
மேலும் நெருப்பில் நிற்கும்படி வீசினான்;
தேரில் அடித்து  அழித்தான்;
எட்டுத் திசைகளிலும் சிதறிக் கிடக்கும்படி 
தூக்கியெறிந்தான்.
மரத்தின் அடிப்பகுதியில்
மோதி அழித்தான்; 
சுழற்றி மலைகளில் மோதி அழித்தான்.

( தொடரும் )

No comments:

Post a Comment