Tuesday, April 21, 2020

கம்பராமாயணம் 102


அதிகாயன் வதைப் படலம்

7737.
‘உம்பிக்கு உயிர் ஈறு செய்தான் ஒருவன்
தம்பிக்கு உயிர் ஈறு சமைத்து, அவனைக்
கம்பிப்பது ஓர் வன் துயர் கண்டிலனேல்,
நம்பிக்கு ஒரு நன் மகனோ, இனி நான்?

'உன் தம்பியைக் கொன்றான் ஒருவன்,
அவன் தம்பியைக் கொல்வேன் நான்,
அவ்வாறு கொன்று அந்த இராமனை
பயந்து நடுங்க வைப்பேன்,
அப்படி செய்யவில்லையேல்,
உனக்கு மகன் இல்லை நான்'
என்று சொல்லிவிட்டுப்
போருக்குக் கிளம்பினான் அதிகாயன்.



7759.
‘"அம் தார் இளவற்கு அயர்வு எய்தி அழும்
தம் தாதை மனத்து இடர் தள்ளிடுவான்,
உந்து ஆர் துயரோடும் உருத்து எரிவான்
வந்தான்" என, முன் சொல் வழங்குதியால்.

அழகிய மாலை அணிந்த கும்பகருணன்
இறந்ததன் காரணமாக
வருந்தி அழும் என் தந்தையின் 
மனத் துன்பத்தைப் போக்கும் பொருட்டு;   
துயரத்தோடும் சினத்தோடும் எரிகின்ற 
அதிகாயன் வந்துள்ளான்  என
முதலில் சொல், போ' என்று 
இராம இலக்குமணரிடம் தூது அனுப்பினான்.



(அதிகாயன் பின்புலத்தை வீடணன் கூற )

7807.
‘ஏகாய், உடன் நீயும்; எதிர்த்துளனாம்
மாகாயன் நெடுந் தலை வாளியொடும்
ஆகாயம் அளந்து விழுந்ததனைக்
காகாதிகள் நுங்குதல் காணுதியால்.
'இலக்குவனுடன் போர்க் களத்துக்கு 
நீயும் செல்;
எதிர்த்து போர் புரிய வந்துள்ள 
அந்த அதிகாயனுடைய பெரிய தலை 
அம்போடு ஆகாயத்தை அளந்து 
விழுவதனைப் போய்க் காண்,
காகம்  முதலிய  பறவைகள்  
கொத்தி உண்பதனையும் காண்'
என்று இராமன் வீடணனிடம் கூறினான்.


7842.
தாதையை, தம்முனை, தம்பியை, தனிக்
காதலை, பேரனை, மருகனை, களத்து
ஊதையின் ஒரு கணை உருவ, மாண்டனர்-
சீதை என்று ஒரு கொடுங் கூற்றம் தேடினார்.

சீதை என்ற பெயர் கொண்ட 
ஒரு கொடிய யமனைத் தேடிய அரக்கர்கள்,
இலக்குவனோடு நடந்த போரில்,
பெருங்காற்றுப் போன்ற கணை ஊடுருவ
தந்தையை இழந்தனர், 
தமயனையும், தம்பியையும், 
தன் மகனை, பேரனை, மருமகனையும் 
இழந்தனர். 


(பிரம்மாஸ்திரத்தை ஏவ வாயுதேவன் உரைக்க)

7931.
‘நன்று’ என உவந்து, வீரன், நான்முகன் 
   படையை வாங்கி
மின் தனி திரண்டது என்னச் சரத்தொடும் 
   கூட்டி விட்டான்
குன்றினும் உயர்ந்த தோளான்
   தலையினைக் கொண்டு, அவ் வாளி
சென்றது, விசும்பினூடு; தேவரும்
   தெரியக் கண்டார்.
நன்றி நவின்றான் வீரன் இலக்குவன்.
பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்தான்.
மின்னல் தோன்றியது போன்று 
அம்பு செலுத்தினான்; 
அந்த அம்பு, குன்று போன்ற தோள்களை 
உடைய அதிகாயனது தலையை 
அறுத்துக் கொண்டு வான் வழியே சென்றது
அக்காட்சியை தேவர்களும் கண்டனர்.



7977.
நின்றார்கள் தடுப்பவர் இன்மை நெளிந்தார்,
பின்றாதவர் பின்றி இரிந்து பிரிந்தார்;
வன் தாள் மரம் வீசிய வானர வீரர்
கொன்றார்; மிகு தானை அரக்கர் குறைந்தார்.

இதுவரை பின்னடையாத அரக்க வீரர்கள் 
குரங்குப்படைகளைத் தடுத்திட தலைமை
யாரும் இல்லாமையால்  தத்தளித்தனர்; 
நிலை கெட்டுத் தடுமாறிப் பிரிந்தனர்;
வலிய மரங்களை வானர வீரர்கள் வீசி 
அரக்கரின் பெரும் படையைக் கொன்றனர்;
அதனால் அரக்க வீரர் எண்ணிக்கையில் 
குறைந்தனர்;


( தொடரும் )

No comments:

Post a Comment