Wednesday, April 8, 2020

கம்பராமாயணம் 89


ஒற்றுக் கேள்விப் படலம் 

6750.
நெற்றியின் அரக்கர்பதி செல்ல, நிறை நல் நூல்
கற்று உணரும் மாருதி கடைக் குழை வர, தன்
வெற்றி புனை தம்பி ஒரு பின்பு செல, வீரப்
பொன் திரள் புயக் கரு நிறக் களிறு போனான்.

முன்னே அரக்க மன்னன் வீடணன் செல்ல
நல்ல நூல்களைக் கற்றுணர்ந்த அனுமன்
சேனையின் பின் பக்கம் செல்ல,
தனக்கு வரும் வெற்றியையே, தன்
அணியாகக் கொள்ளும் தம்பி பின்னால்
ஒரு பக்கமாகச்  செல்ல,
வீரம் மிக்க  அழகிய திரண்ட
கைகளையுடைய;
கரிய நிறம் பெற்ற ஆண்யானை
போன்ற இராமன், அந்த அணையின் 
மேல் நடந்து சென்றான்.


6758.
பெருந் தவம் முயன்று அமரர் பெற்றிடும் வரத்தால்,
மருந்து அனைய தம்பியொடும், வன் துணைவரோடும்,
அருந்ததியும் வந்தனை செய் அம் சொல் இள வஞ்சி
இருந்த நகரின் புறன் ஓர் குன்றிடை இறுத்தான்.

பெரிய தவங்களை முயன்று செய்து
தேவர்கள்  பெற்ற வரத்தின் பயனாக,
அமுது போன்ற தம்பி துணையிருக்க,
ஆற்றல் மிக்க நண்பர்கள் அருகிலிருக்க
கற்பில் சிறந்த அருந்ததியும்
வணங்கத்தக்க அழகு மொழி பேசும் 
சீதாதேவி சிறையிருந்த
இலங்கை நகரின் புறத்தே,
ஒரு குன்றின்^ அருகிலே
இராமன் தங்கினான்.


^ - சுவேல மலை

6768.
இற்றிது காலம் ஆக, இலங்கையர் வேந்தன்
   ஏவ,
ஒற்றர் வந்து அளவு நோக்கி, குரங்கு என
   உழல்கின்றாரைப்
பற்றினன் என்ப மன்னோ-பண்டு தான் பல
   நாள் செய்த
நல் தவப் பயன் தந்து உய்ப்ப, முந்துறப்
   போந்த நம்பி.


இவ்வாறு இராமன் இலங்கையில்
ஒருபுறம் தங்கியிருக்க
இலங்கையின் தலைவன் இராவணன் ஏவ,
வேவு பார்க்க குரங்குகள் போல வேடமிட்டு
ஒற்றர்கள் வர,
வானரப் படையின் திறமை, அளவு
ஆகியவற்றை ஆராய,
முன்பு பல நாள் தான் செய்த தவப்பயனாக
இராமன் திருவடிகளைப் பற்றி
அடைக்கலம் கேட்ட வீடணன்,
அவ் ஒற்றர்களைக் கண்டு கொண்டான்.



6778.
'எல்லை இல் இலங்கைச் செல்வம் இளையவற்கு
   ஈந்த தன்மை
சொல்லுதிர்; மகர வேலை கவிக் குல வீரர் 
   தூர்த்துக்
கல்லினின் கடந்தவாறும் கழறுதிர்; காலம் 
   தாழ்த்த
வில்லினர் வந்தார் என்றும் விளம்புதிர்,
   வினையம் மிக்கீர்!

'அளவில்லா செல்வம் நிறைந்த இலங்கையை 
தம்பி வீடணனுக்கு, நான் கொடுத்துவிட்ட 
செய்தியினைச் சொல்லுங்கள்; 
மீன்கள் நிறைந்த கடலை, வானர வீரர்கள்
மலைகளையிட்டு நிரப்பித்  தாண்டி  வந்துவிட்ட
திறத்தையும் போய்ச் சொல்லுங்கள்; 
இத்துணைக் காலம் தாமதித்திருந்த வில்லினர்
வந்துவிட்டனர் என்பதனையும் சொல்லுங்கள்;
செய்யும் தொழிலில்  திறம் வாய்ந்தோரே!'
என்று இராமன் இராவணனுக்கு 
செய்தி சொல்லி அனுப்பினான்.



6792.
'சுட்டவா கண்டும், தொல் நகர் வேலையைத்
தட்டவா கண்டும், தா அற்ற தெவ்வரைக்
கட்டவா கண்டும், கண் எதிரே வந்து
விட்டவா கண்டும், மேல் எண்ண வேண்டுமோ?'


'நமது தொன்மை வாய்ந்த இலங்கையை
அனுமன் எரித்ததைக் கண்ட பின்னும்,
அணை கட்டி கடலைத் தடுத்து கரை வந்த 
அவர்கள் திறமையைக் கண்ட பின்னும்,
ஆற்றல் பெற்ற கரன் முதலிய பகைவர்கள் 
அழிந்ததைக் கண்ட பின்னும்,
இப்போது நம் கண்ணுக்கெதிரேயே 
வந்து விட்டதனைக் கண்ட பின்னும்
இன்னும் சிந்தனை செய்வது தேவையா ?'
என்றான் மாலியவான், 
இராவணனின் போர் வீரன். 


( தொடரும் )

No comments:

Post a Comment