Saturday, April 11, 2020

கம்பராமாயணம் 92


அணி வகுப்புப் படலம்

6946.
மானத்தான் ஊன்றப்பட்ட மருமத்தான்,
   வதனம் எல்லாம்
கூனல் தாமரையின் தோன்ற, வான்
   தொடும் கோயில் புக்கான்.
பானத்தான் அல்லன்; தெய்வப் பாடலான்
   அல்லன்; ஆடல்
தானத்தான் அல்லன்; மெல்லென் சயனத்தான்;
   உரையும் தாரான்.


மானம் தாக்கப்பட்டதை மனதுள்
எண்ணிக் குமுறினான் இராவணன்.
முகங்கள் பத்தும் வாடி வதங்கிய
தாமரைகள் போல் தோற்றமளித்தான்.
வான் அளவு உயர்ந்த
தன் அரண்மனைக்குள் நுழைந்தான்,
பானங்கள் எதையும் பருகாது,
தெய்வப் பாடல்களைக் கேட்டு மகிழாது
ஆடல் மகளிரின் நாட்டியம் எதையும்
காண விரும்பாது ,
யாரோடும் பேசாது, வாய் திறவாது,
மெத்தென்ற படுக்கையிற் விழுந்தான்.


 6956.
அளந்து அறிவு அரியர் ஆய அமைச்சரை
   அடங்க நோக்கி,
'வளைந்தது குரங்கின் சேனை, வாயில்கள்
   தோறும் வந்து;
விளைந்தது பெரும் போர் என்று விட்டது;
   விடாது, நம்மை;
உளைந்தனம்; என்ன எண்ணி, என் செயற்கு
   உரிய?' என்றான்.


அளவற்ற அறிவுடைய அமைச்சர் கூட்டம்
முழுவதையும்  நோக்கினான்;
'கோட்டை வாயில்கள் தோறும் 
வானர சேனைவந்து வளைந்து நிற்கிறது;
பெரிய யுத்தம் விளைந்தது விட்டது;
இனி போர் நம்மை விடாது,
நான் மனம்  நொந்துள்ளேன்,
என்ன செய்யப் போகிறோம் நாம்?'
என்று கேட்டான்.


அங்கதன் தூதுப் படலம்

6976.
அரக்கர் கோன் அதனைக் கேட்டான்,
   'அழகிற்றே ஆகும்' என்றான்;
குரக்கினத்து இறைவன் நின்றான்,
   'கொற்றவர்க்கு உற்றது' என்றான்;
'இரக்கமது இழுக்கம்' என்றான், இளையவன்;
   'இனி, நாம் அம்பு
துரக்குவது அல்லால், வேறு ஓர் சொல்
   உண்டோ?' என்னச் சொன்னான்.

(கடைசியாய், ஒரு தூது அனுப்புவோம்
என்று இராமன் சொல்ல)
அரக்கர்களின் மன்னனாக ஆக்கப்பட்ட
வீடணன், இராமன் கூறியதைக் கேட்டான்,
'நன்றாயுள்ளது' என்று பாராட்டினான்;
வானரங்களின் மன்னனாகிய  சுக்கிரீவன்
எழுந்து நின்று 'வேந்தருக்கு ஏற்றதே இது'
என்றான்;
இலக்குவன் 'இரக்கம் காட்டுவது இழுக்கு'
என்றும், 'நாம் இனி அம்பால்  சொல்வது
அன்றி,  சொல்வதற்கு வேறு ஓர் சொல்லும்
உண்டோ?' என்று வெகுண்டுக் கூறினான்.


6979.
'அன்னவன் தனக்கு, மாதை விடில்,
   உயிர் அருளுவாயேல்,
"என்னுடை நாமம் நிற்கும் அளவு எலாம்
   இலங்கை மூதூர்
மன்னவன் நீயே" என்று, வந்து அடைந்தவற்கு
   வாயால்
சொன்ன சொல் என் ஆம்? முன்னம் சூளுறவு
   என் ஆம்? தோன்றால்!'

'கொடுமைகள் பல புரிந்த இராவணன்,
ஒருவேளை சீதையை விட்டு விட்டால், நீ
அவனுக்கு உயிர்ப்பிச்சை அளித்துவிட்டால்,
'என் பெயர் இவ்வுலகில் இருக்கும் காலம்
வரை, நீயே இலங்கையின் மன்னன் என்று
அடைக்கலம் அடைந்தவருக்கு வாக்கு
தந்தாயே, அது என்னாவது ?
முன்பு தண்டகாரண்யத்தில் முனிவர்கட்கு
நீ அளித்த சபதம் என்னாவது ?
புகழ் மிக்க தலைவனே!'
என்று கேட்டான் இலக்குவன்.



6981.
'அயர்த்திலென்; முடிவும் அஃதே; ஆயினும், 
   அறிஞர் ஆய்ந்த
நயத் துறை நூலின் நீதி நாம் துறந்து 
   அமைதல் நன்றோ?
புயத் துறை வலியரேனும், பொறையொடும் 
   பொருந்தி வாழ்தல்
சயத் துறை; அறனும் அஃதே' என்று இவை 
   சமையச் சொன்னான்.

'தந்த வாக்குறுதி எதையும் மறக்கவில்லை,
முடிவில் போர் தான் நிகழப்போகிறது,
இதில் மாற்றுக் கருத்தில்லை, எனினும் 
அறிஞர்கள் ஆராய்ந்து கூறிய நீதிகளை
நாமே நீக்கி வாழ்தல் நல்லதில்லை,
வலிமை மிக்கவரேயானாலும் பொறுமை
பூண்டு வாழ்வதே வெற்றிக்கு வழியாகும்;
அரச நீதியும் அவ்வாறே கூறுகிறது'
என்று இத்தகைய மொழிகளை 
மனதில் பதியுமாறு இராமன் கூறினான்.


( தொடரும் )

No comments:

Post a Comment