Wednesday, April 29, 2020

கம்பராமாயணம் 110


இராவணன் சோகப் படலம்


9188.
பல்லும் வாயும் மனமும் தம் பாதமும்
நல் உயிர்ப் பொறையோடு நடுங்குவார், -
'இல்லை ஆயினன், உன் மகன் இன்று' எனச்
சொல்லினார் - பயம் சுற்றத் துளங்குவார்.

(போர்க்களத்திலிருந்து கெட்ட செய்தி
கொண்டுவந்த தூதுவர்களுக்கு,)
பற்களும், வாயும் மனமும் பாதமும்
நடுக்கமுற்றன
உயிர் பயம் உண்டாகின;
அச்சம் சூழ்ந்து கொள்ள கலங்கினர்;
நிலைதடுமாறினர்;
(இறந்து விட்டான் என்று கூறப் பயந்து)
'உன் மகன் இன்று இல்லாமற் போனான்'
என்று இராவணனிடம் கூறினர்.


9219.
கண்டிலன் தலை; 'காந்தி, அம் 
   மானிடன்
கொண்டு இறந்தனன்' என்பது 
   கொண்டவன், 
புண் திறந்தன நெஞ்சன், பொருமலன், 
விண் திறந்திட, விம்மி, அரற்றினான்: 
 
(இந்திரசித்தின்  கையையும் உடம்பையும் 
கண்ட இராவணன்) 
தலையைக் காணாது மனம் எரிந்தான். 
இலக்குவன் எடுத்துச் சென்றனன் என்று 
அறிந்து கொண்டான்.
புண் திறந்தாற் போன்ற நெஞ்சத்தோடு 
பொருமுனான். 
விண்முகடு பிளக்குமாறு விம்மி விம்மி 
வாய்திறந்து அழத் தொடங்கினான்.


9230.
தலையின் மேல் சுமந்த கையள், 
   தழலின்மேல் மிதிக்கின்றாள் போல்
நிலையின்மேல் மிதிக்கும் தாளன், 
   நேசத்தால் நிறைந்த நெஞ்சள்,
கொலையின் மேல் குறித்த வேடன் 
   கூர்ங் கணை உயிரைக் கொள்ள,
மலையின்மேல் மயில் வீழ்ந்தென்ன, 
   மைந்தன்மேல் மறுகி வீழ்ந்தாள்.

 
தலையின் மேல் கையை வைத்தவளாய், 
நெருப்பின் மேல் நிற்பவள் போல 
நிலையாக உள்ள தரையின் மேல் 
நிலையில்லாது பதைபதைக்கும் 
பாதங்களை உடையவளாய் 
மகன் மேல் வைத்த பேரன்பினால் 
துக்கத்தால்  நிறைந்த நெஞ்சுடையவளாய், 
கொலை செய்தவர்க்கென்று எய்திய 
கூரிய அம்பு உயிரை வாங்க
ஒரு மயில் மலையின் மேல் வீழ்ந்தாற்போல
மகனது உடம்பின் மேல் சுழன்று வீழ்ந்தாள்,
மண்டோதரி. 
 


மூலபல வதைப் படலம்

9299.
'வானரப் பெருஞ் சேனையை யான் ஒரு 
   வழி சென்று,
ஊன் அறக் குறைத்து, உயிர் உண்பென்; 
   நீயிர் போய், ஒருங்கே
ஆன மற்றவர் இருவரைக் கோறிர் 
   என்று அறைந்தான் -
தானவப் பெருங் கரிகளை வாள் 
   கொண்டு தடிந்தான்.

'நான் ஒரு பக்கம் போகிறேன்; 
வானரப்  பெரும்படைகளை, உடல்கள் 
சிதையும்படி வெட்டி உயிர் குடிக்கிறேன்;
நீங்களனைவரும் ஒன்றாகச் செல்லுங்கள்;
வானரர் தவிர இராம இலக்குமனர் 
இருவரையும் கொல்லுங்கள்' 
என்று கட்டளையிட்டான் இராவணன்.
 

9359.
'மாருதியோடு நீயும், வானரக்கோனும், 
   வல்லே, 
பேருதிர் சேனை காக்க; என்னுடைத் 
   தனிமை  பேணிச்
சோருதிர்என்னின், வெம் போர் தோற்றும், 
   நாம்' என்னச்சொன்னான்,
வீரன்; மற்று அதனைக் கேட்ட இளையவன் 
   விளம்பலுற்றான்:

 
'அனுமனோடு சேர்ந்து சுக்கிரீவனும் நீயும்
வானரப் படையைக் காப்பதற்கு 
விரைவாகப் புறப்படுங்கள்; 
மூலப் படையை நான் பார்த்துக் 
கொள்கிறேன்;
என் தனிமையைப் பெரிதாக எண்ணி 
தளர்வீர்களானால், 
நாம் இந்தப் போரிலே தோற்க நேரிடும்'
என்று இராமன் சொன்னான்; 

( தொடரும் )

No comments:

Post a Comment