மருத்துமலைப் படலம்
8704.
நோக்கினான்; கண்டான், பண்டு, இவ்
உலகினைப் படைக்க நோற்றான்
வாக்கினால் மாண்டார் என்ன, வானர
வீரர் முற்றும்
தாக்கினார் எல்லாம் பட்ட தன்மையை;
விடத்தைத் தானே
தேக்கினான் என்ன நின்று, தியங்கினான்,
உணர்வு தீர்ந்தான்
வீடணன் வந்தான்,
போர்களத்துக் காட்சிகளைக் கண்டான்,
வானரவீரர் எல்லோரும் தாக்கப்பட்டுக்
கிடக்கும் நிலையைக் கண்டான்,
இவ் உலகத்தைப் படைத்தவன் சாபத்தால்
மாண்டனரோ என்று சிந்தித்தான்.
தானே விடத்தை எடுத்துக் குடித்தவன்
போன்ற நிலைக்குத் தள்ளப்பட்டான்,
மயங்கி உணர்வு நீங்கினான்.
8713.
கண்டு, தன் கண்களூடு மழை எனக்
கலுழி வார,
'உண்டு உயிர்' என்பது உன்னி, உடற்
கணை ஒன்று ஒன்று ஆக,
விண்டு உதிர் புண்ணின் நின்று மெல்லென
விரைவின் வாங்கி,
கொண்டல் நீர் கொணர்ந்து, கோல
முகத்தினைக் குளிரச் செய்தான்
வீடணன் போர்க்களத்தில் அனுமனையும்
கண்டான்,
தன் விழிகளிலிருந்து மழை போன்று
கண்ணீர் பெருக்கினான்.
அனுமான் இறக்கவில்லை, உயிர் உண்டு
என்று அனுமானித்தான்.
உடல் பிளவுபட்டு உதிரம் ஒழுகாத
இடத்திலிருந்து அம்புகளை நீக்கினான்.
தண்ணீரைக் கொண்டு வந்து
அனுமானின் அழகிய முகத்தைக்
குளிரச் செய்தான்.
8729.
'மாண்டாரை உய்விக்கும் மருந்து ஒன்றும்,
உடல் வேறு வகிர்களாகக்
கீண்டாலும் பொருந்துவிக்கும் ஒரு மருந்தும்,
படைக்கலங்கள் கிளர்ப்பது ஒன்றும்,
மீண்டேயும் தம் உருவை அருளுவது ஓர்
மெய்ம் மருந்தும், உள; நீ, வீர!
ஆண்டு ஏகி, கொணர்தி' என அடையாளத்
தொடும் உரைத்தான், அறிவின் மிக்கான்.
'இறந்தவர்களை எழுப்பும் மருந்து
ஒன்றுண்டு;
உடல் அறுபட்டவர்களை ஒன்றிணைத்து
ஒட்டச் செய்யும் மருந்து ஒன்றுண்டு;
அம்புகள் தைத்திருக்கும் இடங்களை
சரி செய்யும் மருந்து ஒன்றுண்டு;
மீண்டும் உருவை திருப்பித் தரும்
மருந்தும் ஒன்றுண்டு;
அனுமனே, வீரனே, நீ உடனே சென்று
இவற்றைக் கொண்டுவா' என்றான்,
அவற்றின் அடையாளங்களையும் சொல்லி
அனுப்பினான், அறிவு நிறைந்த சாம்பவான்.
8763.
பாய்ந்தனன்; பாய்தலோடும், அம் மலை
பாதலத்துச்
சாய்ந்தது; காக்கும் தெய்வம் சலித்தன,
தடுத்து வந்து,
காய்ந்தது, 'நீதான் யாவன்? கருத்து
என்கொல்? கழறுக!' என்ன,
ஆய்ந்தவன் உற்றது எல்லாம் அவற்றினுக்கு
அறியச் சொன்னான்.
நீலமலை தாண்டி மருத்துமலை கண்டான்,
கண்டதும் பாய்ந்தான், பாய்ந்த வேகத்தில்
அம்மலை பாதாளத்தினுள் சாய்ந்தது,
அதற்கு காவலாக இருந்த தெய்வங்கள்
கோபம் கொண்டனர்,
அனுமானைத் தடுத்து நிறுத்தினர்,
'யார் நீ? என்ன செய்ய முயலுகிறாய், சொல்'
என்று கேட்டனர்.
அனுமானும் தன் வந்த காரணத்தை
அவர்களுக்கு புரியுமாறு சொன்னான்.
8802.
காற்று வந்து அசைத்தலும், கடவுள் நாட்டவர்
போற்றினர் விருந்து உவந்திருந்த புண்ணியர்
ஏற்றமும் பெரு வலி அழகொடு எய்தினார்,
கூற்றினை வென்று, தம் உருவும் கூடினார்
அனுமன் மருத்துமலையோடு போர்க்களம் வர
அந்த மலையின் மேலிருந்து வீசிய காற்று
இறந்தவர்களை உயிர்ப்பிக்க,
விருந்து உண்ண வானுலகம் சென்ற
வானர வீரர்கள் திரும்பி வந்தனர்,
பெரும் வலிமையோடு அழகோடு விளங்கினர்,
எமனை வென்று தம் உருவம் பெற்றனர்.
8817.
'உய்த்த மா மருந்து உதவ, ஒன்னலார்,
பொய்த்த சிந்தையார், இறுதல் போக்குமால்;
மொய்த்த குன்றை அம் மூல ஊழிவாய்
வைத்து, மீடியால்-வரம்பு இல் ஆற்றலாய்!'
நீ கொண்டு வந்த மருந்து உதவியது,
இம்மலை இங்கேயே இருந்தால்
நம் பகைவர்களும் மீண்டும் உயிர் பெறுவர்,
அதனால் இதனை இப்பொழுதே
பெயர்த்து எடுத்த இடத்தில் வைத்துவிட்டு
சீக்கிரம் திரும்பிடு! ஆற்றல் மிக்கவனே'
என்று சாம்பவன் அனுமானிடம் சொன்னான்.
( தொடரும் )
No comments:
Post a Comment