நாக பாசப் படலம்
8005.
கண்டான், இறை ஆறிய நெஞ்சினன்,
கைகள் கூப்பி,
'உண்டாயது என், இவ்வுழி?' என்றலும்,
'உம்பிமாரைக்
கொண்டான் உயிர் காலனும்; கும்ப
நிகும்பரோடும்
விண் தான் அடைந்தான், அதிகாயனும்
வீர!' என்றான்.
இந்திரசித்து வந்தான்,
இராவணனைக் கண்டான்,
நெஞ்சம் ஆறினான்,
தன் இரு கைகளைக் கூப்பி வணங்கினான்,
இவ்விடத்தில் சூழ்ந்திருக்கும் துயரத்திற்கு
என்ன காரணம் என்று வினவினான்,
'உன் தம்பியரைக் கொன்றான் காலன்,
கும்பன் நிகும்பன் இருவரோடும்
அதிகாயனும் இறந்தான், வீரனே'
என்றான் இராவணன்.
8010.
'என், இன்று நினைந்தும், இயம்பியும்,
எண்ணியும்தான்?
கொன் நின்ற படைக்கலத்து எம்பியைக்
கொன்றுளானை,
அந் நின்ற நிலத்து அவன் ஆக்கையை
நீக்கி அல்லால்,
மன் நின்ற நகர்க்கு இனி வாரலென்;
வாழ்வும் வேண்டேன்.
நடந்தவற்றை நினைத்துப்பார்த்தும்
உன் மீது பழி சொல்லியும்,
என்ன பயன் இப்போது ?
கொல்லும் படைக்கலன்கள் ஏந்திய
என் தம்பியைக் கொன்றவனை,
அந்த இலக்குமனை, அவன் உடம்பை,
அந்த போர்க்களத்திலேயே கொல்லுவேன்,
அவ்வாறு கொல்லாவிட்டால், இந்த
இலங்கை நகருக்கு திரும்ப வரமாட்டேன்,
உயிர் வாழவும் விரும்பமாட்டேன்,
என்றான் இந்திரசித்து.
8029.
'யார், இவன் வருபவன்? இயம்புவாய்!' என,
வீர வெந் தொழிலினான் வினவ, வீடணன்,
'ஆரிய! இவன் இகல் அமரர் வேந்தனைப்
போர் கடந்தவன்; இன்று வலிது போர்'
என்றான்.
'இதோ இங்கு வருகின்றானே,
இவன் யார் ?' என்று இலக்குவன் கேட்டான்.
'தேவர்களின் தலைவன் இந்திரனை
வென்றவன்,
அதனால் இந்திரஜித் என்ற
பெயர் பெற்றவன்,
இன்றைய போரை மிகக் கடுமையானதாய்
ஆக்க வல்லவன்'
என்று வீடணன் உரைத்தான்.
விட்டனன் அரக்கன் வெய்ய படையினை;
விடுத்தலோடும்,
எட்டினோடு இரண்டு திக்கும் இருள் திரிந்து
இரியஓடி,
கட்டினது என்ப மன்னோ, காகுத்தற்கு
இளைய காளை
வட்ட வான் வயிரத் திண் தோள் மலைகளை
உளைய வாங்கி.
(கடும் சண்டை நடக்கும் வேளையில்
வானரரும், அரக்கர் பலரும் இறந்த பொழுதினில்)
இந்திரசித் நாகாபானத்தை எய்தினான்.
எய்திய உடனே எல்லா திசையிலும்
இருள் சூழ்ந்தது, அனைவரையும்
நிலை கெட்டு ஓடச் செய்தது.
காளை போன்ற இலக்குவனின்
மலை போன்ற தோள்களை
வளைத்துக் கட்டியது.
8207.
தந்தையை எய்தி, அன்று ஆங்கு உற்றுள
தன்மை எல்லாம்
சிந்தையின் உணரக் கூறி, 'தீருதி, இடர்
நீ; எந்தாய்!
நொந்தனென் ஆக்கை; நொய்தின் ஆற்றி,
மேல் நுவல்வென்' என்னா,
புந்தியில் அனுக்கம் தீர்வான், தன்னுடைக்
கோயில் புக்கான்.
தந்தை இருப்பிடம் வந்து சேர்ந்தான்.
போர்க்களத்தில் நடந்தவைகளை
எடுத்துரைத்தான்.
'தீர்ந்தது உன் துயர், கவலை விடு' என்றான்.
'நானும் தளர்ந்து விட்டேன், கொஞ்சம்
இளைப்பாறிக் கொள்கிறேன், அடுத்து
என்ன என்று நாளை உரைக்கிறேன்' என்றான்.
துன்பம் போக்கிக்கொள்ள தன் இருப்பிடம்
போய்ச் சேர்ந்தான் இந்திரசித்.
( தொடரும் )
No comments:
Post a Comment