Saturday, April 4, 2020

கம்பராமாயணம் 85




6485.
தழுவினர் நின்ற காலை, 'தாமரைக்
   கண்ணன் தங்கள்
முழு முதல் குலத்திற்கு ஏற்ற முறைமையால்
   உவகை மூள,
வழுவல் இல் அபயம் உன்பால் வழங்கினன்;
   அவன் பொற் பாதம்
தொழுதியால், விரைவின்' என்று கதிரவன்
   சிறுவன் சொன்னான்.


சுக்கிரீவனும் வீடணனும் ஒருவரை ஒருவர்
தழுவிக்கொண்டனர்,
தாமரை மலர் போன்ற கண்களை உடைய
இராமன், தனது சூரிய குலத்தின் முறைப்படி,
முழு மனதோடு, மகிழ்ச்சி   பொங்க, குறையிலா
அபயத்தை வழங்கியதை உரைத்தான்.
அந்த பெருமானது பொன்னடிகளை
விரைந்து வணங்கு என்று
சூரியன் மகன் வீடணனுக்கு அறிவுறுத்தினான்.



6499.
'மின்மினி ஒளியின் மாயும் பிறவியை
   வேரின் வாங்க,
செம் மணி மகுடம் நீக்கி, திருவடி புனைந்த
   செல்வன்
தம்முனார், கமலத்து அண்ணல் தாதையார்,
   சரணம் தாழ,
எம்முனார் எனக்குச் செய்த உதவி' என்று
   ஏம்பலுற்றான்.


'மின்மினிப் பூச்சியின் ஒளியைப் போலத்
தோன்றி மறையும்படியான பிறவி நோயை
அடியோடு போக்குபவன்,
சிவந்த மணிகள் பதித்த மணி மகுடத்தைத்
துறந்தவன்,
திருவடிகளைச்  சிரத்தில்  சூடிக்கொண்ட
பரதனுக்கு முன்னவன்,
தாமரை மலரில் வாழும் பிரமதேவனுக்கும்
தந்தையானவன்,
இந்தப் பெருமான் திருவடிகளில் வீழ்ந்து
நான் வணங்குமாறு
என் முன்னவனாகிய இராவணன் எனக்கு
உதவி செய்தான்'
என்று கூறி மகிழ்ச்சியுற்றான் வீடணன்.



6503.
ஆழியான் அவனை நோக்கி, அருள் சுரந்து, 
   உவகை கூர,
'ஏழினோடு ஏழாய் நின்ற உலகும் என் 
   பெயரும் எந் நாள்
வாழும் நாள், அன்றுகாறும், வாள் எயிற்று 
   அரக்கர் வைகும்
தாழ் கடல் இலங்கைச் செல்வம் நின்னதே; 
   தந்தேன்' என்றான்.

 
ஆணைச் சக்கரத்தை உடைய  இராமன் 
வீடணனைப் பார்த்தான்,
உள்ளத்திலே கருணை பொங்க, 
மகிழ்ச்சி மிகப் பேசினான்.
பதினான்கு  உலகங்களும், எனது  பெயரும் 
எத்தனை காலம் இருக்குமோ அக்காலம் வரை
ஒளிரும் பற்களை உடைய அரக்கர் வாழும்,
ஆழமான கடல் நடுவே உள்ள 
இலங்கையின் அரசுச் செல்வம் 
உனக்கே  உரிமையுடையதாகக்
கொடுத்தேன் என்று கூறினான்.


6507.
'குகனொடும் ஐவர் ஆனேம் முன்பு; பின், 
   குன்று சூழ்வான் 
மகனொடும், அறுவர் ஆனேம்; எம்முழை 
   அன்பின் வந்த
அகன் அமர் காதல் ஐய! நின்னொடும் 
   எழுவர் ஆனேம்;
புகல் அருங் கானம் தந்து, புதல்வரால் 
   பொலிந்தான் நுந்தை.'

 
'குகனுடன் சேர்த்து சகோதரர்கள் 
ஐவர் ஆனோம், இது முன்பு நிகழ்ந்தது;
அதன் பின் மேருமலையைச் சுற்றிவரும் 
சூரியனது மகனான சுக்கிரீவனுடன் 
சகோதரர்  ஆறு பேர்  ஆனோம்;  
எங்களிடம் அன்பு கொண்டு வந்த,
உள்ளத்தில் அன்பு நிறைய உடையவனே
உன்னுடன் சேர்த்து  சகோதரர்கள்  ஏழுபேர்
ஆயினோம்.
எவரும் புகுதற்கரிய கானக வாழ்வை 
எனக்குத் தந்து,
உனது தந்தையாகிய தயரதன் 
புதல்வர்களால் நிறைவு பெற்றுவிட்டான்'
என்றான் இராமன்.



( தொடரும் )

No comments:

Post a Comment