மகுட பங்கப் படலம்
6897.
கருதி மற்றொன்று கழறுதல் முனம்,
விழிக் கனல்கள்
பொருது புக்கன முந்துற, சூரியன்
புதல்வன்,-
சுருதி அன்னவன், 'சிவந்த நல் கனி'
என்று சொல்ல,
பருதிமேல் பண்டு பாய்ந்தவன் ஆம்
என, பாய்ந்தான்.
(இராவணன் யார் என்று காட்டி விட்டு)
வீடணன் அடுத்தவரைப் பற்றிக் கூறுமுன்
தனது கண்ணில் சினத்தால் எழுந்த
தீப்பொறிகள் பறக்க நின்றான் சுக்ரீவன்.
'நீ உண்ண சிவந்த நல்ல கனி'
என்று தாய் சொல்ல
சூரியன் மேல் பாய்ந்த அனுமானைக் போல,
இராவணனை நோக்கிப் பாய்ந்தான்.
6902.
'இத் திசையின் வந்த பொருள் என்?'
என, இயம்பான்,
தத்தி எதிர் சென்று, திசை வென்று
உயர் தடந் தோள்
பத்தினொடு பத்துடையவன் உடல்
பதைப்ப,
குத்தினன் உரத்தில், நிமிர் கைத்
துணை குளிப்ப.
'நான் இருக்கும் இந்தப் பக்கம் வந்த
காரியம் என்ன' என இராவணன் கேட்க,
அவனுக்கு பதில் ஏதும் கூறாது, சுக்ரீவன்
அவன் எதிரே நின்ற படி,
எட்டு திக்குகளையும் வென்று,
அகன்ற தோள்கள் இருபதை உடைய
இராவணன் உடல் நடுங்க,
தன் இருகைகளும் நன்கு பதியுமாறு
அவன் மார்பில் குத்தினான்.
6917.
வந்தவனை நின்றவன் வலிந்து, எதிர்
மலைத்தான்,
அந்தகனும் அஞ்சிட, நிலத்திடை
அரைத்தான்;
எந்திரம் எனக் கடிது எடுத்து, அவன்
எறிந்தான்;
கந்துகம் எனக் கடிது எழுந்து, எதிர்
கலந்தான்.
நின்றிருந்த சுக்கிரீவன்
வந்தவனான இராவணனை
வலிமையுடனே எதிர்த்துப் போரிட்டான்;
யமனும் அஞ்சும் வண்ணம், அரக்கனை
பூமியில் தள்ளித் தேய்த்தான்;
இராவணன் சுக்கிரீவனை விரைந்து தூக்கி
வீசி எறிந்தான்;
வீசியெறியப்பட்ட பந்து
விரைவில் திரும்புவது போல, எழுந்து வந்து
அரக்கனோடு மற்போர் புரிந்தான்.
6926.
என்று அவன் இரங்கும் காலத்து, இருவரும்
ஒருவர் தம்மின்
வென்றிலர் தோற்றிலாராய், வெஞ் சமம்
விளைக்கும் வேலை,
வன் திறல் அரக்கன் மௌலி மணிகளை
வலியால் வாங்கி,
"பொன்றினென் ஆகின், நன்று" என்று
அவன் வெள்க, இவனும் போந்தான்.
சுக்ரீவனைக் காணாது இராமன் வருந்தினான்.
அங்கு இருவரும் ஒருவறோடொருவர் மோதினர்.
வெற்றி தோல்வி அடைய இயலாது,
கடுமையாகப் போரிட்டனர்.
வல்லமை வாய்ந்த இராவணன்
மகுடத்திலிருந்த மாணிக்க மணிகளைத்
தன் வலிமையினால் பிடுங்கினான் சுக்ரீவன்.
'நான் இனி இறந்து போதலே நல்லது' என
இராவணன் நாணமுறுமாறு செய்தான்.
அவ்வாறு செய்தபின் சுக்கிரீவன்
இராமன் இருக்குமிடம் வந்தடைந்தான்.
6933.
'காட்டிலே கழுகின் வேந்தன் செய்தன
காட்ட மாட்டேன்;
நாட்டிலே குகனார் செய்த நன்மையை
நயக்க மாட்டேன்;
கேட்டிலேன் இன்று கண்டும், கிளி மொழி
மாதராளை
மீட்டிலேன்; தலைகள் பத்தும் கொணர்ந்-
திலேன், வெறுங் கை வந்தேன்.
('ஏன் இப்படி தனியே சென்றாய்'
என்று இராமன் வினவ)
காட்டிலே கழுகின் அரசனான சடாயு
செய்த வீரச் செயல்களைச் செய்யும்
ஆற்றல் பெறவில்லை;
நாட்டில் குகப் பெருமான் செய்த
நன்மைச் செயல்களைச் செய்யவும்
விருப்பம் இல்லை;
கிளி போல் பேசும் சீதைப்பிராட்டியை
இராவணன் கவர்ந்து செல்வதைக்
கண்ட பின்னும் மீட்டுத் தரவில்லை;
இராவணனின் பத்து தலைகளையும்
கொண்டு வரவில்லை;
வெறுங்கையோடே வந்திருக்கிறேன்'
என்று சொன்னான் சுக்ரீவன்.
( தொடரும் )
No comments:
Post a Comment