6585.
'கூட்டினார் படை பாகத்தின் மேற்படக்
கொன்றாய்;
ஊட்டினாய், எரி ஊர் முற்றும்; இனி,
அங்கு ஒன்று உண்டோ?
கேட்ட ஆற்றினால், கிளி மொழிச்
சீதையைக் கிடைத்தும்
மீட்டிலாதது, என் வில் தொழில்
காட்டவோ? வீர!
'இராவணன் வைத்திருந்த படையில்
பாதிக்கு மேல் நீயே கொன்று தீர்த்தாய்;
இலங்கை நகர் முழுவதையும் தீயிட்டு
அழியச் செய்தாய்;
இனி அங்கு நான் செய்ய வேண்டியதென்று
ஏதேனும் உளதா என்ன ?
வீடணன் கூறுவதைப் பார்த்தால்,
கிளி போன்று பேசும் சீதையை,
நேரில் பார்த்தபின்னும் நீ மீட்டு வராதது,
நான் எனது வில்லாற்றலைக் காட்ட
வேணும் என்பதற்காகத்தானோ, வீரனே!'
என்று இராமன் அனுமனைப் புகழ்ந்தான்.
6593.
'தருண மங்கையை மீட்பது ஓர் நெறி
தருக !' என்னும்
பொருள் நயந்து, நல் நூல் நெறி
அடுக்கிய புல்லில்,
கருணை அம் கடல் கிடந்தனன், கருங்
கடல் நோக்கி;
வருண மந்திரம் எண்ணினன், விதி
முறை வணங்கி.
'இளமை நிறைந்த சீதையை மீட்டு வர
ஒரு வழி தருக' என்ற வேண்டி,
வேத நெறிப்படி தருப்பைப் புல் கொண்டு,
கருமை நிறமான கடலைப் பார்த்தபடி,
கருணைக் கடலான இராமன்,
முறைப்படி வருணனைத் தொழுது
வருண மந்திரத்தைத் தியானித்தான்.
6599.
'புரந்து கோடலும், புகழொடு கோடலும்,
பொருது
துரந்து கோடலும், என்று இவை தொன்மையின்
தொடர்ந்த;
இரந்து கோடலின், இயற்கையும் தருமமும்
எஞ்சக்
கரந்து கோடலே நன்று; இனி நின்றது என்,
கழறி?
(ஏழு நாள் பிரார்த்தனை செய்தும் வருணன்
வராததால் இராமன் கோபம் கொண்டான்)
(ஒருவரிடமிருந்து ஒரு பொருளைப் பெற
விரும்பினால்)
'அவர்களைப் பாதுகாத்து, வேண்டிய
பொருளைப் பெற்றுக் கொள்வதும்,
போர் செய்து, வென்று, புகழோடு
அப்பொருளைப் பெற்றுக் கொள்வதும்,
போரிட்டு, பகைவனைத் துரத்தி விட்டுப்
பொருளைக் கைப்பற்றிக் கொள்வதும்
இவையெல்லாம் பழைய காலத்திலிருந்தே
வரும் பழக்க வழக்கமாகும்.
நான் வருணனை வேண்டி வழி பெற விரும்பினேன்,
எனினும் இயற்கைக்கும் அறத்துக்கும் புறம்பாக,
வேண்டிய வழியைக் கவர்ந்து கொள்வதே நல்லது;
எதையெதையோ பேசி இனி என்ன பயன்?'
என்று இராமன் எண்ணினான்.
6606.
பெரிய மால் வரை ஏழினும் பெரு வலி பெற்ற
வரி கொள் வெஞ் சிலை வளர் பிறையாம் என வாங்கி,
திரிவ நிற்பன யாவையும் முடிவினில் தீக்கும்
எரியின் மும் மடி கொடியன சுடு சரம் எய்தான்.
பெரிய, கரிய ஏழு^ மலைகளையும் விட,
மிகுந்த வலிமையை உடைய,
கட்டமைந்த கொடிய வில்லை,
வளர்பிறைச் சந்திரன் எனக் கூறுமாறு
நாணால் வளைத்து, எல்லாவற்றையும்,
யுகமுடிவிலே தீய்த்து அழிக்கின்ற,
தீயை விட மூன்று மடங்கு கொடிய சுடு
சரங்களை இராமன் கடலின் மீது எய்தான்.
^ - கயிலை, இமயம், மந்தரம், விந்தம், நிடதம், ஏமகூடம், நீலகிரி
( தொடரும் )
No comments:
Post a Comment