Thursday, April 30, 2020

கம்பராமாயணம் 111


9480.
அய் - இரு கோடியர் அரக்கர் வேந்தர்கள்
மொய் வலி வீரர்கள் ஒழிய முற்றுற
'எய்' எனும் மாத்திரத்து, அவிந்தது என்பரால்
செய் தவத்து இராவணன் மூலச் சேனையே.

பத்துக் கோடி அரக்க அரசர்களும்
வலிமை செறிந்த அரக்க வீரர்களும்
முழுமையாக அழிந்திட
எய் என்று சொல்லும் நொடி அளவில்
சிறந்த தவம் பல செய்த இராவணனது
மூல பலப் படை அழிந்துவிட்டது
என்று சொல்வார்கள்.


9526.
தாய், 'படைத்துடைய செல்வம் ஈக!' என,
   தம்பிக்கு ஈந்து,
வேய் படைத்துடைய கானம் விண்ணவர்
   தவத்தின் மேவி,
தோய் படைத் தொழிலால் யார்க்கும் துயர்
   துடைத்தானை நோக்கி,
வாய் படைத்துடையார் எல்லாம்
   வாழ்த்தினார், வணக்கம் செய்தார்.


தாய் கைகேயி, 'உனக்கு உரியதாக வந்த
செல்வத்தைக் கொடுத்துவிடு' என்று
சொல்ல தம்பி பரதனுக்குத் தந்தவனை,
மூங்கில்கள் வளர்ந்துள்ள காட்டுக்கு
தேவர்கள் செய்த தவத்தால் வந்தவனை,
தன் போர்த்திறத்தால் எல்லாருடைய
துயரையும் போக்கியவனை,
வாய் உள்ளோர் அனைவரும்
வாழ்த்தி வணங்கினர்.


இராவணன் தேர் ஏறு படலம்

9642.
பூதரம் அனைய மேனி, புகை நிறப் புருவச்
   செந் தீ,
மோதரன் என்னும் நாமத்து ஒருவனை
   முறையின் நோக்கி,
' ''ஏது உளது இறந்திலாதது இலங்கையுள்
   இருந்த சேனை
யாதையும் எழுக!'' என்று ஆனை மணி முரசு
   எற்றுக!' என்றான்.


மலை  போன்ற உடலை உடையவனை,
கரிய புருவங்களையுடையவனை ,
செந்தீ போன்றவனை,
மகோதரன் எனும் பெயருள்ள ஒருவனை
அழைத்தான் இராவணன்.
'சாவாத சேனை எது உள்ளது? இலங்கைக்குள்
இன்னும் மீதி இருக்கும் படை அனைத்தும்
எழுக' என யானை மீது ஏறி முரசை அடிக்க
ஆணையிட்டான்.



9676.
'எழுந்து வந்தனன் இராவணன்; 
   இராக்கதத் தானைக்
கொழுந்து முந்தி வந்து உற்றது; 
   கொற்றவ! குலுங்குற்று
அழுந்துகின்றது, நம் பலம்; அமரரும் 
   அஞ்சி,
விழுந்து சிந்தினர்' என்றனன், வீடணன், 
   விரைவான்.
 
'இராவணன் தன் படையுடன் புறப்பட்டு 
வந்திருக்கிறான்;
அரக்கர் படையின் முன்னணிப்படை 
வந்தடைந்தது; 
வெற்றி கொண்ட இராமா !
நம்படை எதிரிகளைக் கண்டு 
நடுங்குகிறது;
தேவர்களும் பயம் கொள்கின்றனர்'
என்று விரைந்து வந்த வீடணன், கூறினான். 



இராமன் தேர் ஏறு படலம்

9681.
'மூண்ட செரு இன்று அளவில் முற்றும்; 
   இனி, வெற்றி
ஆண்தகையது; உண்மை; இனி அச்சம் 
   அகல்வுற்றீர்,
பூண்ட மணி ஆழி வய மா நிமிர் பொலந் 
   தேர்
ஈண்ட விடுவீர், அமரில்' என்று, அரன் 
   இசைத்தான்.

'தொடங்கிய இந்தப் போர் இன்றோடு 
முடிந்துவிடும்; 
இனிமேல் வெற்றி ஆண்மையாளனான 
இராமனுக்கே உரியது; 
இனிமேல் நீங்கள் அச்சம் கொள்ள
அவசியமில்லை ;
மணிகள் கட்டிய, வலிமை கொண்ட 
குதிரைகள் பூட்டிய, உயர்ந்த தேரினை,
விரைவில் 
இராமனுக்கு அனுப்புங்கள், தேவர்களே!'
என்று சிவபெருமான் கூறினான். 


( தொடரும் )

No comments:

Post a Comment