இராவணன் வதைப் படலம்
9706.
அன்னது கண்ணின் கண்ட அரக்கனும்,
'அமரர் ஈந்தார்
மன் நெடுந் தேர்' என்று உன்னி, வாய்
மடித்து எயிறு தின்றான்;
பின், 'அது கிடக்க' என்னா, தன்னுடைப்
பெருந் திண் தேரை,
மின் நகு வரி வில் செங் கை இராமன்
மேல் விடுதி' என்றான்.
இராமன் ஏறி வந்தத் தேரைத் தன்
கண்களால் இராவணன் பார்த்தான்;
'பெரிய தேரைத் தேவர்கள்
கொடுத்திருப்பர்' எனக் கருதினான்;
உதடுகளைக் கடித்துப் பற்களை மென்றான்;
'அது கிடக்கட்டும்' என்று அலட்சியம் செய்தான்;
தன்னுடைய பெரிய வலிமையான தேரை
வில்லை ஏந்திய இராமனை நோக்கிச்
செலுத்து என்று கட்டளையிட்டான்.
9712.
'அம்புயம் அனைய கண்ணன் தன்னை
யான் அரியின் ஏறு
தும்பியைத் தொலைத்தது என்னத்
தொலைக்குவென்; தொடர்ந்து நின்ற
தம்பியைத் தடுத்தியாயின், தந்தனை
கொற்றம்' என்றான்;
வெம்புஇகல் அரக்கன், 'அஃதே செய்வென்'
என்று, அவனின் மீண்டான்.
'செந்தாமரை போன்ற கண்களை உடைய
இராமனை
ஆண் சிங்கம் யானையை அழித்தது என்று
சொல்லும்படியாக
நான் அழித்தொழிப்பேன்;
இணை பிரியாது நிற்கும் தம்பியை
நீ போரிட்டுத் தடுப்பாயானால்
வெற்றி தேடித் தந்தவனாவாய்' என்று
இராவணன் தளபதி மகோதரனிடம் கூறினான்;
அரக்கன் மகோதரனும் 'அவ்வாறே செய்வேன்'
என்று கூறி, திரும்பிச் சென்றான்.
9837.
'சிவனோ? அல்லன்; நான்முகன் அல்லன்;
திருமாலாம்
அவனோ? அல்லன்; மெய் வரம் எல்லாம்
அடுகின்றான்;
தவனோ என்னின், செய்து முடிக்கும் தரன்
அல்லன்;
இவனோதான் அவ் வேத முதல் காரணன்?'
என்றான்.
'இந்த இராமன் சிவபெருமானோ? இருக்காது,
திருமால் தானோ இவன், இருக்காது,
என்னுடைய மிகச்சிறந்த ஆயுத பலங்களை
எல்லாம் அழிக்கின்றான்;
தவம் செய்து ஆற்றல் பெற்றிருப்பானோ ?
ஆனால் இத்தகைய பேராற்றலைத் தவத்தால்
செய்து முடிக்கும் தகுதியுடையவன்
ஒருவனும் இல்லை;
வேதங்களுக்கெல்லாம் மூல காரணமான
ஆதிப் பரம் பொருள் இவன் தானோ?'
என்று கூறி வியந்து நின்றான் இராவணன்.
9869.
மஞ்சு அரங்கிய மார்பினும், தோளினும்,
நஞ்சு அரங்கிய கண்ணினும், நாவினும்,
வஞ்சன் மேனியை, வார் கணை அட்டிய
பஞ்சரம் எனல் ஆம் படி பண்ணினான்.
மேகம் போன்ற நிறத்தை ஒத்த
மார்பிலும் தோளிலும்;
விடம் போன்ற கண்களிலும் நாவிலும்
வஞ்சகன் இராவணன் உடம்பினை
அம்புகளை விடுத்து,
நீண்ட அம்புகள் வைத்திருப்பதற்கேற்ற
தூணி என்று கூறும் படி செய்தான்.
9876.
'படை துறந்து, மயங்கிய பண்பினான்
இடை பெறும் துயர் பார்த்து, இகல் நீதியின்
நடை துறந்து, உயிர் கோடலும் நன்மையோ?
கடை துறந்தது போர், என் கருத்து' என்றான்.
'போர்க் கருவிகளை இழந்தான்,
நினைவிழந்து கிடக்கின்றான்,
அழிக்கக்கூடிய நிலையில் இருக்கின்றான்,
இந்த சமயத்தில், போர் நீதியின்
ஒழுக்கத்திலிருந்து விலகி;
உயிரைக் கொள்வது அறம் ஆகுமோ?
கொஞ்ச நேரம் விலகியிருப்பது தான்
போர் நெறியாகும், இதுவே நான் எண்ணுவது'
என்று இராமன் கூறினான்.
9899.
முக்கோடி வாழ்நாளும், முயன்றுடைய
பெருந் தவமும், முதல்வன், முன்நாள்,
என் கோடியாராலும் வெலப்படாய்'
எனக் கொடுத்த வரமும், ஏனைத்
திக்கோடும் உலகு அனைத்தும் செருக்
கடந்த புய வலியும், தின்று, மார்பில்
புக்கு ஓடி உயிர் பருகி, புறம் போயிற்று
இராகவன்தன் புனித வாளி.
இராவணனுடைய மூன்று கோடி ஆயுளையும்
தவம் செய்துப் பெற்றிருந்த பயனையும்;
நான்முகன் முன் காலத்தில்,
தேவர்களில் எந்த வரிசையைச் சேர்ந்தோர்
ஆனாலும் அவர்களால் நீ வெல்லப்பட
மாட்டாய் என்று தந்த வரத்தையும்
மற்றும் திசைகளையும்,
தோள் ஆற்றலையும்; தோற்கடித்து விட்டு,
தோள் ஆற்றலையும்; தோற்கடித்து விட்டு,
இராவணனுடைய மார்பில் நுழைந்து,
உடல் எங்கும் சுழன்று உயிரைக் குடித்து
வெளியே சென்றது.
இராமபிரான் செலுத்திய தூய்மை
நிறைந்த பிரம்மாத்திரம்;
நிறைந்த பிரம்மாத்திரம்;
( தொடரும் )
No comments:
Post a Comment