Sunday, May 3, 2020

கம்பராமாயணம் 114



மீட்சிப் படலம்

9953.
'சோதியான் மகன், வாயுவின் தோன்றல், மற்று
ஏது இல் வானர வீரரொடு ஏகி, நீ
ஆதி நாயகன் ஆக்கிய நூல் முறை
நீதியானை நெடு முடி சூட்டுவாய்.'*

சூரியன் மகனாகிய சுக்கிரீவனோடும்,
காற்றுக் கடவுள் மகனாகிய அனுமனோடும்
மற்றுள்ள குரங்கு வீரர்களோடு சென்று
முதற்கடவுளாகிய நாராயணன் தந்த
வேத  விதிப்படி
அற நீதியிற் சிறிதும் வழுவாத வீடணனுக்கு
சிறந்த கிரீடத்தைச் சூட்டி அரசனாக்குவாய்'
என்று இராமன் இலக்குவனிடம் சொன்னான்.


9963.
'உரிமை மூஉலகும் தொழ, உம்பர்தம் 
பெருமை நீதி அறன் வழிப் பேர்கிலாது, 
இருமை ஏய் அரசாளுதி, ஈறு இலாத் 
தரும சீல!' என்றான் - மறை தந்துளான்.

உனக்கு உரிமையான இந்த அரசை,
மூன்று உலகத்தில் உள்ளாரும்  
உன்னை மதித்து வணங்குமாறு,
தேவர்களுடைய பெருமைக்கும்,
அரச நீதிக்கும், தரும வழிக்கும்
சிறிதும் மாறுபடாது 
இம்மைக்குப் புகழும் 
மறுமைக்குப் புண்ணியமும் 
தரத்தக்கதாக ஆள்வாயாக' என்று 
நான்கு வேதங்களையும் அருளிய
இராமபிரான் வீடணனுக்கு ஆசி கூறினான்.



9967.
'ஏழை சோபனம்! ஏந்திழை, சோபனம்! 
வாழி, சோபனம்! மங்கல சோபனம்!
ஆழி ஆன அரக்கனை ஆரியச் 
சூழி யானை துகைத்தது, சோபனம்!' 


'மிக்க மங்களம் உண்டாகட்டும்,
அணிகலன்கள் அணிந்தவளே, மங்களம்;
நீ வாழ்க, வாழ்கவே, மங்களம்;
எல்லாம் இனி மங்களம்;
தீமைக்கு வரம்பாகிய இராவணனை,
மேன்மை மிக்க இராமன் என்ற யானை
அழித்   தொழித்தது,
இனி, எல்லார்க்கும் மங்களம் உண்டாகட்டும்'
என்று சீதையிடம் அனுமன் கூறினான்.


9988.
என்ற போதின், இறைஞ்சினன், 'எம்பிரான் 
தன் துணைப் பெருந் தேவி தயா' எனா 
நின்ற காலை, நெடியவன், 'வீடண! 
சென்று தா, நம தேவியை, சீரொடும்.

'அரக்கியரை இம்சிக்காதே, விட்டுவிடு' 
என்று பிராட்டி கூறிய அளவில், 
அனுமன், 'இராமபிரானது ஒப்பற்ற 
பெருந்தேவி பிராட்டியின் கருணைத் 
தன்மையை வணங்கி  நின்ற  பொழுது;
அங்கே, இராமன், 'வீடணா, சீதையை 
சென்று  சிறப்போடும்  அழைத்து வருக' 
என்று கூறினான்.



9991.
'யான் இவண் இருந்த தன்மை, இமையவர் 
   குழுவும், எங்கள்
கோனும், அம் முனிவர்தங்கள் கூட்டமும், 
   குலத்துக்கு ஏற்ற
வான் உயர் கற்பின் மாதர் ஈட்டமும், 
   காண்டல், மாட்சி;
மேல் நிலை கோலம் கோடல் விழுமியது 
   அன்று - வீர!' 

(அலங்கரித்துக் கொண்டு வருக என்று 
வீடணன் கூற)

நான் இந்தச் சிறையில் இருந்த இயல்பினை
தேவர்கள் கூட்டம் காணவேண்டும்,
எம் தலைவன் இராமனும் காணவேண்டும்,
அங்குள்ள முனிவர்களுடைய குழுவும்
காணவேண்டும்,
தம் குலத்துக்கு ஏற்றவாறு உயர்ந்த கற்பின் 
மாட்சிமையுடைய பெண்கள் கூட்டமும்
காணவேண்டும்,
இதுவே சிறப்புடையதாகும்;
இதைவிடுத்து ஆடை அணிகலனோடு 
அலங்கரித்துக் கொண்டு வருதல் 
சிறந்தது அன்று, வீடணனே' 
என்று சீதை பதில் கூறினாள். 



 9992.
என்றனள், இறைவி; கேட்ட இராக்கதர்க்கு 
   இறைவன், நீலக்
குன்று அன தோளினான் தன் பணியினின் 
   குறிப்பு இது' என்றான்;
'நன்று' என நங்கை நேர்ந்தாள், நாயகக் 
   கோலம் கொள்ள;
சென்றனர், வான நாட்டுத் திலோத்தமை 
   முதலோர், சேர


'அணிகலன் வேண்டாம்' என்று 
சொன்னாள் சீதை;
அது கேட்ட அரக்க அரசனாகிய வீடணன்,
'நீலமலை போன்ற தோள்களை உடைய
இராமபிரானது கட்டளையின் குறிப்பு, 
இக் கோலம் பூணுதல்' என்று சொன்னான்; 
அது  கேட்ட  பிராட்டி, 'நல்லது' என்று கூறி 
உடன்பட்டாள்; 
தேவர் உலகத்துள்ள திலோத்தமை 
முதலாகிய தெய்வ மகளிர் ஒன்று சேர்ந்து 
பிராட்டிக்கு அழகிய அலங்காரம் செய்ய 
அவள்பால் சென்றனர்.


( தொடரும் )

No comments:

Post a Comment