10174.
முத்து உருக் கொண்டு அமைந்தனைய முழு
வெள்ளிக் கொழு நிறத்து, முளரிச் செங் கண்,
சத்துருக்கன் அஃது உரைப்ப, 'அவன் இங்குத்
தாழ்க்கின்ற தன்மை, யான் இங்கு
ஒத்திருக்கலால் அன்றே? உலந்ததன் பின்
இவ் உலகை உலைய ஒட்டான்;
அத் திருக்கும் கெடும்; உடனே புகுந்து ஆளும்
அரசு; எரி போய் அமைக்க' என்றான்.
முத்து வடிவம் போன்ற வெண்மை
நிற மேனியை உடைய தாமரை போலும்
கண்ணை உடைய சத்துருக்கனைப் பார்த்து,
'இராமன் நாடு வரத் தாமதிக்கின்ற காரணம்
நான் இங்கு அரசாட்சி செய்வதால் அல்லவா?
நான் இறந்தபிறகு இந்த உலகத்தை வருந்த
விடமாட்டான்;
அந்த மாறுபட்ட நினைவும் அவனை விட்டகலும்;
உடனே வந்து அயோத்திக்குள் நுழைந்து
அரச பொறுப்பை ஏற்பான்;
ஆதலால் சத்துருக்கனா !, நீ சென்று
நெருப்பை மூட்டு' என்று பரதன் சொன்னான்.
10189.
'அய்யன் வந்தனன்; ஆரியன் வந்தனன்;
மெய்யின் மெய் அன்ன நின் உயிர் வீடினால்,
உய்யுமே, அவன்?' என்று உரைத்து, உள் புகா,
கய்யினால் எரியைக் கரி ஆக்கினான்.
'தலைவன் இராமன் வந்துவிட்டான்.
எல்லார்க்கும் மேலோனவன் வந்துவிட்டான்;
சத்தியத்திற்கு வடிவான நீ அழித்துவிட்டால்
இராமன் உயிர் வாழ்வானா?'
என்று கூறிக்கொண்டே
அனுமன் அங்கு வந்துசேர்ந்தான்.
இடையில் நுழைந்து, தன் கரங்களாற்
எரியும் நெருப்பை அணைத்துக்
கரியாக்கினான்.
10196.
அழுகின்ற வாய் எலாம் ஆர்த்து எழுந்தன;
விழுகின்ற கண் எலாம் வெள்ளம் மாறின;
உழுகின்ற தலை எலாம் உயர்ந்து எழுந்தன;
தொழுகின்ற, கை எலாம், காலின் தோன்றலை.
(அனுமன் பரதனிடம் கணையாழியைக்
காண்பித்தான்)
இதுவரை அழுது கொண்டிருந்த வாய்கள்
மகிழ்ச்சி ஆரவாரம் செய்தன;
நீர் விழுகின்ற அழுத கண்களில்
வெள்ளநீர் பெருகத் தொடங்கின;
வருந்தி கீழே சாய்ந்த தலைகள் எல்லாம்
மேல் உயர்ந்தன, நிமிர்ந்தன;
கைகள் எல்லாம் காற்றின் மகனாகிய
அனுமனைத் தொழுத் தொடங்கின.
10210.
சித்திரகூடத்தைத் தீர்ந்த பின், சிரம்
பத்து உடையவனுடன் விளைந்த
பண்பும், தான்
இத் தலை அடைந்ததும், இறுதி ஆய,
போர்
வித்தகத் தூதனும் விரிக்கும்
சிந்தையான்.
இராமனை, பரதன் சித்திர கூட மலையில்
சந்தித்த பிறகு
பத்துத் தலைகளை உடைய இராவணனுடன்
நடந்த போர்ச் செயல்களையும்,
முடிவாக தான் அயோத்திக்கு வந்து
சேர்ந்ததையும்
இடையில் நடந்த செய்திகளையும்
போர்த் திறமை மிகுந்த அனுமன்
விரித்துக் கூறினான்.
10256.
அன்னது ஓர் அளவையின், விசும்பின்
ஆயிரம்
துன் இருங் கதிரவர் தோன்றினார் என,
பொன் அணி புட்பகப் பொரு இல்
மானமும்,
மன்னவர்க்கு அரசனும், வந்து
தோன்றினார்.
அந்த சமயத்தில் ஆகாயம்
ஆயிரம் சூரியன் தோன்றியது போல்
ஒளிர்ந்தது;
பொன்னால் அழகு பெற்ற ஒப்பற்ற
புட்பகம் விமானம் வானில் தெரிந்தது;
அரசர்க்கரசனாகிய சக்கரவர்த்தி இராமனும்
வந்து அநுமன் கண்முன்னே நின்றனர்.
( தொடரும் )
No comments:
Post a Comment