Saturday, May 2, 2020

கம்பராமாயணம் 113



9923.
''அன்றுஎரியில் விழு வேதவதி இவள்காண்;
   உலகுக்கு ஓர் அன்னை'' என்று,
குன்று அனைய நெடுந் தோளாய்! கூறினேன்;\
   அது மனத்துள் கொள்ளாதே போய்,
உன்தனது குலம் அடங்க, உருத்து அமரில்
   படக் கண்டும், உறவு ஆகாதே,
பொன்றினையே! இராகவன்தன் புய வலியை
   இன்று அறிந்து, போயினாயோ!''


முன்னொரு காலத்தில், உன்னைச் சபித்து
தீயில் விழுந்த வேதவதி,
அவளே உலகத்துக்கெல்லாம் தாயாகி
சீதையாக வந்துள்ளாள் என்று சொன்னேனே,
மலை போன்ற பெருந்தோள் உடையவனே,
அவ்வுரையை மனத்துட் கொள்ளாது
எனை இகழ்ந்தாயே,
உன்னுடைய குலம் முழுவதும் அழிந்தும்,
போரில் சினந்து, மடிதலைக் கண்டும்,
இராமபிரானோடு நட்பு கொள்ளாதிருந்தாயே,
இறுதி வரையில் அவனைப் பகையாகக்
கொண்டு அழிந்து ஒழிந்தாயே,
இராமனுடைய தோள்வலியை, இன்று
சாகும்போது அறிந்துகொண்ட
போயிருக்கிறாயோ!'
என்று கூறி வீடணன் அழுதான்.


9939.
'அன்னேயோ! அன்னேயோ! ஆ, கொடியேற்கு
   அடுத்தவாறு! அரக்கர் வேந்தன்
பின்னேயோ, இறப்பது? முன் பிடித்திருந்த
   கருத்து அதுவும் பிடித்திலேனோ?
முன்னேயோ விழுந்ததுவும், முடித் தலையோ?
   படித் தலைய முகங்கள்தானோ?
என்னேயோ, என்னேயோ, இராவணனார்
   முடிந்த பரிசு! இதுவோ பாவம்!


'அம்ம! கொடியவளான எனக்கு வந்துள்ள
நிலைமையை என்னென்று சொல்வேன்;
இராக்கதர் தலைவனாகிய இராவணன்
இறந்த பிறகா நான் இறப்பேன் ?
முன்பு தொடங்கி நான் கடைப்பிடித்து வந்த
கொள்கைகளில் இதையும் கைவிட்டேன்?
என் கண்கள் எதிரிலேயே என் கணவரின்
மகுடத் தலைகள் விழுந்தனவோ?
மண் மேல் கிடப்பவை
என் உயிர்க் கணவனின் தலைகள் தானோ?
இல்லை வேறெதுவோ ?என்னென்பேன்,
உலகைக் கலக்கிய இராவணனார் வாழ்வு
இத்தகையதாகவா முடியவேண்டும்?
பாவம்! பாவம்!' என்று கூறிக்
கதறி அழுதாள் மண்டோதரி.


9946.
என்று அழைத்தனள், ஏங்கி எழுந்து, அவன்
பொன் தழைத்த பொரு அரு மார்பினைத்
தன் தழைக் கைகளால் தழுவி, தனி
நின்று அழைத்து உயிர்த்தாள், உயிர் நீங்கினாள்.


பலவாறு கூறி, கூவி அழுதாள்;
ஏக்கமுற்று எழுந்தாள்;
அந்த இராவணனின் பொன் அணிகள்
கிடக்கும் ஒப்பற்ற வீர மார்பினைத், தன்
தளிர் போன்ற கரங்களால் தழுவினாள்;
தனித்து நின்று அவன் பெயரைச் சொல்லி
அழைத்தாள்; பெருமூச்சு விட்டவளாய்
உயிர் நீத்தாள் மண்டோதரி.



9949.
கடன்கள் செய்து முடித்து, கணவனோடு 
உடைந்து போன மயன் மகளோடு உடன் 
அடங்க வெங் கனலுக்கு அவி ஆக்கினான் - 
குடம் கொள் நீரினும் கண் சோர் குமிழியான். 
இறுதிக் கடன்களையெல்லாம்
செய்து முடித்த வீடணன் 
கணவனுடனே,  நெஞ்சம் உடைந்து மாண்ட 
மயனின் மகளாகிய மண்டோதரியுடன்; 
(இராவணன் உடல் அடங்குமாறு 
கொடுந்தீக்கு உணவாக்கினான்.
குடம் கொண்ட  நீரை விட மிகுதியாகக்  
கண்ணீர் சிந்தினான்.



( தொடரும் )

No comments:

Post a Comment