Monday, May 4, 2020

கம்பராமாயணம் 115


10007.
சீலமும் காட்டி, என் கணவன் சேவகக்
கோலமும் காட்டி, என் குலமும் காட்டி, இஞ்
ஞாலமும் காட்டிய கவிக்கு நாள் அறாக்
காலமும் காட்டும்கொல், என் கற்பு?' என்றாள்.


'என்னுடைய கற்பொழுக்கத்தை என்
கணவற்கு இயம்பி
என்  கணவனின் போர்க்கோலக் காட்சியை
யான்  பார்க்கும்படிச்  செய்து
நான் பிறந்த குலத்தையும் புகுந்த
குலத்தையும்  நிலைநிறுத்தி
இவ்வுலகத்தையும் இராவணனால்
அழியாதபடி  காத்த இவ்வனுமனுக்கு
வாழ்நாள் கரைந்து போகாது என்றும்
வாழ்வதாகிய சிரஞ்சீவித் தன்மையைத்
தரட்டும் என் கற்பு'
என்று சீதை ஆசி கூறினாள்.



10011.
கற்பினுக்கு அரசினை, பெண்மைக் காப்பினை,
பொற்பினுக்கு அழகினை, புகழின் வாழ்க்கையை
தற் பிரிந்து அருள் புரி தருமம் போலியை,
அற்பின் அத் தலைவனும் அமைய நோக்கினான்.


கற்பிற்குக் காவலாக இருப்பவளை,
பெண்மைக்குக் காப்பிடமாக உள்ளவளை
அழகிற்கு அழகாய் விளங்குபவளை
புகழை இவ்வுலகில் நிலை நிறுத்தியவளை
தனியே நின்று தன்னைப் பிரிந்த உயிர்கட்கு
நல்லருள் செய்யும் தருமம் போன்றவளை
அன்பாய், தலைவன் நாயகன் இராமனும்
நன்றாகப் பார்த்தான்.


10013.
'ஊண் திறம் உவந்தனை; ஒழுக்கம் 
   பாழ்பட, 
மாண்டிலை, முறை திறம்பு அரக்கன் 
   மா நகர்
ஆண்டு உறைந்து அடங்கினை; அச்சம் 
   தீர்ந்து, இவண்
மீண்டது என் நினைவு? ''எனை விரும்பும்''
   என்பதோ?

 
'அரக்கர் ஊரின் உணவு வகைகளை 
உண்டுக் கொண்டு நெடுநாள் இருந்தாய்;
ஒழுக்கம் அழிந்து போகும்படி 
சாகாமல் உயிருடன் இருந்தாய்; 
நீதிநெறியும் அறமுறையும் இல்லாத 
அரக்கனது இலங்கை நகரில் 
அவனுக்கு  அடங்கியிருந்தாய்;
பயம் இல்லாமல் இவ்விடத்துக்கு இப்பொழுது 
திரும்பி  வந்தது எதை எண்ணி ?
'என்னை இராமன் விரும்புவான்' 
என்பது உன் நினைவா?'
என்று இராமன் சீதையிடம் கேட்டான்.



10017.
'பெண்மையும், பெருமையும், பிறப்பும், 
   கற்பு எனும் 
திண்மையும், ஒழுக்கமும், தெளிவும், 
   சீர்மையும்,
உண்மையும், நீ எனும் ஒருத்தி 
   தோன்றலால், 
வண்மை இல் மன்னவன் புகழின், 
   மாய்ந்தவால். 

 
'பெண்மைக் குணங்களும் 
பெருமை குன்றாச் சிறப்பும் 
நற்குடிப் பிறப்பும், கற்பின் வலிமையும் 
சீரிய ஒழுக்கமும், அறிவுத்தெளிவும்,
மேன்மையும், சத்தியமும் ஆகிய எல்லாம்
சீதை என்னும் நீ ஒருத்தி தோன்றியபடியால்
கொடைத் தன்மை இல்லாத அரசனது புகழ் 
கெடுவது போல அடியோடு அழிந்தன'
என்று கூறினான்.



10028.
'ஆதலின், புறத்து இனி யாருக்காக என் 
கோது அறு தவத்தினைக் கூறிக் 
   காட்டுகேன்? 
சாதலின் சிறந்தது ஒன்று இல்லை; 
   தக்கதே, 
வேத! நின் பணி; அது விதியும்' 
   என்றனள். 

'உலகியல்பு இவ்வாறு இருக்க 
நான் என்ன செய்ய முடியும்?
இனிமேல் யாருக்காக 
என் குற்றமற்ற தன்மையை  
நான் நிரூபிக்க வேண்டும் ?
சாவதைக் காட்டிலும் எனக்கு 
நற்பயன் வேறு எது தரக்கூடும்.
நீ இட்ட கட்டளையும் எனக்குத் 
தகுதியானதே, அப்படியே செய்யும்,
வேத வடிவினன் ஆகிய பெருமானே!
என் விதியும் இதுவாகவே 
இருக்கக்கூடும்' என்று சீதை கூறினாள்.



10029.
இளையவன் தனை அழைத்து, 'இடுதி
   , தீ' என 
வளை ஒலி முன் கையாள் வாயின் 
   கூறினாள்; 
உளைவுறு மனத்தவன் உலகம் 
   யாவுக்கும் 
களைகணைத் தொழ, அவன் கண்ணின் 
   கூறினான். 

ஒலிக்கின்ற வளையல் அணிந்த சீதை
இலக்குவனை அழைத்தாள்,
'நெருப்பை உண்டாக்கித் தருக' 
என்று சொன்னாள்,
வருந்துகின்ற மனத்தோடு இலக்குவன்
உலக துன்பம் நீக்க பற்றுக் கோடாக
உள்ள தமயன் இராமனை 
வணங்கி நின்றான்.
இராமன் தன் கண்ணின் குறிப்பினாலேயே 
நெருப்பிடக் கூறினான். 



( தொடரும் )

No comments:

Post a Comment