10260.
ஊனுடை யாக்கை விட்டு உண்மை
வேண்டிய
வானுடைத் தந்தையார் வரவு கண்டென,
கானிடைப் போகிய கமலக்கண்ணனை,
தானுடை உயிரினை, தம்பி நோக்கினான்.
பரதன் பார்த்தான்,
உடம்பை உதறிவிட்டு சத்தியத்தை விரும்பி
வானுலகு சென்ற தந்தையார்
திரும்பி வருவதைப் பார்ப்பது போலப்
பார்த்தான்.
காட்டிற்குச் சென்ற
தாமரை மலர் போன்ற கண்களை உடைய
இராமனைப் பார்த்தான்.
தன்னுடைய உயிராக உள்ளவனைத்
தம்பி பரதன் பார்த்தான்.
10270.
தாயருக்கு அன்று சார்ந்த கன்று
எனும் தகையன் ஆனான்;
மாயையின் பிரிந்தோர்க்கு எல்லாம்
மனோலயம் வந்தது ஒத்தான்;
ஆய் இளையார்க்குக் கண்ணுள் ஆடு
இரும் பாவை ஆனான்;
நோய் உறுத்து உலந்த யாக்கைக்கு உயிர்
புகுந்தாலும் ஒத்தான்.
இராமன், தாய்மார்களுக்கு
பிரிந்து வந்தடைந்த கன்றின் தன்மையை
ஒத்தவனாக ஆனான்;
அஞ்ஞானம் நீங்கிய மெய்ஞ்ஞானிகளுக்கு
மனம் லயிக்க பரப்பிரம்மம் வந்து
சேர்ந்தாற்போல ஆனான்;
தன் பிரிவால் மெலிந்து நுணுகிய
பரத சத்துருக்கனருக்கு
கண்ணிற் கருமணி போலானான்.
மற்றவர்க்கு நோய் வாட்டிய உடம்பிற்குள்
மீண்டும் உயிர்வந்து புகுந்தாற் போலானான்.
10276.
கைகயன் தனயை முந்தக் கால்
உறப் பணிந்து, மற்றை
மொய் குழல் இருவர் தாளும்
முறைமையின் வணங்கு செங் கண்
ஐயனை, அவர்கள்தாமும் அன்புறத்
தழுவி, தம் தம்
செய்ய தாமரைக் கணீரால் மஞ்சனத்
தொழிலும் செய்தார்.
முதலில் கேகயன் மகள் தாய் கைகேயியின்
திருவடிகளில் விழுந்து வணங்கினான்.
அதன்பின் கோசலை, சுமித்திரை ஆகிய
இருவர் திருவடிகளையும் வணங்கினான்.
சிவந்த கண்களை உடைய இராகவனை
தாய்மார்கள் அன்பினால் அணைத்து,
தம்முடைய சிவந்த தாமரை மலர் போன்ற
கண்களிலிருந்து வருகின்ற கண்ணீரினால்
நீராட்டினர்.
திருமுடி சூட்டு படலம்
10292.
ஊழியின் இறுதி காணும் வலியினது
உயர் பொன் தேரின்,
ஏழ் உயர் மதமா அன்ன இலக்குவன்
கவிகை ஏந்த,
பாழிய மற்றைத் தம்பி பால்நிறக்
கவரி பற்ற,
பூழியை அடக்கும் கண்ணீர்ப் பரதன்
கோல் கொள்ளப் போனான்.
யுக முடிவின் எல்லை காணவல்ல
உறுதியான உயர்ந்த பெரிய தேரில்,
ஏழு முழ உயரமுள்ள யானை போன்ற
இலக்குவன் வெண் கொற்றக்
குடையைப் பிடித்து நிற்க,
வல்லமை மிக்க இன்னொரு தம்பி
சத்துருக்கன் வெண் சாமரையை ஏந்த,
புவியையே மறைக்கவல்ல
ஆனந்தக் கண்ணீர் சிந்தும் பரதன்,
குதிரைகளை ஏவி தேரைச் செலுத்த,
இராமபிரான் அயோத்தி சென்றான்.
( தொடரும் )
No comments:
Post a Comment