Wednesday, May 6, 2020

கம்பராமாயணம் 117


10066.
ஆதியான் பணி அருள் பெற்ற அரசருக்கு
   அரசன்
காதல் மைந்தனைக் காணிய உவந்தது
   ஓர் கருத்தால்
பூதலத்திடைப் புக்கனன்; புகுதலும்,
   பொரு இல்
வேத வேந்தனும் அவன் மலர்த் தாள்மிசை
   விழுந்தான்.


சிவபெருமான் அருளைப் பெற்று
சக்கரவர்த்தி தயரதன்,
தன் அன்பு மகனைக் காண ஆசைப்பட்டு
மண்ணுலகத்தில் நுழைந்தான்,
இராமன் இருக்கும் பூமிக்கு வந்தான்,
ஒப்பற்ற வேதத் தலைவனான இராமனும்
அத்தயரதனது மலர்போலும் திருவடிகளில்
வீழ்ந்து வணங்கினான்.



10072.
''நங்கை! மற்று நின் கற்பினை உலகுக்கு
   நாட்ட,
அங்கி புக்கிடு'' என்று உணர்த்திய அது
   மனத்து அடையேல்;
சங்கை உற்றவர் பெறுவதும் உண்டு;
   அது சரதம்;
கங்கை நாடுடைக் கணவனை முனிவுறக்
   கருதேல்.


சீதையே! உனது கற்பின் சிறப்பை
உலகிற்கு உணர்த்த விரும்பினான்.
அதனாலேயே 'நெருப்பில் புகு'
என்று இராமன் கூறினான்.
அவன் அவ்வாறு கூறியதை
மனதுள் கொள்ளாதே;
சந்தேகம் உற்றவர்கள் இவ்வாறு
நெருப்பின் மூலமாக பிறவற்றின் மூலமாக
மெய்ப்பிக்கச் செய்து ஐயம் நீங்குதல்
உலகில் இயல்பாக நடைபெறுவதே;
இதனால், கங்கையை ஆள்பவனை
கோசல நாட்டிற்கு அரசனான உன்
கணவனை வெறுக்க எண்ணாதே'
என்று தசரதன் சீதையிடம் கூறினான்.


10079.
'ஆயினும், உனக்கு அமைந்தது ஒன்று
   உரை' என, அழகன்,
தீயள் என்று நீ துறந்த என் தெய்வமும்
   மகனும்,
தாயும் தம்பியும் ஆம் வரம் தருக!' எனத்
   தாழ்ந்தான்;
வாய் திறந்து எழுந்து ஆர்த்தன, உயிர்
   எலாம், வழுத்தி.


தயரதன் இராமனைப் பார்த்து,
'உனக்கு வேண்டிய வரம் ஒன்றைக் கேள்'
என்று கூற
இராமன்  அதற்கு, 'நீ தீயவள் என்று
துறந்த என் தெய்வமாகிய  கைகேயியும்,
அவள் மகன் பரதனும்; எனக்குத் தாயும்
தம்பியும் ஆகும்படி வரம் தருக'
எனக் கேட்டு வணங்கினான்;
அது கேட்டு அவன் அருள் திறத்தை எண்ணி,
உயிர்கள் எல்லாம் அவனை வணங்கின;
வாய்திறந்து மகிழ்ச்சிப் பேரொலி செய்தன.


10096.
'அனைய புட்பக விமானம் வந்து அவனியை
   அணுக,
இனிய சிந்தனை இராகவன் உவகையோடு,
   'இனி நம்
வினையம் முற்றியது' என்று கொண்டு
   ஏறினன்; விண்ணோர்
புனை மலர் சொரிந்து ஆர்த்தனர், ஆசிகள்
   புகன்றே.

(புட்பக விமானம் உள்ளது என்று வீடணன் கூற)
அத்தகைய புட்பக விமானமானது வந்து
தரையிறங்கியதை
நற்சிந்தனைகளை உடைய இராமன் கண்டான்;
'அயோத்தியை சீக்கிரம் அடைய வேண்டும்
என்ற நம் எண்ணம் சீக்கிரம் ஈடேறிவிடும்'
என்று மனத்திற்   கொண்டு  ஏறினான்;
தேவர்கள் வாழ்த்துரைத்து மலர்களைத் தூவி
மகிழ்வொலி செய்தனர்.


10117.
'நன்னுதல்! நின்னை நீங்கி, நாள் பல 
   கழிந்த பின்றை,
மன்னவன் இரவி மைந்தன், வான் 
   துணையாக நட்ட 
பின்னை, மாருதி வந்து, உன்னைப் 
   பேதறுத்து, உனது பெற்றி
சொன்னபின், வானரேசர் தொகுத்தது 
   இச் சேது கண்டாய்.

'அழகிய நெற்றியுடையாளே!
உன்னைப் பிரிந்து பலநாள் கழித்த பிறகு
வானர அரசன் சுக்கிரீவன் 
சிறந்த துணை ஆன பிறகு,
அனுமன் தூது வந்து, உன் கலக்க  
நீக்கிய பிறகு,
உனது இருப்பிடத்தை என்னிடம் 
தெரிவித்த பிறகு
வானரச் சேனை கட்டியதே இவ்வணை'
என்று இராமன் சீதைக்குக் காட்டினான்.


(பரத்வாஜ முனிவர் ஆசிரமத்தில்
தரை இறங்கியது புட்பக விமானம்)

10151.
'இன்று நாம் பதி வருதுமுன், மாருதி! 
   ஈண்டச் 
சென்று, தீது இன்மை செப்பி, அத் 
   தீமையும் விலக்கி 
நின்ற காலையின் வருதும்' என்று 
   ஏயினன், நெடியோன்
'நன்று' எனா, அவன், மோதிரம் கைக் 
   கொடு நடந்தான்.


நாம் அயோத்திக்கு வந்து சேரும் முன்,
அனுமனே! நீ விரைந்துஅங்கு செல்; 
எனக்கு ஒரு தீமையும் இல்லை 
என்பதை பரதனுக்குச் சொல்;
தீப்புக எண்ணியிருக்கும் அவனைத் 
தடுத்து நிறுத்து;
நீ அங்கே இருக்கும் நேரத்தில் வருவேன்
என்று ஏவி அனுப்பினான்; 
'நல்லது' என்று அனுமனும் கூறினான்;
இராமன் அளித்த கணையாழியை 
கையில் வாங்கிக் கொண்டு புறப்பட்டான். 



( தொடரும் )

No comments:

Post a Comment