10036.
நீந்த அரும் புனலிடை நிவந்த தாமரை
ஏய்ந்த தன் கோயிலே எய்துவாள் எனப்
பாய்ந்தனள்; பாய்தலும், பாலின் பஞ்சு எனத்
தீய்ந்தது அவ் எரி, அவள் கற்பின் தீயினால்.
வெள்ள நீரிலே மேலே உயர்ந்துத்
தோன்றும் தாமரை மலர்
தன் வாழுமிடத்தை அடைவது போல
சீதை நெருப்பில் புகுந்தாள்.
பாய்ந்தவுடன்
பால் போன்று, பஞ்சு போன்று,
அந்த நெருப்பு
பிராட்டியின் கற்பு என்னும்
நெருப்பால் தீய்ந்துப் போனது.
10042.
'அங்கி, யான்; என்னை இவ் அன்னை
கற்பு எனும்
பொங்கு வெந் தீச் சுடப்
பொறுக்கிலாமையால்,
இங்கு அணைந்தேன்; உறும் இயற்கை
நோக்கியும்,
சங்கியாநிற்றியோ, எவர்க்கும்
சான்றுளாய்?
('யார் நீ?' என்று இராமன் கேட்டதும்,
தீயிலிருந்து எழுந்தவன் பேசினான்)
'நான் தீக்கடவுள்;
என்னை இந்தத் தாயின்
கற்பு என்னும் தீ சுட
அதனைத் தாங்க முடியாது
எழுந்து வந்தேன்;
எனக்கு நேர்ந்ததைப் பார்த்த பிறகும்
இவளைச் சந்தேகிக்கிறாயா?
இல்லை என்னையே சந்தேகிக்கிறாயா?
எல்லார்க்கும் அகத்தே சாட்சியாக
நிற்கும் பரம்பொருளே!' என்றான்.
10046.
'பெய்யுமே மழை? புவி பிளப்பது அன்றியே
செய்யுமே, பொறை? அறம் நெறியில் செல்லுமே?
உய்யுமே உலகு, இவள் உணர்வு சீறினால்?
வய்யுமேல், மலர்மிசை அயனும் மாயுமே.'
மழை பொழியாது,
பூமி வெடிக்கும்,
பொருளைத் தாங்காது விலகும்,
அறம் நேரான வழியில்
நடைபெறாது போகும்,
உலகம் பிழைக்குமா? தெய்வக் கற்பினளாய்
இவள் உணர்வு திரிந்து கோபம் அடைந்தால்;
இவள் சபித்தாலோ,
மலர் மேல் வீற்றிருக்கும் நான்முகனும்
இறந்துவிடுவான் அன்றோ.
10048.
'அழிப்பு இல சான்று நீ, உலகுக்கு;
ஆதலால்
இழிப்பு இல சொல்லி, நீ இவளை, '
'யாதும் ஓர்
பழிப்பு இலள்'' என்றனை; பழியும்
இன்று; இனிக்
கழிப்பிலள்' என்றனன் - கருணை
உள்ளத்தான்.
'நீ இந்த உலகத்துக்கு நீக்க முடியாத
சாட்சி ஆவாய்;
இகழ்ச்சிக்கு இடம் இல்லாத
உயர்ந்த வார்த்தைகளாற்
இவளை பாராட்டியிருக்கிறாய்;
யாதொரு பழிப்புக்கும் இடம் இல்லாதவள்
என்று உறுதி கூறியிருக்கிறாய்;
இவளிடத்தில் ஒரு பழியும் இல்லை;
எனவே இனி என்னால் இவள்
நீக்கத் தக்கவள் அல்லள்'
என்று கூறினான்,
அருள் உள்ளம் வாய்ந்த இராமன்;
10064.
'துறக்கும் தன்மையள் அல்லளால்,
தொல்லை எவ் உலகும்
பிறக்கும் பொன் வயிற்று அன்னை; இப்
பெய்வளை பிழைக்கின்,
இறக்கும் பல் உயிர்; இராமன்! நீ இவள்
திறத்து இகழ்ச்சி
மறக்கும் தன்மையது' என்றனன் -
வரதர்க்கும் வரதன்.
'உன்னால் கைவிடப்படக்கூடியவள்
இல்லை இவள்;
எல்லா உலகங்களும் தோன்றுதற்கு
அழகிய உதரத்தையுடைய மகாமாதா இவள்;
இவள் பிழை செய்வாளானால்
எல்லா உயிர்களும் இறந்துவிடும்;
இராமா, நீ இவள் விஷயத்தில்
அலட்சியம் காட்டுவது மறந்து விடத்தக்கது'
என்று கூறினான் வரம் தரும் கடவுளர்க்கு
வரம் தரும் சிவபெருமான்.
( தொடரும் )
No comments:
Post a Comment