Sunday, May 10, 2020

கம்பராமாயணம் 121



விடை கொடுத்த படலம்

10332.
பூமகட்கு அணி அது என்னப் பொலி
   பசும் பூரி சேர்த்தி,
மா மணித் தூணின் செய்த மண்டபம்
   அதனின் நாப்பண்,
கோமணிச் சிவிகைமீதே, கொண்டலும்
   மின்னும் போல,
தாமரைக் கிழத்தியோடும் தயரத ராமன்
   சார்ந்தான்.


நிலமகளுக்கு இது ஓர் அணிகலன்
போல் விளங்கும்,
பொன்னைக் கொண்டு சிறந்த
மணிக் கற்களால் செய்த தூண்கள் அமைந்த
திருவோலக்க மண்டபத்தின் நடுவில்,
பல்லக்கின் மேல் அமர்ந்து
மேகமும்   மின்னலும் போல
தாமரை மலரில் வீற்றிருக்கும்
திருமகளாகிய சீதாபிராட்டியோடு
தசரத  ராமன்  வந்து சேர்ந்தான்.


 10351.
மாருதி தன்னை ஐயன் மகிழ்ந்து, இனிது
   அருளின் நோக்கி,
'ஆர் உதவிடுதற்கு ஒத்தார், நீ அலால்?
   அன்று செய்த
பேர் உதவிக்கு யான் செய் செயல் பிறிது
   இல்லை; பைம் பூண்
போர் உதவிய திண் தோளாய்! பொருந்துறப்
   புல்லுக!' என்றான்.


இராமன் அனுமனை மகிழ்ச்சியோடு
அருட்பார்வை பார்த்தான்;
'உன்னையல்லால் வேறு யார் உதவி
செய்வதற்கு ஏற்றவர்கள் உளர்'
என்று கூறினான்.
'அன்று இராவண யுத்தத்தின் போது
நீ ஆற்றிய  உதவிகளுக்கு நான்
செய்யக்கூடிய கைம்மாறு எதுவும் இல்லை'
என்று புகழ்ந்தான்.
'பூணுல் அணிந்த போர்க்குத் தகுதியாக
வலிய தோளை உடையவனே!
என்னை நன்கு  தழுவிக் கொள்வாயாக'
என்று அழைத்தான்.


10353.
பூ மலர்த் தவிசை நீத்து, பொன் மதில்
   மிதிலை பூத்த
தேமொழித் திருவை ஐயன் திருவருள்
   முகத்து நோக்க,
பா மறைக் கிழத்தி ஈந்த பரு முத்த மாலை
   கைக் கொண்டு
ஏமுறக் கொடுத்தான், அந்நாள், இடர் அறிந்து
   உதவினாற்கே.

தாமரை மலரை விட்டு எழுந்து
பொன் மதில் சூழ்ந்த மிதிலையில் தோன்றிய
தேன் மொழியுடைய திருமகள் சீதையை
இராமன் திருவருளோடு பார்க்க,
அன்று, அசோக வனத்தில், தன் இன்னல்
உணர்ந்து உதவிய அனுமனுக்கு
வேதத்தலைவி சரஸ்வதி தேவி தனக்களித்த 
முத்து மாலையை இன்பமுறக் கொடுத்தாள்,



10365.
பரதனை, இளைய கோவை, சத்துருக்
   கனனை, பண்பு ஆர்
விரத மா தவனை, தாயர் மூவரை,
   மிதிலைப் பொன்னை,
வரதனை, வலம்கொண்டு ஏத்தி,
   வணங்கினர் விடையும் கொண்டே,
சரத மா நெறியும் வல்லோர் தத்தம
   பதியைச் சார்ந்தார்.

பரதனை, இலக்குவ சத்ருகனனை,
மூன்று தாயாரையும்,
மிதிலைப் பொன் சீதை யையும்
இராமபிரானையும்,
வலம் வந்து வணங்கினர்,
விடை பெற்றுக் கொண்டனர்,
தங்கள் தங்கள் நகரங்களுக்குக் கிளம்பினர்.




10368.
உம்பரோடு இம்பர்காறும், உலகம் ஓர்
   ஏழும் ஏழும்,
'எம் பெருமான்!' என்று ஏத்தி, இறைஞ்சி
   நின்று, ஏவல் செய்ய,
தம்பியரோடும், தானும், தருமமும்,
   தரணி காத்தான் -
அம்பரத்து அனந்தர் நீங்கி, அயோத்தியில்
   வந்த வள்ளல்.

தேவர்கள் தொடங்கி மக்கள் வரை
பதினான்கு உலகங்களும்,
'எம்பெருமான்' என்று வணங்கித் துதித்து,
சொன்ன கட்டளையை நிறைவேற்ற,
தம்பியர்களோடும் தானும் அறக்கடவுளும்
ஒன்றாகும்படி நின்று,
இந்த உலகம் முழுவதையும் பாதுகாத்தான்.
திருப்பாற்கடலில், அறிதுயிலிலிருந்து விலகி
அயோத்தியில் ஸ்ரீராமனாக அவதரித்து
பலர்க்கும் அருள் செய்த இராமபிரான்;




( முற்றும் )

No comments:

Post a Comment