Saturday, May 9, 2020

கம்பராமாயணம் 120




10305.
ஆயது ஓர் அளவில், ஐயன், பரதனை,
   அருளின் நோக்கி,
'தூய வீடணற்கும், மற்றைச் சூரியன்
   மகற்கும், தொல்லை
மேய வானரர்கள் ஆய வீரர்க்கும்,
   பிறர்க்கும், நம்தம்
நாயகக் கோயில் உள்ள நலம் எலாம்
   தெரித்தி' என்றான்.

எல்லோரும் அரண்மனை வந்தடைந்தனர்,
'உளந்தூய வீடணனுக்கும்,
கதிரவன் மைந்தனான சுக்கிரீவனுக்கும்,
மற்ற வானர  வீரர்களுக்கும்,
நம்முடைய அரண்மனையின் சிறப்புக்கள்
எல்லாவற்றையும் விளக்கிடு'
என்று இராமன் பரதனிடம் கூறினான்.



10311.
'ஏழ் கடல் அதனில் தோயம், இரு நதி 
   பிறவில் தோயம்
தாழ்வு இலாது இவண் வந்து எய்தற்கு 
   அருமைத்து ஓர் தன்மைத்து என்ன,
ஆழி ஒன்று உடையோன் மைந்தன், 
   அனுமனைக் கடிதின் நோக்க,
சூழ் புவி அதனை எல்லாம் கடந்தனன், 
   காலின் தோன்றல்.

(இராமனுக்கு மகுடம் சுட்டுவது எப்போது 
என்று சுக்ரீவன் கேட்க)
ஏழு கடல்களிலிருந்து கொண்டு வரும் 
புனித நீரும் 
பெரிய நதிகளிலிருந்து கொண்டு வரும் 
தீர்த்தங்களும் 
இங்கு வந்து சேருதற்கு, தாமதமாகிறது 
என்று பரதன் கூறினான்;
ஒற்றைச் சக்கரத் தேரினனான 
சூரியன் புதல்வன் சுக்கிரீவன்
அனுமனை விரைந்து பார்த்தான்.
காற்றின் மைந்தனாகிய அனுமன்
கடல் சூழ் உலகத்தின் தொலைவை
உடன் கடந்து சென்றான்.


10313.
அரியணை பரதன் ஈய, அதன் கண் 
   ஆண்டு இருந்த அந்தப்
பெரியவன், அவனை நோக்கி, 'பெரு 
   நிலக் கிழத்தியோடும்
உரிய மா மலராளோடும் உகந்தனர் 
   ஒருவு இல் செல்வம்
கரியவன் உய்த்தற்கு ஒத்த காப்பு நாள் 
   நாளை' என்றான்.

(குலகுரு வசிட்டன் வந்ததும்)
பரதன் அவருக்கு அமர இடம் தந்தான்.
வசிட்டன் அதன் மீது அமர்ந்தான்,
பரதனைப் பார்த்தான்,
'பூமிப் பிராட்டியோடும்,
பொருந்திய திருமகளோடும் 
அழியாப் பெருஞ்செல்வங்களோடும் 
கரு நிறத்து இராமன் ஆட்சி நடத்த
இசைந்த காப்பு அணியும் நன்னாள்
நாளைய தினமாகும்' என்று கூறினான்.


10327.
அரியணை அனுமன் தாங்க, அங்கதன் 
   உடை வாள் ஏந்த,
பரதன் வெண் குடை கவிக்க, இருவரும் 
   கவரி பற்ற,
விரை செறி குழலி ஓங்க, வெண்ணெயூர்ச் 
   சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி, வசிட்டனே
   புனைந்தான், மௌலி.

சிங்காதனத்தை அனுமன் காத்து நிற்கவும்.
அங்கதன் உடை வாளை ஏந்தி நிற்கவும், 
வெண் கொற்றக் குடையைப்
பரதன் பிடித்து நிழற்றவும், 
இலக்குவ சத்துருக்கனன் இருவரும்
சாமரை ஏந்தவும்
மணம் கமழ்கிற கூந்தலை உடைய பிராட்டி
பெருமிதமாய் விளங்கவும்
திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்பர்  
வழியின் முன்னோராக உள்ளோர்
மகுடத்தை எடுத்துக் கொடுக்க, 
பெற்றுக்கொண்டு, வசிட்ட முனிவனே 
இராமனுக்கு மகுடம் சூட்டினான்.



10331.
விரத நூல் முனிவன் சொன்ன விதி 
   நெறி வழாமை நோக்கி,
வரதனும், இளைஞற்கு ஆங்கண் மா 
   மணி மகுடம் சூட்டி,
பரதனைத் தனது செங்கோல் நடாவுறப் 
   பணித்து, நாளும்
கரை தெரிவு இலாத போகக் களிப்பினுள்
   இருந்தான் மன்னோ.

விரதம் வழுவாத வேதம் வல்ல வசிட்டன் 
சொல்லிய விதி முறைகளைத் தவறாது,
அருளாளன் இராமன், கடைபிடித்தான்.
தன் தம்பியர் மூவர்க்கும் 
உயர்ந்த மகுடம் அணிவித்தான். 
பரதனை தன் செங்கோலாட்சி நடத்துமாறு
கட்டளையிட்டான். 
எல்லையற்ற இன்ப மகிழ்ச்சியில் 
திளைத்திருந்தான்.


( தொடரும் )

No comments:

Post a Comment