7662.
ஆயது ஓர் காலத்து, ஆங்கண்,
மருத்தனைச் சனகன் ஆக்கி,
வாய் திறந்து அரற்றப் பற்றி, மகோதரன்
கடிதின் வந்து,
காய் எரி அனையான் முன்னர்க்
காட்டினன்; வணங்கக் கண்டாள்,
தாய் எரி வீழக் கண்ட பார்ப்பு எனத்
தரிக்கிலாதாள்.
அந்த நேரத்தில் அவ்விடத்திற்கு
அரக்கன் மருத்தனை சனகனாக மாற்றி
வாய் விட்டுக் கதறச் சொல்லி,
பற்றிக்கொண்டு விரைந்து வந்து,
கொழுந்து விட்டெரியும் நெருப்பை ஒத்த
இராவணன் முன் காட்டினான்;
அந்த மாய சனகன் இராவணனை
வணங்குவதைச் சீதை கண்டாள்;
தன் தாய்ப்பறவை நெருப்பில் விழுவதைக்
கண்ட பறவைக் குஞ்சு போல தவித்தாள்;
7678.
‘"அடைத்தது கடலை; மேல் வந்து
அடைந்தது, மதிலை; ஆவி
துடைத்தது பகையை சேனை" எனச்
சிலர் சொல்லச் சொல்ல,
படைத்தது ஓர் உவகைதன்னை, வேறு
ஒரு வினயம் பண்ணி,
உடைத்தது விதியே" என்று என்று,
உளைந்தனள், உணர்வு தீர்வாள்.
அணை கட்டி கடலைத் தடுத்தது
இலங்கை மதிலை வரை வந்து சேர்ந்தது
பகைவர்களின் உயிரைக் குடித்தது படை
என்று சிலர் சொல்லச் சொல்ல
ஒப்பற்ற பெரு மகிழ்ச்சி அடைந்தேன்.
அந்த மகிழ்ச்சியை வேறு ஒரு சூழ்ச்சி
செய்து உடைத்தது விதியே என்று
பலமுறை புலம்பினாள், வருந்தினாள்,
உணர்ச்சி ஒடுங்கினாள் சீதை.
7680.
‘காரிகை! நின்னை எய்தும் காதலால்,
கருதலாகாப்
பேர் இடர் இயற்றுலுற்றேன்; பிழை இது
பொறுத்தி; இன்னும்,
வேர் அற மிதிலையோரை விளிகிலேன்;
விளிந்த போதும்,
ஆர் உயிர் இவனை உண்ணேன்; அஞ்சலை,
அன்னம் அன்னாய்!
'அழகியே! உன்னை அடைய வேண்டும்
என்ற ஆசையாலே,
எண்ணவும் கூடாத பெருந் துன்பத்தைச்
செய்யத் தொடங்கி விட்டேன்; இச்செயல்
தவறானது தான், மன்னித்து விடு,
மிதிலையில் உள்ளவர்கள் அனைவரையும்
அழியுமளவிற்கு நான் சினம் கொள்ளவில்லை;
அவ்வாறு அழிக்க நேர்ந்திடினும்
இந்தச் சனகனுடைய உயிரைக் கொல்லேன்;
அஞ்சாதே, அன்ன நடை உடையவளே'
என்று இராவணன் சீதையை மிரட்டினான்.
7686.
‘இத் திருப் பெறுகிற்பானும், இந்திரன்;
இலங்கை நுங்கள்
பொய்த் திருப் பெறுகிற்பானும், வீடணன்;
புலவர் கோமான்
கைத் திருச் சரங்கள் உன்தன் மார்பிடைக்
கலக்கற்பால;
மைத் திரு நிறத்தான் தாள் என் தலைமிசை
வைக்கற்பால.
'நீ தருகிறேன் என்று சொல்லும் செல்வம்
அனைத்தையும் பெறப் போகிறவன் இந்திரன்;
இலங்கையையும் அதன் செல்வத்தையும்
பெறப் போகிறவன் வீடணன்;
தேவர்களின் தலைவனாகிய இராமனின்
கையில் உள்ள அழகிய அம்புகள்
உன்னுடைய மார்பைத் தைப்பதற்கு உரியன
அந்த கரு நிறத்து இராமனின் திருவடிகள்
என் தலையின் மீது வைத்தற்கு உரியவை'
என்று சீதை மறுமொழி உரைத்தாள்.
7706.
புறந்தரு சேனை முந்நீர் அருஞ் சிறை
போக்கி, போதப்
பறந்தனர் அனைய தூதர் செவி மருங்கு
எய்தி, பைய,
'திறம் திறம் ஆக நின்ற கவிப் பெருங்
கடலைச் சிந்தி,
இறந்தனன், நும்பி; அம்பின் கொன்றனன்,
இராமன்' என்றார்.
இராவணனைச் சுற்றி நிற்கும்
காவலைக் கடந்து
அவன் அருகில் சென்ற தூதுவர்,
மெல்ல அவன் காதில் விழுமாறு
'கூட்டம் கூட்டமாக நின்ற
வானரப் படையை அழித்த,
உன் தம்பி கும்பகர்ணனை
இராமனின் அம்பு கொன்றது'
என்று கூறினர்.
7718.
அண்டத்து அளவும் இனைய பகர்ந்து
அழைத்து,
பண்டைத் தன் நாமத்தின் காரணத்தைப்
பாரித்தான்;
தொண்டைக் கனிவாய் துடிப்ப, மயிர்
பொடிப்ப,
கெண்டைத் தடங் கண்ணாள் உள்ளே
கிளுகிளுத்தாள்.
அண்டங்கள் யாவும் அறியும்படி கதறினான்,
தன் பெயர்க் காரணத்தை உரைத்து அழுதான்,
கொவ்வைக் கனி போன்ற சிவந்த உதடுகள்
துடிக்க, மயிர்க் கூச்செறிய,
கெண்டை மீன் போன்ற கண்களை உடைய
சீதை, உள்ளம் மகிழ்ந்தாள்.
( தொடரும் )
No comments:
Post a Comment