Wednesday, April 15, 2020

கம்பராமாயணம் 96



7222.
எறிந்த கால வேல், எய்த அம்பு யாவையும்
   எரித்துப்
பொறிந்து போய் உக, தீ உக, விசையினின்
   பொங்கி,
செறிந்த தாரவன் மார்பிடைச் சென்றது;
   சிந்தை
அறிந்த மைந்தனும், அமர் நெடுங் களத்திடை
   அயர்ந்தான்.

காலனைப் போன்ற கொடிய வேலை
இராவணன்  வீச
அது இலக்குவன் எய்த அம்புகள்
அனைத்தையும் வீழ்த்தியது,
வேகத்தோடு, மலர்கள் அடர்ந்த மாலை
அணிந்திருந்த இலக்குவன் மார்பின்
நடுவே பாய்ந்தது,
அவ்வாறு வேல் ஊடுருவிச் சென்றதை
உணர்ந்ததும் பரந்த அகன்ற போர்க்களத்தில்
சோர்வுற்று வீழ நேர்ந்தது;


7228.
எடுக்கல் உற்று, அவன் மேனியை ஏந்துதற்கு
   ஏற்ற
மிடுக்கு இலாமையின், இராவணன் வெய்
   துயிர்ப்பு உற்றான்;
இடுக்கில் நின்ற அம் மாருதி புகுந்து எடுத்து
   ஏந்தி,
தடுக்கலாதது ஓர் விசையினின் எழுந்து,
   அயல் சார்ந்தான்.


மயக்கமடைந்து  விழுந்த இலக்குவனை 
இராவணன்  தூக்கிச் செல்ல எண்ணினான்,
எனினும் இலக்குவனின்  உடலைத் தூக்கும்
வலிமையில்லாது திகைத்தான்,
வெப்பப் பெருமூச்சு விட்டான்,
இச் சமயத்தில் எங்கோ ஓர் இடுக்கில் நின்று
கொண்டிருந்த அனுமன்,
 வேகமாய் நுழைந்தான்,
இலக்குவன் பொன்மேனியைச் சுலபமாய்
ஏந்திக் கொண்டான்,
யாராலும் தடுக்க முடியாததொரு
வேகத்தோடு வேறிடம் சென்று சேர்ந்தான். 



7233.
'நூறு பத்துடை நொறில் பரித் தேரின்மேல்
   நுன்முன்
மாறு இல் பேர் அரக்கன் பொர, நிலத்து நீ
   மலைதல்
வேறு காட்டும், ஓர் வெறுமையை; மெல்லிய
   எனினும்,
ஏறு நீ, ஐய! என்னுடைத் தோளின்மேல்'
   என்றான்.

'விரைந்து செல்ல வல்ல,
ஆயிரம்  குதிரைகளைக் கொண்ட தேரின்
மேலிருந்து போர் புரிகிறான் அரக்கன்.
உன் முன்னர் அவ்வாறு அவன் போரிட
தரையிலே நின்று நீ சண்டையிடுதல்
ஒப்பற்றதொரு தன்மையைக் காட்டும்.
மென்மையானவை என்றாலும், ஐயனே!
என் தோளின் மேல் நீ ஏறிப் போரிடு'
என்று இராமனை அனுமன் வேண்டினான்.

7253.
ஒன்று நூற்றினோடு ஆயிரம் கொடுந்
   தலை உருட்டி,
சென்று தீர்வு இல, எனைப் பல கோடியும்
   சிந்தி, 
நின்ற தேரொடும் இராவணன் ஒருவனும்
   நிற்க,
கொன்று வீழ்த்தினது--இராகவன் சரம்
   எனும் கூற்றம்.

இலட்சம் அரக்கருடைய கொடிய
தலைகளை அறுத்து உருளச் செய்து,
அதனோடு மட்டும் நிற்காது,
பலகோடி  வீரர்களையும்  அழித்து, 
தேரோடு இராவணன் மட்டும் மிஞ்சி நிற்க
மற்றனைவரையும் கொன்றழித்தது
இராமபிரானுடைய காலன் போன்ற அம்பு.



7267.
'அறத்தினால் அன்றி, அமரர்க்கும் அருஞ்
   சமம் கடத்தல்
மறத்தினால் அரிது என்பது மனத்திடை
   வலித்தி;
பறத்தி, நின் நெடும் பதி புகக் கிளையொடும்;
   பாவி!
இறத்தி; யான் அது நினைக்கிலென், தனிமை 
   கண்டு இரங்கி.


(இராமபிரான்  இராவணனை நோக்கி) 
'அற வழியில் அல்லாது, பாவ நெறியினால்
போரினில் வெல்ல முயற்சிப்பது
தேவர்களாலும் முடியாதது;
இதை உள்ளத்திலே உறுதியாகப்
பதித்துக் கொள்வது உனக்கு நல்லது;
பாவச்  செயல்கள்  புரிந்தவனே!
உன்  சேனையோடு நகருக்குத் திரும்பு,
நிராயுதபாணியாக நிற்கிறாய்,
உன் நிலை கண்டு இரங்குகிறேன்;
உன்னைக் கொல்ல நான் எண்ணவில்லை'


 7271.
'ஆள் ஐயா! உனக்கு அமைந்தன மாருதம்
   அறைந்த
பூளை ஆயின கண்டனை; இன்று போய்,
   போர்க்கு
நாளை வா' என நல்கினன்--நாகு இளங்
   கமுகின்
வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல்.

'அரக்கரை ஆள்கின்ற  ஐயா,
உன் சேனைகள் அனைத்தும்;
பெருங்காற்று தாக்கிய பூக்களைப் போல
சிதைந்து போனதைக் கண்டாய்.
இன்று உன் இடம் திரும்பிச் செல்வாய்,
மேலும் போர் புரிய நீ விரும்பினால்,
நாளை திரும்ப வருவாய்'
என்று இராவணனுக்கு அருள் உரைத்தான்
இளைய கமுக மரத்தின் மீது வாளை  மீன்கள்
தாவிப் பாயும் வளம் மிக்க கோசல நாட்டுக்கு
உரிய  வள்ளலாகிய இராமபிரான்.


( தொடரும் ) 



No comments:

Post a Comment