Monday, April 13, 2020

கம்பராமாயணம் 94


முதற் போர் புரி படலம்


7019.
'இடுமின் பல் மரம்; எங்கும் இயக்கு
   அறத்
தடுமின்; "போர்க்கு வருக!" எனச்
   சாற்றுமின்;
கடுமின், இப்பொழுதே கதிர் மீச்
   செலாக்
கொடி மதில் குடுமித்தலைக்கொள்க!'
   என்றான்.


சாலையின் இடையில் மரங்கள்
பலவற்றைப் போடுங்கள்,
அரக்கர்கள் நடமாட இயலாதபடி
தடுத்து விடுங்கள்,
யுத்தத்திற்கு வாருங்கள் என்று
கூவியழையுங்கள்,
இப்போதே இவற்றைச் செய்யுங்கள்;
சூரியன் நேராய்ச் செல்ல இயலாத,
உயர்ந்து வளர்ந்து வளைந்து செல்லும்
மதில்களின் சிகரங்களைக்
கைப்பற்றிக் கொள்ளுங்கள்'
என்று இராமன் வானர சேனைக்குக்
கட்டளையிட்டான்.



7035.
பல் கொடும், நெடும் பாதவம் பற்றியும்,
கல் கொடும், சென்றது-அக் கவியின் கடல்.
வில் கொடும், நெடு வேல்கொடும், வேறு உள
எல் கொடும் படையும் கொண்டது--இக் கடல்.

பற்களைக் கொண்டும்,
பெரிய மரங்களைக் கொண்டும்,
கற்களைக் கொண்டும், போரிடச் சென்றது
கடல் போன்ற வானரச் சேனை;
வில்லைக் கொண்டும்;
நீண்ட வேல்களைக் கொண்டும்
மற்றும் ஒளி மிக்க படைக் கருவிகளையும்
கொண்டு, போரிடச் சென்றது
கடல் போன்ற அரக்கர் சேனை.


7041.
கடித்த, குத்தின, கையின் கழுத்து அறப்
பிடித்த, வள் உகிரால் பிளவு ஆக்கின,
இடித்த, எற்றின, எண் இல் அரக்கரை
முடித்த-வானரம், வெஞ் சினம் முற்றின.

தம் பற்களால் அரக்கரைக் கடித்தன,
கைகளால் குத்திக் காயம் ஏற்படுத்தின,
அரக்கர் கழுத்துகள் துண்டாகும்படி
இறுக்கின,
கூரிய நகங்களால் இரண்டாய்ப் பிளந்தன,
முட்டிகளால் மோதின,
கால்களால் உதைத்தன,
எண்ணற்ற அரக்கர்களை இவ்வாறாக
அழித்தன,
கொடுங்கோபம் மிக்க குரங்குகள்.



(வச்சிரமுட்டி என்ற அரக்கன் 
வானர சேனையில் பலரை அழிக்க)

7070.
நோக்கி, வஞ்சன் நொறில் வய மாப் பரி 
வீக்கு தேரினின் மீது எழப் பாய்ந்து, தோள் 
தூக்கு தூணியும் வில்லும் தொலைத்து, அவன் 
யாக்கையும் சிதைத்திட்டு, எழுந்து ஏகினான். 

சுக்கிரீவன் அங்கு நடப்பதைக் கண்டான்,
வஞ்சகன் ஆகிய வச்சிரமுட்டியின் 
விரைந்து செல்லும் வலிய குதிரைகள்
பூட்டிய தேரின் மீது பாய்ந்து ஏறினான்.
தோளில் தொங்க விட்டிருந்த 
அம்பறாத் தூணியையும் வில்லினையும் 
அறுத்தான்; அதோடு நிற்காது  
அவன் உடலையும் அழித்துவிட்டு, 
அங்கிருந்து விலகிச் சென்றான்.


7110.
மண்டுகின்ற செருவின் வழக்கு எலாம் 
கண்டு நின்று, கயிலை இடந்தவன், 
புண் திறந்தன கண்ணினன், பொங்கினான், 
திண் திறல் நெடுந் தேர் தெரிந்து ஏறினான்-- 

(அரக்கப் படை அழிவதைக் 
கேள்விப்பட்ட இராவணன்)
நிறைய போர்களைச் செய்தவன், 
கயிலை மலையைப்  பெயர்த்து எடுத்தவன் 
புண்ணைப் பிளந்தாற்போன்று சிவந்த 
கண்களையுடையவன், சினந்து பொங்கி; 
நெறிமுறைகளையெல்லாம் ஆராய்ந்து, 
வலிய உறுதியான நெடுந்தேர் ஒன்றைத் 
தேர்ந்தெடுத்து ஏறி, போர்க்களம் போனான்.


( தொடரும் )

No comments:

Post a Comment