பிரமாத்திரப் படலம்
8443.
வணங்கி, 'நீ, ஐய! "நொய்தின் மாண்டனர்
மக்கள்" என்ன
உணங்கலை; இன்று காண்டி, உலப்பு அறு
குரங்கை நீக்கி,
பிணங்களின் குப்பை; மற்றை நரர் உயிர்
பிரிந்த யாக்கை
கணங் குழைச் சீதைதானும், அமரரும்
காண்பர்' என்றான்
வணங்கினான்,
உன் மக்கள் மாண்டனர் என்று நீ
மன வருத்தம் கொள்ள வேண்டாம்
என ஆறுதல் கூறினான்,
இன்று பார், குரங்குச் சேனையை
பிணக்குவியல் ஆக்குகிறேன் என்றுரைத்தான்,
அந்த இராம இலக்குமார்களின்
உயிரற்ற உடலை சீதையும் தேவர்களும்
காணும்படி செய்கிறேன்
என்று இராவணனிடம் கூறிவிட்டுப்
போருக்குக் கிளம்பினான் இந்திரசித்.
8458.
மாருதி அலங்கல் மாலை மணி அணி
வயிரத் தோள்மேல்
வீரனும், வாலி சேய்தன் விறல் கெழு
சிகரத் தோள்மேல்
ஆரியற்கு இளைய கோவும், ஏறினர்;
அமரர் வாழ்த்தி,
வேரி அம் பூவின் மாரி சொரிந்தனர்,
இடைவிடாமல்.
அனுமனின் மாலையும் மணியும் அணிந்த
தோள் மேல் இராமன் ஏற
வாலி மகன் அங்கதனின் சிகரம் போன்ற
தோள் மேல் இலக்குவன் ஏறிக்கொள்ள
தேவர்கள் அதைக் கண்டு வாழ்த்தினர்,
மலர்களை மழையாகப் பொழிந்தனர்.
8521.
ஆன்றவன் அது பகர்தலும், 'அறநிலை
வழா தாய்!
ஈன்ற அந்தணன் படைக்கலம் தொடுக்கில்,
இவ் உலகம்
மூன்றையும் சுடும்; ஒருவனால் முடிகலது'
என்றான்,
சான்றவன்; அது தவிர்ந்தனன், உணர்வுடைத்
தம்பி.
பிரம்மாத்திரத்தை எய்துகிறேன் என்று
இலக்குவன் சொல்ல,
'தருமத்தின் வழி தவறாதவனே,
பிரம்மாத்திரத்தை நீ ஏவினாய் எனில்,
இந்திரசித்தை மட்டும் கொல்லாது,
அது மூன்று உலகையும் சுட்டழிக்கும்
ஆற்றல் உள்ளது'
என்று அறிவுறுத்தினான் இராமன்;
நல்லுணர்வு நிறைந்த இலக்குவனும்
பிரம்மாத்திரத்தை ஏய்தாது தவிர்த்தான்.
8522.
மறைந்துபோய் நின்ற வஞ்சனும்,
அவருடைய மனத்தை
அறிந்து, தெய்வ வான் படைக்கலம்
தொடுப்பதற்கு அமைந்தான்,
'பிறிந்து போவதே கருமம், இப்பொழுது'
எனப் பெயர்ந்தான்;
செறிந்த தேவர்கள் ஆவலம் கொட்டினர்,
சிரித்தார்.
மேகத்தினிடையிலிருந்து போர் செய்த
வஞ்சகன் மேகநாதன்,
இராம இலக்குமணர் மனக்கருத்தை
அறிந்து கொண்டான்.
பிரம்மாத்திரத்தை தான் ஏவுதற்கு
தன்னைத் தயார்படுத்திக்கொண்டான்.
'இப்போதைக்கு இடம் பெயர்கிறேன்,
அதுவே நல்லது' என்று எண்ணி
மறைந்துகொண்டான்.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த
தேவர்கள் சிரித்தனர்.
8610.
இன்ன காலையின் இலக்குவன் மேனி
மேல் எய்தான்,
முன்னை நான்முகன் படைக்கலம்;
இமைப்பதன் முன்னம்,
பொன்னின் மால் வரைக் குரீஇ இனம்
மொய்ப்பது போல,
பன்னல் ஆம் தரம் அல்லன சுடர்க்
கணை பாய்ந்த.
இலக்குவன் அனுமனோடு
பேசிக்கொண்டிருக்கையில்
பிரம்மாத்திரத்தை இமைப்பொழுதில்
இந்திரசித் ஏவினான்.
பொன் மயமான மலை மீது
குருவிக்கூட்டங்கள் மொய்ப்பது போல
ஒளிமிக்க அம்புகள்
இலக்குவன் உடல் மீது பாய்ந்தன.
8612.
அனுமன், 'இந்திரன் வந்தவன் என்கொல்,
ஈது அமைந்தான்?
இனி என்? எற்றுவென் களிற்றினோடு
எடுத்து' என எழுந்தான்;
தனுவின் ஆயிரம் கோடி வெங் கடுங்
கணை தைக்க,
நினைவும் செய்கையும் மறந்துபோய்,
நெடு நிலம் சேர்ந்தான்.
வந்தவன் இந்திரனோ ?
இப்போது நான் என்ன செய்வேன் ?
என்று அனுமன் எண்ணினான்.
அவனை யானையோடு பிடித்துத்
தள்ளுவேன் என்று எழுந்தான்.
எழுந்தவன் உடம்பில் ஆயிரம் கோடி
அம்புகள் பாய தரையில் விழுந்தான்,
நினைவிழந்தான்.
( தொடரும் )
No comments:
Post a Comment