Sunday, April 12, 2020

கம்பராமாயணம் 93



6982.
மாருதி இன்னம் செல்லின், மற்று இவன்
   அன்றி வந்து
சாருநர் வலியோர் இல்லை என்பது சாரும்
   அன்றே;
ஆர், இனி ஏகத் தக்கார்? அங்கதன் அமையும்;
   ஒன்னார்
வீரமே விளைப்பரேனும், தீது இன்றி மீள
   வல்லான்.'

அனுமனே மீண்டும் சென்றால்
இவனைத் தவிர வந்து போவார் வேறு
யாருமில்லை என்று பகைவர் எண்ணலாம்,
எனவே ... வேறு யார் தூது செல்வார் ?
என்றெல்லோரும் சிந்திக்க,
'அங்கதனே பொருத்தமானவன்; பகைவர்
வீரங்காட்ட அவனிடம் வந்தாரே யாயினும்
தீங்கின்றி மீளும் வல்லமை உடையவன்'
என்று இராமன் கூறினான்.


6984.
'என் அவற்கு உரைப்பது?' என்ன,
   ' "ஏந்திழையாளை விட்டுத
தன் உயிர் பெறுதல் நன்றோ? அன்று
   எனின், தலைகள் பத்தும்
சின்னபின்னங்கள் செய்ய, செருக்களம்
   சேர்தல் நன்றோ?
சொன்னவை இரண்டின் ஒன்றே துணிக!"
   எனச் சொல்லிடு' என்றான்.

'அந்த இராவணனிடம் சென்று, நான் என்ன
உரைக்கட்டும்?' என்று அங்கதன் கேட்க,
'உயர்ந்த அணிகளையணிந்த சீதையை
சிறையிலிருந்து விடுதலை செய்து, உன்
உயிரை இழக்காதிருத்தல் நல்லதா?
இல்லை, உன் பத்துத் தலைகளும்,
என் அம்புகளால் கண்டதுண்டமாக்கப்பட்டு
போர்க்களத்தில் இறந்து  கிடப்பது நல்லதா?
இரண்டில் ஒன்றை நீயே சொல்லுக'
என்று இராவணனிடம் கூறிவருக என்றான்.


6997.
'இந்திரன் செம்மல், பண்டு, ஓர் இராவணன்
   என்பான் தன்னை
சுந்தரத் தோள்களோடும் வாலிடைத் தூங்கச் 
   சுற்றி, 
சிந்துரக் கிரிகள் தாவித் திரிந்தனன், தேவர் 
   உண்ண 
மந்தரப் பொருப்பால் வேலை கலக்கினான்,
 மைந்தன்' என்றான்.


(எதிரில் வந்து நின்ற அங்கதனை 'யார் நீ?'
என்று இராவணன் கேட்க)
'முன்பு இராவணன் என்று கூறப்படும் 
ஒருவனை,
தன் வாலில் தொங்குமாறு பிணித்து
யானைகள் வாழ்கின்ற மலைகள் 
தோறும் தாவித் திரிந்தவனும், 
தேவர்கள் அமுதம் உண்டு மகிழ, மந்தர 
மலையினால் கடலைக் கடைந்தவனும்,
இந்திரனின் புதல்வனும் ஆகிய 
வாலியின் மகன்' என்றான் அங்கதன். 



6998.
'உந்தை என் துணைவன் அன்றே? ஓங்கு 
   அறச் சான்றும் உண்டால்;
நிந்தனை இதன்மேல் உண்டோ, நீ அவன் 
   தூதன் ஆதல்?
தந்தனென் நினக்கு யானே வானரத் 
   தலைமை; தாழா
வந்தனை; நன்று செய்தாய், என்னுடை
   மைந்த!' என்றான்.

உன் தந்தை எனக்கு நண்பன் அல்லவா?
இதற்கு தரும சாட்சியும் இருக்கின்றதே;
நீ அந்த இராமனுக்குத் தூதனாகி வருதல், 
உன் தந்தையுடனான என் நட்புக்கு 
பழி தரும் செயல் இல்லையா ?
நானே, இப்போதே, வானரங்களின்
தலைமைப் பதவியை உனக்குத் தருகிறேன்;
தாமதமின்றி வந்து சேர்ந்தாய், 
நல்லதே செய்தாய்! எனதருமை மைந்தா !'
என்றான் இராவணன்.



7004.
'கூவி இன்று என்னை, நீ போய், " தன் குலம் 
   முழுதும் கொல்லும்
பாவியை, அமருக்கு அஞ்சி அரண் புக்குப்  
   பதுங்கினானை,
தேவியை விடுக! அன்றேல், செருக் களத்து 
   எதிர்ந்து, தன்கண்
ஆவியை விடுக!" என்றான், அருள் இனம்
   விடுகிலாதான்.

'இன்னும் உன்னிடம் கருணை நீங்காத 
இராமபிரான்;
இன்று என்னை அழைத்தான்,
தனது குலம் முழுவதையும் அழிக்கவுள்ள
பாவப்பட்டவனை, அதாவது உன்னை,
போரிடுதற்குப் பயந்து 
கோட்டைக்குள் புகுந்து பதுங்கி
ஒளிந்திருப்பவனை, அதாவது உன்னை,
ஒன்று - சீதையை உடனே விடு, 
அவ்வாறில்லையேல் 
போர்க்களத்தில் எதிர் நின்று உயிரை விடு
என்று சொல்லச் சொன்னான்'
என்று அங்கதன் இராமன் கூறியதை 
இராவணனிடம் சொன்னான்.


 ( தொடரும் )

No comments:

Post a Comment