Saturday, April 25, 2020

கம்பராமாயணம் 106



8626.
‘இறந்திலன்கொலாம் இராமன்?’ என்று
   இராவணன் இசைத்தான்;
‘துறந்து நீங்கினன்; அல்லனேல்,
   தம்பியைத் தொலைத்து,
சிறந்த நண்பரைக் கொன்று, தன்
   சேனையைச் சிதைக்க,
மறந்து நிற்குமோ, மற்று அவன் திறன்?’
   என்றான், மதலை.
 
(போர்க்கள நிகழ்ச்சிகளை இந்திரசித் கூற)
‘இராமன் இறக்கவில்லையோ?’  என்று 
இராவணன் கேட்டான்;
‘அவ்விராமன் போர்க்களத்தை விட்டு
எங்கேயோ சென்று விட்டான்; 
அவ்வாறு செல்லாதிருந்தால்,
அவன் தம்பியைக் கொன்று
அவன் நண்பர்களை எல்லாம் கொன்று
அவனுடைய சேனையையும் சிதைத்த அத்திரம்,
அவனை மட்டும் விட்டுவிடுமா ?'
என்று  மறுமொழி கூறினான்
மைந்தன் இந்திரசித்து.



8638.
பொருமினான், அகம்; பொங்கினான்; உயிர்
   முற்றும் புகைந்தான்;
குரு மணித் திரு மேனியும், மனம் எனக்
   குலைந்தான்;
தருமம் நின்று தன் கண் புடைத்து அலமர,
   சாய்ந்தான்;
உருமினால் இடியுண்டது ஓர் மராமரம் ஒத்தான்.

(தன் வழிபாடுகளை முடித்துவிட்டு
வந்த இராமன்)

இரத்த வெள்ளத்தில் கிடக்கும் தம்பியையும்
சேனைகளையும் கண்டு மனம் வருந்தினான்;
கோபம் மிகுந்திடக் கண்டான்; 
நீலமணி போன்ற அழகிய உடலும்
உள்ளம் போல நடுங்கக் கண்டான்;
அறக்கடவுள் இராமனின் துன்ப நிலை
கண்டு இரங்கி  தன் கண்களில் அடித்துக்
கொண்டு வருந்த,
இராமன் நிலத்தில் சாய்ந்தான்;
இடியினால்  தாக்கப்பட்டதொரு மராமரத்தை
ஒத்துத் தரையில் வீழ்ந்தான்.



சீதை களம் காண் படலம்


8672.
அந்த நெறியை அவர் செய்ய,
     அரக்கன் மருத்தன்தனைக் கூவி,
‘முந்த நீ போய், அரக்கர் உடல்
     முழுதும் கடலில் முடுக்கிடு; நின்
சிந்தை ஒழியப் பிறர் அறியின்,
     சிரமும் வரமும் சிந்துவென்’ என்று
உந்த, அவன் போய் அரக்கர் உடல்
     அடங்கக் கடலினுள் இட்டான்.

வெற்றியைக் கொண்டாடுங்கள் என்று
இராவணன்  இட்ட பணியில்
ஒரு சாரார் ஈடுபட, இதனிடையில்
மருத்தன் என்னும் அரக்கனை அழைத்தான்;
"முதலில் நீ சென்று, இறந்து  கிடக்கும் 
அரக்க உடல்கள் அனைத்தையும் கடலில் வீசு";
இந்த விசயத்தை வேறு யாரேனும் அறிந்தால்
உன் தலை, தவப்பயன் அனைத்தையும்
அழித்து விடுவேன்' என்று கூறி அனுப்பினான்;
அந்த மருத்தனும் சென்று அரக்கர் உடல்
முழுவதையும் கடலில் போட்டான்.


8673.
‘தெய்வ மானத்திடை ஏற்றி
   மனிசர்க்கு உற்ற செயல் எல்லாம்
தய்யல் காணக் காட்டுமின்கள்;
   கண்டால் அன்றி, தனது உள்ளத்து
அய்யம் நீங்காள்’ என்று உரைக்க,
   அரக்கர் மகளிர் இரைத்து ஈண்டி,
உய்யும் உணர்வு நீத்தாளை நெடும்
   போர்க் களத்தின்மிசை உய்த்தார்.

இராவணன் சீதைக்குக் காவலாய்
இருக்கும் அரக்கியரை அழைத்தான்;
'சீதையைத் தெய்வத்தன்மையை
உடைய புட்பக விமானத்தில் ஏற்றி,
இராம இலக்குமனர்க்கு நேர்ந்த கதியை
காட்டுங்கள்;
தன் கண்ணால் காணாது ஐயப்பாடு 
நீங்காள்' என்று கூறினான்;
அரக்கியர்கள் ஆரவாரித்தனர்;
இவ்வுலகில் வாழ ஆசையற்ற  சீதையை
போர்க்களத்துக்கு வான் வழியே
அழைத்துச் சென்றார்கள்,



8679.
விழுந்தாள்; புரண்டாள்; உடல் முழுதும்
     வியர்த்தாள்; அயர்த்தாள்; வெதும்பினாள்;
எழுந்தாள்; இருந்தாள்; தளிர்க் கரத்தை
     நெரித்தாள்; சிரித்தாள்; ஏங்கினாள்;
‘கொழுந்தா!’ என்றாள்; ‘அயோத்தியர்தம்
     கோவே!’ என்றாள்; ‘எவ் உலகும்
தொழும் தாள் அரசேயோ!’ என்றாள்;
     சோர்ந்தாள்; அரற்றத் தொடங்கினாள்;

விழுந்தாள்; புரண்டாள், உடல் முழுதும்
வியர்த்தாள்; பெருமூச்சு விட்டாள், மனம்
வெதும்பினாள்; எழுந்தாள், உடனே அமர்ந்தாள்;
தனது கரங்களை நெரித்துக் கொண்டாள்,
தன் நிலையை எண்ணிச் சிரித்தாள்,
ஏங்கினாள்;  இலக்குவனைப்  பார்த்துக்
‘கொழுந்தா!’ என்று கூவினாள்; இராமனைப்
பார்த்து, ‘அயோத்தி நகரத்தவரின்  அரசே!’ 
என்றாள். ‘எவ்வுலகத்தவரும் வந்து
தொழுதற்குரிய திருவடிகளையுடைய அரசே!’ 
என்று அழைத்தாள்; சோர்ந்தாள்,  பின்பு வாய்
திறந்து பல சொல்லி அரற்றத் தொடங்கினாள்!


8695.
ஆழியான் ஆக்கைதன்னில் அம்பு 
   ஒன்றும் உறுகிலாமை,
ஏழை! நீ காண்டி அன்றே? இளையவன் 
   வதனம் இன்னும்
ஊழி நாள் இரவி என்ன ஒளிர்கின்றது; 
   உயிருக்கு இன்னல்
வாழியார்க்கு இல்லை; வாளா மயங்கலை-
   மண்ணில் வந்தாய்!

பூமியிலிருந்து தோன்றியவளே!  
சக்கரப்படைக்கு உரியவனாகிய இராமனது
உடம்பில் அம்பு ஒன்றும் அழுந்தவில்லை 
என்பதை மென்மையான உள்ளமுடைய நீ 
காண்கிறாயல்லவோ?
அம்புபட்டிருந்தாலும், இலக்குவனின் முகம்
இன்னமும் ஊழி இறுதியில் தோன்றும் 
சூரியன் போல ஒளி வீசிக் கொண்டிருக்கிறது; 
எனவே நிறைய நாள் வாழப்போகும் 
அவ்விருவர்க்கும் உயிருக்கு அழிவில்லை; 
அவர்கள் இறந்தார்கள் என்று வீணாக நீயே 
நினைத்துக்கொள்ளாதே !' என்று திரிசடை 
சீதைக்கு ஆறுதல் கூறினாள்.



( தொடரும் )


No comments:

Post a Comment