Tuesday, April 14, 2020

கம்பராமாயணம் 95



7124.
ஆங்கு, அவன் அமர்த் தொழிற்கு
   அணுகினான் என,
'வாங்கினென், சீதையை' என்னும்
   வன்மையால்,
தீங்குறு பிரிவினால் தேய்ந்த தேய்வு அற
வீங்கின, இராகவன் வீரத் தோள்களே.

இராவணன் போரிட வருகிறான்
என்ற செய்தி கேட்டான் இராமன்.
சீதையைத் திரும்ப என்று உறுதியாக
எண்ணினான்.
துயர்மிக்க, அவள் பிரிவினால்
மெலிந்த தேகம் மறைய
வீரத் தோள்கள்  வீங்க
இராமனும் போர்க்களம் கிளம்பினான்.



7153.
'யார் இது செய்யகிற்பார்?' என்று கொண்டு 
   இமையோர் ஏத்த,
மாருதி, பின்னும், அங்கு ஓர் மராமரம் 
   கையின் வாங்கி, 
வேரொடும் சுழற்றி விட்டான்; விடுதலும், 
   இலங்கை வேந்தன் 
சாரதி தலையைத் தள்ளிச் சென்றது, நிருதர் 
   சாய. 

(இராவணன் எய்தியக் கணைகளை 
அனுமன் தாங்கி நின்ற அருமையைக் கண்டு) 
 
'இத்தகைய செயலை வேறு யார் செய்ய வல்லார்?'
என்று உரைத்து போற்றிப் புகழ,
அனுமன், அவ்விடத்தே இருந்த ஒரு மராமரத்தை 
வேரொடும்  பெயர்த்து சுழற்றி வீச, 
அது இலங்கை  வேந்தனின் தேர்ப்பாகன் 
தலையைத் துண்டிக்க, கூடவே 
வேறு சில அரக்கர்களையும் அழித்து பின்  
வீழ்ந்தது.


7166.
தேர் எலாம் துமிந்த; மாவின் திறம் எலாம் 
   துமிந்த;  செங் கண்
கார் எலாம் துமிந்த; வீரர் கழல் எலாம் 
   துமிந்த; கண்டத்
தார் எலாம் துமிந்த; நின்ற தனு எலாம் 
   துமிந்த; தம்தம்
போர் எலாம் துமிந்த; கொண்ட புகழ் எலாம் 
   துமிந்து போய.

(வில்லேந்தி, இலக்குவன் போர் புரிய)
அரக்க சேனையில் தேர்கள் எல்லாம் 
துண்டாயின,
குதிரைகளின் திறமையெல்லாம் 
தோற்கடிக்கப்பட்டன, 
சிவந்த  கண்களையுடைய கரிய நிறமுடைய 
யானைகள் எல்லாம் தோற்றுப்போயின,
அரக்க வீரர்களின் வீரக்கழல்கள் 
துண்டாயின,
கழுத்தில்  அணிந்திருந்த மாலைகள் 
அறுந்துபோயின,
கைகளில் ஏந்தி  நின்ற விற்கள் எல்லாம் 
உடைந்துபோயின,
அவர்களுடைய போர் ஆற்றல் 
தோற்கடிக்கப்பட்டன 
இதுநாள் வரை அவர்கள் ஈட்டி வைத்திருந்த  
புகழ்கள் எல்லாம் துண்டு துண்டாகச் 
சிதறிப் போயின.


7221.
'வில்லினால் இவன் வெலப்படான்' எனச் 
   சினம் வீங்க,
'கொல்லும் நாளும் இன்று இது' எனச் 
   சிந்தையில் கொண்டான்,
பல்லினால் இதழ் அதுக்கினன்; பரு வலிக் 
   கரத்தால் 
எல்லின் நான்முகன் கொடுத்தது ஓர் வேல் 
   எடுத்து எறிந்தான்.

 
'இலக்குவனை வில்லால் வெல்ல முடியாது' 
என்பதை உணர்ந்தான் இராவணன்.
கோபம் தலைக்கேற நின்றான். 
'இவனைக் கொல்ல வேண்டிய நாளும் 
இன்றே'  என்ற முடிவுக்கு வந்தான்.
பற்களால் உதடுகளைக் கடித்தான்.
வலிய பெரிய கரத்தில், பிரம்மன் தந்த 
ஒளியொடு கூடிய வேல் எடுத்து வீசினான்.

( தொடரும் )

No comments:

Post a Comment