கிட்கிந்தைப் படலம்
4269.
அன்ன காலம்
அகலும் அளவினில்
முன்னை வீரன்
இளவலை, 'மொய்ம்பினோய்!
சொன்ன எல்லையின்
ஊங்கினும் தூங்கிய
மன்னன் வந்திலன்;
என் செய்தவாறுஅரோ ?
கூதிர்^காலம் முடியும் தருவாயில்,
மூத்தவன் வீரன் இராமன் தம்பியை நோக்கி
'வலிமையானவனே,
தவணைக் காலம் நான்கு மாதம் கழிந்தது,
சுக்ரீவனால் தாமதம் ஆகிறது,
அவன் சொன்னபடி இங்கு வரவில்லை,
என்ன செய்கிறானோ தெரியவில்லை'
என்று வருத்தத்தோடு பேசினான்.
^ - ஐப்பசி, கார்த்திகை
4272.
'வெம்பு கண்டகர் விண்
புக வேர் அறுத்து
இம்பர் நல் ஆறாம்
செய்ய எடுத்த விற்
கொம்பும் உண்டு; அருங்
கூற்றமும் உண்டு; உங்கள்
அம்பும் உண்டு' என்று
சொல்லு, நம் ஆணையே.
'கொடியவர்கள் அழித்து
நல் அறத்தை நிலைநிறுத்தும் பொருட்டு,
கையிலேந்திய வில் இருக்கு என்று சொல்;
எமன் அருகிலேயே இருக்கிறான் என்று சொல்;
வாலியைக் கொன்ற,
வானரங்களைக் கொல்லக்கூடிய
அம்பும் இன்னும் இருக்கு என்று சொல்;
இது என் ஆணை என்றும் சொல்'
என்று சொல்லி இலக்குவனை அனுப்பினான்.
(கோபத்தோடு வந்தான் இலக்குவன்
பயந்து போயினர் வானரங்கள்
குடி மயக்கத்தில் கிடந்தான் சுக்ரீவன்
அங்கதன் அனுமான் தாரையிடம் ஓடினர்
நல்வார்த்தை பல பேசி, தாரை
சாந்தப்படுத்தினாள் இலக்குவனை,
'நீயும் மறந்தனையோ ?' என்று
இலக்குவன் அனுமானைக் கேட்க)
4333.
'மறந்திலன் கவியின் வேந்தன்;
வயப் படை வருவிப்பாரைத்
திறம் திறம் ஏவி, அன்னார்
சேர்வது பார்த்துத் தாழ்த்தான்;
அறம் துணை நுமக்கு உற்றான் தன்
வாய்மையை அழிக்கும் ஆயின்
பிறந்திலன் அன்றோ? ஒன்றோ?
நரகமும் பிழைப்பது அன்றால்.
மறக்கவில்லை மந்திகளின் மன்னன்.
வலிமையான வானரப்படைகளை
அழைத்து வர தூதுவர்களை
பல திக்கிலும் அனுப்பியுள்ளான்.
அவர்கள் வந்து சேர காலதாமதம்
ஆவதை எண்ணி வருந்துகிறான்.
தரும சிந்தனை நிறைந்த தங்களைத்
துணையாகக் கொண்ட சுக்ரீவன்,
சத்தியத்தை மறந்துபோனால்
இவ்வுலகத்தில் பிறவாதவனாவான்.
அது மட்டுமா ?
நரகத்திலிருந்து தப்பவும் முடியுமா ?'
என்று அனுமான் சொன்னான்.
4342.
'தாழ்வித்தீர் அல்லர்; பல்
நாள் துருக்கிய அரக்கர்தம்மை
வாழ்வித்தீர்; இமையோர்க்கு இன்னல்
வருவித்தீர்; மரபின் தீராக்
கேள்வித் தீயாளர் துன்பம்
கிளர்வித்தீர்; பாவம்தன்னை
மூள்வித்தீர்; முனியாதானை முனிவித்தீர்
முடிவின்' என்றான்.
'கால தாமதம் மட்டுமா செய்தீர்கள்,
அரக்கர்களின் வாழ்நாளை வளர்த்துள்ளீர்கள்,
அதனால் தேவர்கள் துன்பம் அடையச் செய்துள்ளீர்கள்,
வேள்வி செய்யும் முனிவர்கள் வருத்தத்தை
மிகுதியாக்கியுள்ளீர்கள்;
பாவங்கள் இன்னும் வளர துணை புரிந்துள்ளீர்கள்;
முடிவாக, கோபமே கொள்ளாத இராமனை
கோபமடைய வைத்துள்ளீர்கள்'
என்று இலக்குவன் உரைத்தான்.
4386.
'போயின தூதரின் புகுதும் சேனையை
நீ உடன் கொணருதி, நெறி வலோய்!' என
ஏயினன் அனுமனை, 'இருத்தி ஈண்டு' எனா
நாயகன் இருந்துழிக் கடிது நண்ணினான்.
'சென்றுள்ள தூதுவர்கள் கொண்டு வரும் சேனையை
உன்னோடு அழைத்து வா - நீதி நெறியில் வல்லவா!
அதுவரை நீ இங்கேயே இரு'
என்று அனுமானிடம் கூறினான்.
தலைவன் இராமன் தங்கியிருந்த இடத்திற்கு
சுக்ரீவன் விரைந்தான்.
( தொடரும் )
No comments:
Post a Comment